முரம்பு – 10

முருகனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இந்த இரவு தூங்காமலேயே கரைந்துகொண்டிருந்தது. கொட்டாயின் நெடுங்காலில் சாய்ந்துகொண்டு தன் மடியில் அவனைத் தூங்கவைத்து வலியோடு உட்கார்ந்திருந்த பூரணியம்மா, வாசப்படியோரம் சுவரில் சாய்ந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் சிலைபோல் இருந்த முத்துசாமிக் கவுண்டரை அதிகாலை நான்கரை மணியிருக்கும் கூப்பிட்டார்.

”ஏந்தே…’’

நடந்ததை நினைத்துக்கொண்டும் நடுநடுவில் வெளியே பூச்சிப்பொட்டு போடும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டும் வாசப்படி வழியாக தெரிந்த இருள்வெளியைப் பார்த்துக்கொண்டும் இருந்த கவுண்டர், சட்டென்று பூரணியம்மாவின் குரல் கேட்டு நினைவு வந்தவராய் மெல்ல தலையைத் திருப்பி உள்ளே நடுகொட்டாய்க்குள் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார்.

”நானு ஒண்ணு சொல்வன், கேப்பீங்களா…?’’

ராந்தல் வெளிச்சத்தில் லேசாகத் தெரிந்த கவுண்டரின் முகத்தைப் பார்த்து பூரணியம்மா கேட்டார்.

உடனே என்ன ஏதென எதுவும் கேட்காமல், ”சொல்லு பூர்ணி… கேக்கறன்’’ என்றார், வேகமாகத் தலையாட்டி கவுண்டர்.

எதையோ சொல்ல வாயெடுத்தவர் சட்டென நிறுத்திவிட்டு, சில நொடி யோசனைக்குப் பின் சொன்னார்.

”நாம வூரவுட்டு நம்ம புள்ளய பொதச்ச இங்கியே குடுத்தனம் வந்துரலாமா தே…?’’

பூரணியம்மா திடீரென இப்படிக் கேட்டது கவுண்டருக்கு அதிர்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்னமே இதுபற்றி கவுண்டர் யோசித்திருக்கிறார். அதோடு, பின்னாளில் தன் முரம்பு நிலத்தை மையமாக வைத்து ஊர் ஒன்று புதிதாக உருவாகப்போகிறது. அது பின்னாளில் அப்பெயர் கொண்டே அழைக்கப்படப்போகிறது. ஊரின் முகமாகவும் வாசலாகவும் மாறப்போகிறது என்று நினைத்திருந்தார்.

என்றபோதும் அதை யாரிடமும் பெரிதாகச் சொல்லவில்லை. ஆற்று வெள்ளத்தில் வீட்டை பறிகொடுத்தவர்கள் தன் மேட்டு நிலத்தில் கூட்டமாக வந்து வீடுகட்டி குடியேறியதும், தான் நினைத்தது கண்முன் நிஜமாவதைக் கண்டார். அதனால் அதன் தொடர்ச்சியாக இப்போது பூரணியம்மா கேட்டது அவருக்கு அதிர்ச்சி தருவதற்கு பதிலாக மகிழ்ச்சியைத் தந்ததில் எந்தவித வியப்பும் இல்லை.

கவுண்டரின் பதிலுக்காகக் காத்திருந்த பூரணியம்மா, ”இந்த கொட்டாவயே வூடாக்கினு வந்துட்டம்னா… தெனக்கியும் போயி நானு எம்புள்ளய பாப்பன் தே…’’ என்றார்.

பூரணியம்மா சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய கவுண்டர், ”செரி பூர்ணி… நீ சொன்னமாரியே வந்துரலாம்’’ என்றார்.

ஊர் அல்லாகோயிலில் அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு அஜ்ஜான் கூவும் சத்தம் கேட்டது. எழுந்த கவுண்டர், அடுப்புத் திட்டு மேல் கவிழ்த்து வைத்திருந்த சின்ன அடுக்குச் சட்டியை எடுத்துக் கொண்டு நெடுங்காலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பூரணியம்மாவையும், அவர் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த முருகனையும் பார்த்துவிட்டு வெளியில் வந்தார்.

