முரம்பு – 9

வானம் அப்படியே இடிந்து மேலே விழுந்ததுபோல் இருந்தது, கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும்.
”அய்யோ எம்புள்ள…’’
அடிவயிற்றிலிருந்து கத்தி அழுதார் பூரணியம்மா.
”எம்புள்ள சாமிக்கிட்ட போய்ட்டானா…?’’
உடைந்துபோய் மென்குரலில் சொல்லிக்கொண்டு நடைபிணம் போல் எழுந்து நடந்து வெளியே போன முத்துசாமிக் கவுண்டர், மழையில் நனைந்துகொண்டு அங்கே ஓரமாக நின்றிருந்த செவடனிடம், ”எம்புள்ள சாமிக்கிட்ட போயிட்டானான், செவடா…’’ என அழுதுகொண்டு சொல்லிவிட்டு, சற்று முன்னால் போய் தெக்கால பார்த்து நின்று, ”எம்புள்ள சாமிக்கிட்ட போய்ட்டானாமே… அய்யோ… நானு என்ன பண்வன்…? இந்தப் பாவி என்ன பண்வன்…?’’ என்று கத்தி அழுதார்.
கொட்டும் மழையில் நின்றுகொண்டு கவுண்டர் கத்தி சத்தம்போட்டு அழுவதைப் பார்த்த செவடன் என்ன செய்வதெனத் தெரியாமல் துடித்தான். ‘போய் தடுப்பதா, வேண்டமா?’ எனப் புரியாமல் தலையில் தன் இரு கைகளாலும் அடித்துக்கொண்டு அழுதான்.
”ஏன்தான் எனுக்கு மட்டும் இப்டிலாம் நடக்குதோ…? நானு என்ன பாவம் பண்ணன் சாமி… வேடிப்பா… முனிப்பா… பொறடியாத்தா தாயி… எல்லாத்துக்கும் நானு நல்லதுதான நெனச்சன்… அய்யோ… எம்புள்ள செத்துட்டானாமே…’’
கவுண்டர் துடிப்பதைப் பார்த்து தாங்கமுடியாமல் செவடனும் ஏதேதோ சொல்லி அழுதான்.
”நானு கும்பட்ற ஒத்த கை முனியா… நீ உண்மயாலுமே கீறியா, இல்லயா…? நானு சொல்றது கேக்குதா, இல்லயா…? ஊருக்கெல்லாம் வாரிவாரித் தந்த மனுசனுக்கு… ஏன்தான் இப்டி சோதன மேல சோதனயா தர்றியோ… மனுசன் கலங்கிப்போயி துடிக்கிறாரே… நானு என்ன செய்வன்…?’’
சத்தம் கேட்டு கொட்டாய்க்குள் இருந்து எட்டிப் பார்த்த மாணிக்கம், தன் தந்தை மழையில் நனைந்துகொண்டு கத்தி அழுவதைப் பார்த்துவிட்டு, கையில் உடைத்து வைத்திருந்த சிறு பன்னிக்கரும்பை வாசப்படியிலேயே போட்டுவிட்டு ஓடி வர, அவன் பின்னாலேயே ஏழுமலையும் செல்வியும் முருகனும் ஓடிவந்தார்கள்.
மாணிக்கம் கவுண்டரைப் பார்த்து துடிதுடித்துப்போனான். இதுவரை இப்படி உடைந்துபோய் அவர் அழுது ஒருதடவைகூட பார்த்ததில்லை. என்னாச்சோ ஏதாச்சோ என பதறிப்போய், ”ஐய்யா… ஐய்யா…’’ எனக் கத்திக்கொண்டு பக்கத்தில் வந்து, அவரிரு தோள்களையும் பிடித்துக்கொண்டு, ”ஐய்யா… என்னய்யா ஆச்சு…? ஏன்யா இப்டி அய்வற…? சொல்லுய்யா…’’ என்று உலுக்கிக் கேட்டான்.
அதற்குள் அவன் தங்கையும் தம்பிகளும் மழையில் நனைந்துகொண்டு வந்திருந்தார்கள்.
”எம்புள்ள… எம்புள்ள…’’
தன் இரண்டு கைகளையும் நடுங்கும் விரல்களால் மாறி மாறி தொட்டுக் காட்டி கவுண்டர் சொன்னார்.
”எம்புள்ள… எம்புள்ள…’’
இதைத்தாண்டி அவரால் ஒருவார்த்தைகூட சொல்ல முடியவில்லை.