வானம் வெளுத்து இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலரப் போவது தெரிந்தது. மெல்ல நடந்து பக்கத்திலுள்ள கட்டுத்தெருவுக்குப் போய், வாசப்படியில் உட்கார்ந்திருந்த செவடனிடம் உள்ளே கட்டியிருந்த கன்னுக்குட்டியை அவிழ்த்து வரும்படி சொல்லிவிட்டு, பக்கத்தில் சுவரோரமாகப் படுத்திருந்த கருப்பு மாட்டிடம் போனார்.

கவுண்டர் நடந்துவரும் காலடி ஓசையைக் கேட்ட மாடு, அவர் பக்கத்தில் போகும் முன்னமே எழுந்து நின்று பார்த்தது.

கொண்டுபோன அடுக்குச் சட்டியைப் பக்கத்தில் இருந்த கல்லின்மேல் வைத்துவிட்டு, அருகில் போய் மாட்டின் கன்னம், கழுத்து, தோள்பட்டை, வயிறு எங்கும் தடவிக்கொடுத்தார். பதிலுக்கு கவுண்டரின் கையில் நக்கிவிட்டது.

செவடன் பிடித்து வந்த கன்னுக்குட்டியை செத்தநேரம் பால் குடிக்கவிட்டு பிடித்துப் போய் கட்டச் சொன்ன கவுண்டர், கல்மேல் வைத்திருந்த அடுக்குச் சட்டியில் பால் கறந்துகொண்டு கட்டுத்தெருவுக்குள் பேராமுட்டா கிழவியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்வியைக் கூப்பிட்டு, ”இந்தாம்மா செல்வி… இந்த பால எடுத்துனு போயி, அடுப்பமூட்டி காயவச்சி எல்லாத்துக்கும் வூத்திக்கொடு… செத்த நேரத்துல வந்துர்றன்…’’ என சொல்லி தந்துவிட்டு, தெக்கால பக்கமாக இறங்கி நடந்து போனார்.

கவுண்டர் எங்கே போகிறார் என செவடனுக்கு தெரிந்துவிட்டது. அதனால் அவர் சென்றதும் கொஞ்சநேரம் கழித்து தானும் போகலாம் என நினைத்தான்.

தன் இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு, குட்டைக் கிணறு தாண்டி சித்தோடை கடந்து வேடியப்பன் கோயில் வழியாக ஓடையில் இறங்கி ஏறி சோமாசம் பாறைக்குப் போன கவுண்டர், படிசுனை அருகிலுள்ள தன் விருப்பப் பாறையில் போய் உட்கார்ந்துகொண்டு, முன்தினம் மதியம் வீட்டிலிருந்து பொங்கல் வைக்கக் கிளம்பியது முதல் காலையில் பூரணியம்மா தன்னிடம் கேட்டது வரை ஒவ்வொன்றாகத் தன் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தார்.

‘யாரு எவுருன்னு பாக்காம எல்லாத்துக்கும் நல்லதுதான நெனச்சம். ஏன்தான் நமுக்கு மட்டும் இப்டிலாம் நடக்குதோ…?’ என தன்னைத்தானே உள்குரலில் கவுண்டர் கேட்டுக்கொண்டார்.

கூடவே, ‘பாவம் பூரணி… இந்த வாட்டியும் பையன்தான் பொறப்பான்… அவன இந்த சந்தரகாலி பொடவிலதான் யானகட்டி போடணும்னு ஆசப்பட்டு… தானிப்பாடி சந்தயில பாத்துப் பாத்து வாங்கியாந்தா… கடசில அவன் பொணத்த அதல போட்டு தூக்கினு போறமாரி ஆச்சு… அத நெனச்சி அவ மனசு எம்மாம் பாடுபட்ருக்குமோ…?’

‘கண்ணு முன்னால செத்துப்போன புள்ளய தூக்கிவச்சி… பால் குடுப்பாட்டுனத பாத்த புள்ளிங்க எப்டிலாம் துடிச்சிருப்பாங்களோ…?’

‘மூச்சி பேச்சில்லாமக் கெடந்த தாயயும் புள்ளயயும் காபுந்து பண்ண பேராமுட்டா கெழ்வி எம்மாம் பாடுபட்டா… கடசில புள்ளய காபுந்து பண்ணமுடியாமப் போச்சேன்னு உள்ளார எம்மாம் வெசனப்பட்டிருப்பாளோ…?’

இப்படி இன்னும் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்.

முரம்புக் கொல்லி கொட்டாயில் உட்கார்ந்து, தன் மடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த முருகனின் தலையை கோதிக்கொண்டு நான்கு நாட்களுக்கு முன்னால் ஆற்றுக்கு துணி துவைக்கப் போயிருந்த சம்பவத்தைத் தன்னுள் நினைத்துப்பார்த்தார் பூரணியம்மா.

அதுவும் அன்று மதியம் கொடிக்கையிலிருந்த அழுக்குத் துணிகளை எடுத்து அன்னக்கூடையில் போட்டு தூக்கிக்கொண்டு எதிர்வீட்டு ஆட்டுக்காரம்மாவோடு துணி துவைக்க பூரணியம்மா ஆத்துக்குப் போவதைப் பார்த்துவிட்டு, கோயில் மரத்தடியில் பருவாரத்தோடு கோட்டி விளையாடிக்கொண்டிருந்த முருகன் ஓடிவந்து தானும் கூட வருவதாகச் சொல்லி அடம்பிடிக்க, ”செரி, வா…” என அவரும் கூட்டிக்கொண்டு போனார்.

தன் புடவையையும் ரவிக்கையையும் அவிழ்த்து, பாவாடையை மாராப்பு மேலே தூக்கிக் கட்டிக்கொண்டவர்… அங்கிருந்த பலவக் கல்மேல் கொண்டுபோயிருந்த துணிகளையெல்லாம் நனைத்துக் கும்மி அலசிப் பிழிந்து, எடுத்துப்போய் பக்கத்திலிருந்த மணல் மேட்டில் வரிசையாகக் காயவைத்து, காற்றில் பறக்காமல் இருக்க சிறுசிறு கூழாங்கல் எடுத்து அவற்றின் மீது வைத்துவிட்டு வந்து, முருகனை முட்டிமூட்டு தண்ணீரில் கை பிடித்து நடக்கவைத்து கூட்டிப்போய் நிப்பாட்டி குளிப்பாட்டினார்.

துள்ளிக்குதித்து தண்ணீரில் ஆட்டம்போட்ட முருகன் என்ன நினைத்தானோ, சட்டென தன் அம்மாவின் வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ”எம்மா எம்மா… இம்மாம் பெருசா ஒன் வவுறு கீதே… ஒனுக்கு வலிக்காதாம்மா…?’’ என்று கேட்டான்.

அதைக் கேட்ட பூரணியம்மாவுக்கு சிரிப்புதான் வந்தது. பக்கத்திலிருந்த ஆட்டுக்காரம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டு முருகனிடம், ”போடா மடயா… புள்ளய சொமக்றது போயி எந்த தாய்க்காரிக்குடா வலிக்கும்…’’ என்றார்.

உடனே முருகன் கேட்டான், ”நானும் ஒனுக்கு புள்ளதானம்மா…? இப்ப என்ன தூக்கனன்னா ஒனுக்கு வலிக்குந்தான…? அப்ப அதுமாரி வவுத்துள்ளார கீற நம்ம தம்பிய தூக்கனா ஒனுக்கு வலிக்காதா…?’’.

மகனின் கேள்வியைக் கேட்டு வியந்து கீழே குனிந்து அவன் முகத்தைப் பார்த்த பூரணியம்மா, ”எனுக்கு மட்டுல்ல சாமி… ஒலகத்துல கீற எந்த தாய்காரிக்கும்… தான் வவுத்துல கீற புள்ளய சொமக்க வலிக்காது, பாத்துக்க…’’ என்றார்.