மாணிக்கத்துக்கு அவர் சொன்னது புரியாதபோதும் தன்னை மீறி அழுகை வந்தது, அழ ஆரம்பித்துவிட்டான். கவுண்டரையும் அவனையும் பார்த்த செல்வியும் முருகனும், என்ன ஏதெனத் தெரியாமல் கூட சேர்ந்து அழுதார்கள்.
கட்டுத்தெருவோரம் நின்று இவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்த செவடன் என்ன நினைத்தானோ, வேகமாக நடந்து பக்கத்தில் வந்து மாணிக்கத்தின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டு, ”எப்பா மாணிக்கம்… எல்லாரும் எங்கூட வாங்க…’’ என கூட்டிக்கொண்டு கட்டுத்தெரு வாசப்படி வரைக்கும் போய், ”உள்ளார போங்க’’ என்றான்.
‘எதுக்கு செவடன் எங்கள மட்டும் உள்ளார போவ சொல்றான்…?’ எனும் கேள்வியோடு உள்ளே போன மாணிக்கம், அங்கே தன் அம்மா பேராமுட்டா கிழவியின் பேத்தி மடியில், நசுங்கிய ஆலைக்கரும்பு சக்கை போல் கிடந்து அழுவதையும், அவரருகில் அசைவின்றி சிற்றுருவம் ஒன்று இருப்பதையும், அதனருகில் அழுகையே உருவாக பேராமுட்டா கிழவி உட்கார்ந்திருப்பதையும் பார்த்துவிட்டு, ”எம்மா… எம்மா…‘’ என்று கத்தி பூரணியம்மாவைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போய் பக்கத்தில் உட்கார்ந்து, கிழவியின் பேத்தியிடம் ”எங்கம்மாவுக்கு என்னாச்சி…? வாயத் தொறந்து சொல்லு, என்னாச்சி…?’’ என்று பதறிப்போய் கேட்டான்.
பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் கீழே தொங்கப்போட்டு தேமே என உட்கார்ந்திருந்தாள் பேராமுட்டா கிழவியின் பேத்தி பரிமளா.
பெரிய மகன் மாணிக்கத்தின் குரல் கேட்டு மெல்ல தலையசைத்துப் பார்த்த பூரணியம்மா, நாவறண்டு குரலின்றி அழுதுகொண்டே தன் அசைக்க முடியாத கையை வலுகொண்டு மெதுவாக அசைத்து, பக்கத்தில் சாக்குப்பை மேல் படுக்கப்போட்டிருந்த சிறு உருவத்தைக் காட்டி, ”எம்புள்ள…’’ என்றார்.
பின்னாலேயே அழுதுகொண்டு வந்து பூரணியம்மாவைச் சுற்றி உட்கார்ந்த செல்வியும் ஏழுமலையும் மாணிக்கமும், ஒருவாறு என்ன நடந்திருக்கும் என சொல்லாமலேயே யூகித்துவிட்டார்கள்.
முருகனுக்குதான் ஒன்றும் புரியவில்லை. அதிலும் அவன் அம்மா கீழே சீக்காளி போல் படுத்துக்கிடப்பதையும், அவர் வயிற்றில் மாலை வரை இருந்த மேடு இப்போது இல்லாமல் இருப்பதையும், பக்கத்தில் தன்னைப் போல் மாநிறத்தில் சிறு குழந்தையொன்று படுத்துக் கிடப்பதையும் பார்த்துவிட்டு, செல்வியின் கையைப் பிடித்து இழுத்து, ”அம்மாக்கு என்னாச்சிக்கா…? ஏன் எல்லாரும் அய்வறோம்…?’’ என்று தானும் அழுதுகொண்டு கேட்டான்.
ஏற்கெனவே அழுதுகொண்டிருந்த செல்வி, தன் தம்பியின் கேள்வியைக் கேட்டு இன்னும் அதிகமாக அழுதாள்.
பேராமுட்டா கிழவி மெல்ல அழுகையை நிப்பாட்டி, தன் புடவையின் தலப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு மாணிக்கத்திடம், ”அம்மாக்காரிக்கு ஒண்ணுல்லய்யா… புள்ளதான் சாமிக்கிட்ட போய்ட்டான்…’’ என்றார்.