பக்கத்தில் வந்து வயிற்றை தொட்டுப் பார்த்துவிட்டு காதை வைத்து கேட்ட முருகன், ”வுள்ளார கீற தம்பி எப்பம்மா என்கிட்ட பேசுவான்…?’’ என்று கேட்டான்.

சற்று தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த ஆட்டுக்காரம்மா முருகனை பார்த்து, ”ஏன்டா முருகா… ஒன் அம்மாக்காரி வவுத்துல தம்பிதான் கீறான்னு ஒனுக்கு எப்டிடா தெரியும்…?’’ என்று கேட்டார்.

உடனே முருகன், ”எனுக்கு தம்பிதான் வேணும்னு எங்க அம்மாக்கிட்ட கேட்டன்… அவுங்கதான் சொன்னாங்க தம்பிதான் வுள்ளார கீறான்னு…’’ என்றான்.

கேட்டு சிரித்த பூரணியம்மா, ”தம்பிதான… பொங்குலு கய்ச்சி ஒன்கூட பேசுவான்… அப்றம் தெனக்யும் வெளாடுவான், சரியா…? இப்ப போயி கரமேல டவுசரு மாட்டினு நில்லு… அம்மா மஞ்சா தேச்சி குளிச்சிட்டு வந்துட்றன்…’’ என்று சொல்லி அவனைக் கூட்டிவந்து கரையில் விட்டுவிட்டு, கரையோரம் வைத்திருந்த மஞ்சக் கட்டியை எடுத்து அங்கிருந்த பலவக் கல்லில் தேய்த்து இரு கையிலும் தடவிக்கொண்டு, தன் முகம் கழுத்து மார்பு கை கால் எங்கும் பூசிவிட்டு, நீருக்குள் இறங்கிபோய் தலை மூழ்கி குளித்துவிட்டு கரைக்கு வந்தார்.

தன் அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த முருகன் அவர் கரைக்கு வந்ததும், ”எம்மா எம்மா… ஒன் வவுத்துல கீறான்ல தம்பி… அவன் வவுத்துள்ளார வந்ததும் ஒனுக்கு எப்டிம்மா இருந்ச்சி…?’’ என்று கேட்டான்.

முருகனின் கேள்வியால் மகிழ்ந்த பூரணியம்மா, ”இங்க வா, சொல்றன்’’ என பக்கத்தில் கூப்பிட்டு, அங்கிருந்த பலவக் கல்மேல் அவனை உட்காரவைத்து, கீழே பக்கத்தில் மணலில் தான் உட்கார்ந்து தன் இரு கால்களையும் நீருக்குள் நீட்டிக்கொண்டு சொன்னார்.

”தம்பி தோ, இந்த வவுத்துக்குள்ளார கீறான்ல… அவன் வந்த மொத மாசம் என் ஒடம்புலாம் அப்டியே பூரிச்சிச்சி. ரண்டாது மாசம் இடுப்பு கொஞ்ச கொஞ்சமா பெருசாவ ஆரம்பிச்சி, மூணாது மாசம் மொகம்லாம் வெளுத்துச்சி. நாளாது மாசம் மயக்க மயக்கமா வந்து, அஞ்சாது மாசம் பொருளுங்கள தேட வச்சிச்சி. ஆறாது மாசம் அடிவவுறு கனமாயி, ஏழாது மாசம் நாக்குக்கு ருசியா தின்னச் சொல்லிச்சி. எட்டாது மாசம் ஏந்திரிக்க முடியாம ஆக்கி, ஒன்பதாது மாசம் சோறு தண்ணிய மறக்கடிச்சிடிச்சி. கடசியா தோ, இந்த பத்தாது மாசத்துல… மறுஜென்மத்த எடுக்க வக்கப்போது. போருமா…?’’ என்று சொல்லி முருகனின் தலைமுடியைக் களைத்துவிட்டு, தன் இரு கண்களையும் நொடிநேரம் மூடி உதடுகுவித்து மெல்ல சிரித்தார் பூரணியம்மா.

தன்னுள் இதை நினைத்துக்கொண்டு மெல்ல உதடசைத்துச் சிரித்து, கொட்டாயின் மூலையில் கவிழ்த்து வைத்திருந்த அன்னக்கூடையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த பூரணியம்மாவின் பக்கத்தில் காய்ச்சிய பாலை எடுத்துவந்து அமர்ந்த செல்வி தாழ்ந்த குரலில், ”ம்மா… ம்ம்மா…’’ என்று கூப்பிட்டாள்.

எங்கோ தூரத்திலிருந்து தன் மகள் செல்வி தன்னை கூப்பிடுவதுபோல் கேட்டது பூரணியம்மாவுக்கு. மெல்ல திரும்பிப் பார்த்தார். தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் தூக்கிப்போட்டது அவருக்கு.

பூரணியம்மாவுக்கு சட்டென தூக்கிப்போட்டதையும், அழுது வீங்கிப்போன அவர் முகத்தையும், இரவெல்லாம் தூங்காமல் சிவந்துபோயிருந்த கண்களையும், குழந்தை பெற்று தோய்ந்துபோயிருக்கும் உடலையும் பார்த்த செல்வி, ”இந்தாம்மா… இந்த பாலக் குடி…’’ என்று கையில் வைத்திருந்த ரோட்டா சொம்பை நீட்டினாள்.

உதடையும் தலையையும் ஒருசேர அசைத்து மெல்லிய குரலில், ”எனுக்கு வேணாந் தாயி’’ என்றார்.

”இல்லம்மா… நீ கொஞ்சமாது குடி. அப்பதான் எல்லாரும் குடிப்பாங்க…’’

செல்வி சொன்னதைக் கேட்டு, ‘சரி’ என தலையாட்டிவிட்டு கைநீட்டி வாங்கிக்கொண்டார்.

கிழக்கே தொண்டானூர் மலைக்குப் பின்னாலிருந்து எழுந்து வந்த சூரியனின் துளிரொளி பாறைமேல் உட்கார்ந்திருந்த கவுண்டரின் முகத்தில் பட்டது. மெல்ல திரும்பி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மேலே அண்ணாந்து பார்த்தார். ஏழெட்டு தண்ணிக் கோழிகள் சத்தமின்றி தலைமேல் வரிசையாகக் கோடு கிழித்ததுபோல் பறந்துபோயின. கீழே குனிந்து பக்கத்திலிருந்த நிறைந்து வழியும் படிசுனையைப் பார்த்தவருக்கு, சற்று தள்ளி கிழக்கில் யாரோ வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு சிறு புள்ளிபோல் நாவல்மர கொல்லியோர வண்டிப்பட்டையில் நடந்து வருவது தெரிந்தது.

வேகமாக எழுந்து அவிழ்ந்து வந்த சோமத்தை அவிழ்த்து நன்றாகக் கட்டிக்கொண்டு போய் படிசுனையில் முகம் கை கால் கழுவிக்கொண்ட கவுண்டர், தோள்மேல் போட்டிருந்த துண்டை எடுத்து மெல்ல முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்தார்.

”என்னய்யா காலிலயே சோமாசம் பாறிக்கி…?’’

குரல் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தார். மென் சிரிப்போடு பாலு செட்டியார் கையில் குடை ஒன்று வைத்துக்கொண்டு நின்றிருந்தார்.

பக்கத்து கொல்லிக்காரர். தினந்தோறும் காலையில் விடிவதற்கு முன்னமே எழுந்து பொடிநடையாக நடந்து ஊரிலிருந்து கொல்லிக்கி வந்துவிடுபவர். பயிர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. ஊரில் அதிகம் படித்த மூவரில் ஒருவர். எட்டாம் வகுப்புவரை படித்தவர். கவுண்டரின் மேல் நன்மதிப்பும் மரியாதையும் கொண்டவர். யாவற்றுக்கும் மேலாக தன் தந்தை ஸ்தானத்தில் அவரை வைத்துப் பார்ப்பவர்.

மெல்ல உதடசைத்து சிரித்தார் கவுண்டர்.