கிழவி அண்ணனிடம் சொன்னதைக் கேட்டுவிட்டு பக்கத்தில் போன செல்வி, சத்தமின்றி அழுதுகொண்டு மெல்ல குழந்தையைத் தொட்டுப் பார்த்தாள். அது, அசைவின்றி ஓர் இறுகிய குளிர்ந்த சதைக்கல் போன்றிருந்தது.
வெளியில் மழை வந்ததைவிட வேகமாகக் குறைந்திருந்தது. வடக்கிலும் மேற்கிலும் கீழ்வானம் வெளுத்து வெளிவாங்குவது நன்றாகவே தெரிந்தது. எனினும் கிழக்கே மட்டும் எங்கோ தூரத்தில் இடியிடித்து பெருமழை பெய்வது, தொண்டானூர் மலைக்குப் பின்னால் சிறுசிறு கோடாகக் கீறிப்போகும் மின்னொளியால் உறுதியானது.
தூறல் படபடவென போட ஆரம்பித்ததும் ஓடிப்போய் கட்டுத்தெருவின் பக்கவாட்டுச் சுவரோரம் ஒடுங்கி நின்றுகொண்டு கூரைக்கும் சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கருப்பு மாடு, மெல்ல வெளியில் வந்து ஓரிடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மெதுவாக கழுத்தில் கட்டியிருந்த புதுமணி ஒலிக்க நடந்து கவுண்டரின் பக்கத்தில் போய் ‘எம்புள்ள… எம்புள்ள…’ என்று தனக்குள் உடைந்து முணுமுணுத்து அழுதுகொண்டிருந்தவரின் முதுகில் தன் நாவல் நக்கிவிட்டது.
உயிரற்ற உடல்போல் நினைவற்று இறந்துபோன தன் குழந்தையை எண்ணி அழுதுகொண்டிருந்த கவுண்டருக்கு, சட்டென்று நினைவு வந்து தூக்கிப்போட்டது. பதறிப்போய் திரும்பிப் பார்த்தார். தன் மாடு கண்கலங்கி நின்றிருந்தது.
”எம்மா கருப்பச்சி தாயே…’’ என கத்தி உடனே மாட்டை கட்டிக்கொண்ட கவுண்டர், ”எம்புள்ள செத்துட்டாம்மா… எம்புள்ள செத்துட்டான்…’’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு அழுதார்.
‘இன்னும் செத்தநேரம் அய்வட்டும்… அப்பதான் கவுண்ரோட பாரம் கொறயும்’ என நினைத்திருந்த செவடன், ‘அய்தது போதும்’ என கவுண்டரின் பக்கத்தில் போய் நின்று, ”கவுண்ர’’ என கூப்பிட்டான்.
மாட்டை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்த கவுண்டர், மெல்ல தலையை தூக்கிப் பார்த்தார்.
”மழ வுட்டுட்டமாரி கீது… வா கவுண்ர, போயி ஆவவேண்டித பாப்பம்.’’
மெல்ல ஒவ்வொரு வார்தையாகத் தயங்கித் தயங்கி சொன்னான். கவுண்டருக்கும் அதுதான் சரியெனப் பட்டது.
பேராமுட்டா கிழவியின் பேத்தி மடியில் தலைசாய்த்து படுத்திருந்த பூரணியம்மா, தன் இடது கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்து உட்கார்ந்து, பக்கத்திலிருந்த தனது பிள்ளையைப் பூ போல தன் இரு கைகளால் தூக்கி மடிமேல் வைத்து முகம், கை கால் என ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தார்.
உதடு லேசாக அசைவதையும் அது ‘எம்புள்ள’ என்பதை திரும்பத் திரும்பச் சொல்வதையும் பார்த்த பேராமுட்டா கிழவி, மாணிக்கத்தையும் செல்வியையும் கையசைத்துக் கூப்பிட்டு சத்தமின்றி உதடசைத்து பின்னால் போய் உட்காரச் சொன்னார்.
அவர்களும் சட்டென்று புரிந்துகொண்டு மெல்ல உட்கார்ந்தவாறே பின்நகர்ந்து போய் தள்ளி உட்கார, வெளியிலிருந்து வந்த கவுண்டர் வாசப்படியோரம் நின்று ராந்தல் வெளிச்சத்தில் வாடின மலர்போல் தெரிந்த பூரணியாம்மாவையும், அவர் மடியில் கிடந்த குழந்தையையும், அதை தொட்டுத் தொட்டு அவர் பார்ப்பதையும் பார்த்துக் கலங்கினார்.