எப்போதும் கலகலவென ஏதாவது பேசுபவர் எதுவும் பேசாமல் நிற்பதையும், என்றும் இல்லாமல் இன்று, அதுவும் இவ்வளவு காலையில் வந்து இங்கே இருப்பதையும், இரவெல்லாம் தூங்காதவர் போல் இரு கண்களும் சிவந்திருப்பதையும், முகம் லேசாக வீங்கியிருப்பதையும் பார்த்த பாலு செட்டியாருக்கு, ஏதோ நடக்கக் கூடாத ஒன்று நடந்திருப்பது தெரிந்தது. ‘சரி, இப்ப எதுவும் கேட்டு தொந்துரவு பண்ணவேணாம்’ என நினைத்துக்கொண்டு, ”செரிய்யா… நானு கொல்லி வரிக்கும் போயி வர்றன்’’ என்று சொல்லிவிட்டு தெற்குப் பக்கமாகக் கீழே இறங்கிப் போகும் வழியில் நடந்தார்.

பாலு செட்டியார், தன் இடது காலை ஒருபக்கமாக தாங்கித் தாங்கி வைத்து நடந்து போவதை பார்த்த கவுண்டர், ”ஏன்ப்பா பாலு… என்ன பீச கால தாங்கி தாங்கி வச்சி நடக்குற…?’’ என்று கேட்டார்.

கவுண்டரின் குரல் கேட்டு சட்டென நின்று திரும்பி மெதுவாகத் தன் இடது காலை கீழே வைத்துப் பார்த்த செட்டியார், ”அது ஒண்ணுல்லய்யா… முந்தாநேத்து காலில கொல்லிக்கு வரும்போது, வளயகாரமூட்டு ஓடயாண்ட பீவேல முள்ளு பொத்துருச்சு… சட்டுனு எடுத்துட்டன். ரவ ஒடச்சினு உள்ளயே நின்னுட்ருக்கும் போல… அதான்’’ என்றார்.

கேட்டுவிட்டு பக்கத்தில் போன கவுண்டர், ”படிச்ச புள்ளதான நீ…? முள்ள போயி யார்னா அப்டியே வுடுவாங்களா…? அதுபாட்டுனு உள்ளருந்து மக்கி சீவுகட்டி பொடகொண்டு காலயே இல்லாமப் பண்ணாலும் பண்ணுமே. வா… வந்து சொனயில கால நல்லா கய்வினிரு… தோ வர்றன்’’ என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் தொடப்பங்குச்சிகளுக்கு மத்தியில் இருந்த சிறு கல்மேல் யாரோ வெட்டிப் போட்டு காய்ந்திருந்த காரை முள்ளிலிருந்து நீளமாக இருக்கும் முள்ளாகப் பார்த்து இரண்டை அடியோடு உடைத்து வந்தார்.

சுனையில் கால் கழுவிக்கொண்டு தாங்கித் தாங்கி நடந்து வந்த பாலு செட்டியாரை பக்கத்திலிருந்த பாறை மேல் உட்காரச் சொல்லிவிட்டு அருகில் போய் அமர்ந்த கவுண்டர், ”எங்க, கால காமி… எந்தெடத்துல முள்ளு பொத்துச்சி…?’’ என்று கேட்டார்.

மெல்ல காலைத் தூக்கி முள் குத்திய இடத்தைக் காட்டியதும் தன் தொடைமேல் அவரது காலை தோதாக எடுத்து வைத்துக்கொண்டு, தான் கொண்டுவந்த கூரான காரை முள்ளால் அந்த இடத்தைச் சுற்றிலும் லேசாக குத்தித் தோண்டி, உள்ளே உடைத்துக் கொண்டு தங்கியிருந்த சிறு முள்ளை எடுத்துவிட்டார்.

பல்லைக் கடித்து வலி பொறுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த பாலு செட்டியாரின் கையை நீட்டச் சொல்லி எடுத்த முள்ளை அதில் வைத்த கவுண்டர், ”சின்ன முள்ளுதான நம்மள என்ன பண்ணிடப்போதுன்னு வுட்டம்னா… உள்ளயே இருந்து மக்கி, கொஞ்ச கொஞ்சமா நெருவு கட்டி, சீவுவச்சி, பொடகொண்டு பரவி காலயே அசிக்க முடியாதமாரி வென வச்சிடும். இனிமேலாது முள்ளு விசயத்துல பாத்து கவனமாரு’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கவுண்டர், சுற்றிலும் ஒருதடவை பார்த்தார்.

எதையோ பார்த்தவர் சட்டெனத் திரும்பி பாலு செட்டியாரிடம், ”இங்கயே ஒக்காந்துனிரு… தோ வந்துர்றன்’’ என்றுவிட்டு, தெக்கால பக்கம் இறங்கிப் போய் இடதுபக்கம் பிரிந்துபோகும் கொடிவழியில் நடந்து, சற்று தூரத்தில் கிட்டா பாய் கொல்லியோரம் இருந்த எருக்கன் செடியிலிருந்து நான்கைந்து இலைகளைப் பறித்துக் கொண்டு வேகமாக வந்து உட்கார்ந்து, அதன் பாலை முள் எடுத்த இடத்தில் வைத்துவிட்டார்.

கவுண்டரையும் அவர் தன்மேல் கொண்ட அக்கறையில் செய்யும் செயல்களையும் பார்த்த செட்டியாருக்கு கண்கலங்கியது.

எழுந்து நின்று செட்டியாரின் முகத்தைப் பார்த்த கவுண்டர், ”பாலு, எனுக்கு தெரிஞ்சி இந்த எருக்கன மாரி ஒரு நல்ல மருந்து எங்கிமே இல்லன்னு சொல்வன். முள்ள எடுக்காம வெறும் எருக்கம்பால வச்சிவுட்ருந்தாகூட… முள்ளு தானா வெளிய வந்திருக்கும். இப்ப ஏன் வக்கறன்னா… இன்னும் எதனா கண்ணுக்குத் தெரியாம ஒடச்சினு உள்ளயே நின்னிருந்தா, வெளிய கொண்டாந்துரும்னுதான்’’ என்றார்.

காலில் வைத்த எருக்கம் பால் நன்றாக ஊற, செத்தநேரம் காலை அப்படியே வைத்திருக்க சொன்ன கவுண்டர், ”செரி பாலு… நானு கொல்லிக்கா போறன். பொண்டாட்டி புள்ளிங்கலாம் காணான்னு தேடுவாங்க’’ என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்து படிசுனை தாண்டி கள்ளிமர பொட வழியாகக் கீழ் பாறைக்கு வந்தார்.

செவடன் அங்கே தனக்காகக் காத்திருப்பதைப் பார்த்து மெல்ல புன்னகைத்த கவுண்டர், ”வா, போவலாம்’’ என்றுவிட்டு முன்னால் நடந்தார்.

முட்டிமூட்டு நீரோடும் ஓடையில் சோமத்தை மடித்து கட்டிக்கொண்டு, மெல்ல இறங்கி நடந்து மறு கரையில் ஏறி நின்று, பின்னால் வரும் செவடனைப் பார்த்து எதையோ சொல்ல நினைத்தவர், சொல்லாமல் திரும்பி மரிசியில் வேகமாக நடந்தார்.

எதுவும் பேசாமல் வந்த செவடனிடம் வேடியப்பன் கோயில் பக்கத்தில் போனதும் நின்று திரும்பி சொன்னார், ”ஏன்டா செவடா… ஒன்கிட்ட ஒண்ணு சொல்ணும்னு நெனச்சன். ஊர்லருக்க வூட்ட காலி பண்ட்டு… கொல்லிக்கே குடுத்தனம் வந்துரலாம்னு கீறம்டா.’’

கேட்ட செவடனுக்கு ஒன்றும் புரியவில்லை. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அப்படியே உரைந்துபோய் நின்றான்.

”நீங்கலாம் வூட்ட ஆத்து வெள்ளத்துல வுட்டுட்டு வர்றதுக்கு முன்னாலயே… என் மச்சான்காரன்கிட்ட சொன்னன். ஒருநாள்ல ஒருநாளு இங்க வூரு ஒண்ணு உருவாவப்போது பாருன்னு… அதேமாரி, நீங்குளும் வந்து வூடு கட்டிக்கினீங்க. பூரணியும் காலிலதான் புள்ளய பொதச்ச இங்கயே நாமலும் வந்துரலாம்னு சொன்னா. எனுக்கும் அதான் சரின்னு பட்டுச்சு… சட்டுனு சரின்னிட்டன். நீ என்ன சொல்ற…?’’

கவுண்டர் தன்னைப் பார்த்து கேட்டதும் என்ன சொல்வதெனத் தெரியாமல் நின்றான் செவடன். அதைப் புரிந்துகொண்ட கவுண்டர், ”ஆமா, நீ என்ன பெருசா சொல்லிடப் போறவன்… எது சொன்னாலும் சரின்னு தலயாட்டுவ, அதான…?’’ என்று சொல்லி சத்தமாகச் சிரித்துவிட்டு திரும்பி நடந்தார்.

சித்தோடை இறங்கி ஏறி குட்டைக் கிணறு மேட்டருகில் போனதும், புதரில் இருந்த சிறு வேப்ப மரத்தின் கீழ்க் கிளையில் இரு பல்லுக்குச்சி உடைத்த கவுண்டர், ஒன்றை செவடனிடம் தந்துவிட்டு, இன்னொன்றை வாயில் வைத்து கடித்துவிட்டு எச்சியைக் கீழே துப்பிவிட்டு, தாழ்ந்த குரலில் அவன் முகத்தை நேருக்குநேர் பார்த்து சொன்னார்.

”ஏன் செவடா… நீ கீற தெம்புலதான் புள்ளகுட்டிங்கள கூட்டுனு இந்த கொல்லிக்காட்டுக்கு குடுத்தனம் வரப்போறன். கூட இருந்து நீதான் எம்புள்ளிங்கள பத்தரமா பாத்துக்குணும், செரியா…?’’

கவுண்டர் சொன்னதைக் கேட்டு கண் கலங்கிய செவடன், ”ஏன் சாமி இப்டி சொல்றீங்க…? இந்த செவடனே நீங்க போட்ட பிச்சயில வாழ்றவன். ஒங்க புள்ளிங்கள பாத்துக்க என்கிட்ட சொல்லணுமா…? நானா பாத்துக்கமாட்டனா…?” என்றான்.

செவடனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியில் கண்கலங்கிய கவுண்டர் சிரித்துக்கொண்டு, ”எல்லாம் எனுக்குத் தெரியும் செவடா… சொம்மா ஒரு பேச்சிக்கி சொன்னன்’’ என்றார்.

எதிரில் கொட்டாக்காரர்கள் நான்கைந்து பேர் ஊத்தா, சில்லாக்கோல், வலை சகிதமாக ஆற்றில் போய் மீன் பிடித்துக்கொண்டு வருவதைப் பார்த்து, கவுண்டரும் செவடனும் வழிவிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றார்கள்.

அவர்கள் சென்றதும் மெல்ல நடந்து மேடேறி கொட்டாய்க்கு வந்தவர்கள், யாரும் இல்லாததைப் பார்த்துவிட்டு பக்கத்திலிருந்த கட்டுத்தெருவுக்குப் போய் பார்த்தார்கள். அங்கேயும் யாருமில்லை.

‘எங்க போயிருப்பாங்க…?’ எனும் கேள்வியோடு கிழக்கால பக்கம் பார்த்தவர்கள், அங்கே முரம்புக் கொல்லியில் குழந்தையைப் புதைத்த இடத்தின் அருகில் கும்பலாக எல்லோரும் நின்றிருப்பதையும், அவர்களுக்கு முன்னால் கருப்பு மாடு சரியாக பிள்ளையைப் புதைத்த இடத்தில் படுத்திருப்பதையும் பார்த்துவிட்டு, இருவரும் வாயில் வைத்திருந்த பல்லுக்குச்சியை கீழே போட்டுவிட்டு ஓட்டமாக ஓடிப்போனார்கள்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=