வெளியில் கட்டுத்தெருவின் முன்னால் நின்றுகொண்டு மாடு கத்தியதைக் கேட்டு மெல்ல தலைநிமிர்த்தி கவுண்டரை பார்த்த பூரணியம்மா, ”எம்புள்ள தே…’’ என்று சொல்லி கீழே குனிந்து குழந்தையைக் காட்டி, அதன் கன்னத்தையும் நெற்றியையும் தொட்டு வருடிவிட்டு, ”எம்புள்ள சரவணன் தே…’’ என்றார், திரும்பவும் அவரைப் பார்த்து சற்று சத்தமாக.
தன் மனைவி, குழந்தைக்குப் பெயர் வைத்திருந்ததைக் கேட்ட கவுண்டர் துடித்துப்போய் அப்படியே சாய்ந்து விழ, பக்கத்தில் நின்றிருந்த செவடன் அவரைத் தாங்கிப் பிடித்து கீழே உட்கார வைத்தான்.
”என் தங்கமே… ரத்தனமே… பொம்மயிலே மரவதமே…’’
பூரணியம்மா கண்கலங்கி அழுதுகொண்டு ஈரக்குரலில் பாடி, தன் மார்போடு சேர்த்து குழந்தையை அணைத்துக்கொண்டார்.
”யாரு ஒண்ண அடிச்சது…? இந்த அம்மாக்கிட்ட சொல்லிப்புடு…’’
அக்கம் பக்கம் யாரும் இல்லை. தானும் தன் குழந்தையும் மட்டுமே இருக்கிறோம். எதையோ பார்த்து பயந்துபோய் அழுத குழந்தையை அப்படியே அள்ளி தன் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டு, மெல்ல தன் ரவிக்கை பொத்தானை அவிழ்த்து, இரு முலைகளிலும் மாறி மாறி வாய் வைத்து பசிதீர பால் குடிப்பாட்டிவிட்டு, பாட்டுப் பாடி தூங்கவைப்பதாய் நினைத்துக்கொண்டார் பூரணியம்மா.
”தங்கமே கண்ணுறங்கு –
அன்னயின் தாலாட்டிலே…
வைரமே கண்ணுறங்கு –
அன்னயின் சீராட்டிலே…
நெலவுவட்டம் வேணுமுன்னா –
நெலவயே கொண்டுவாறன்…
ஆனபொம்ம கேட்டியின்னா –
ஆனயே புடிச்சிதாறன்…
மேகவோட்டம் ரசிச்சியின்னா –
மேகத்தயே அழச்சிவாறன்…
மழசத்தம் புடிச்சதுன்னா –
மழயே கூட்டிவாறன்…
தங்கமே கண்ணுறங்கு –
அன்னயின் தாலாட்டிலே…
வைரமே கண்ணுறங்கு –
அன்னயின் சீராட்டிலே…’’
பேராமுட்டா கிழவி, அழுகையை அடக்கமுடியாமல் தன் புடவைத் தலப்பை வாரிச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டார்.
”சூரியன் சுட்டுப்புட்டா –
அம்மாக்கிட்ட சொல்லிப்புடு…
சூரியன குச்சிவச்சி –
அடிச்சியே தொரத்திடுறன்…
காத்துப்பட்டு வலிச்சதுன்னா –
அடுத்தநொடி காட்டிப்புடு…
கல்லக்கொண்டு கண்டபடி –
காத்தயே வெரட்டிடுறன்…
தங்கமே கண்ணுறங்கு –
அன்னயின் தாலாட்டிலே…
வைரமே கண்ணுறங்கு –
அன்னயின் சீராட்டிலே…”
தன் அம்மா அழுதுகொண்டு பாடுவதைப் பார்த்து அழுத முருகனை, செல்வி தனது மடியில் சாய்த்துக்கொண்டு தானும் வாய்மூடி அழுதாள்.
”எறும்பு ஒன்ன கடிச்சிப்புட்டா –
அழுவாத நானிருக்கன்…
எறும்ப கைது பண்ணி –
ஆயுளு தண்டனதாறன்…
நடக்கும்போது கால்வலிச்சா –
நடக்காத அங்கே நில்லு…
நாநடந்து தூக்கிப்போறன் –
பாசமிகு தோள்மோட்டிலே…
தங்கமே கண்ணுறங்கு –
அன்னயின் தாலாட்டிலே…
வைரமே கண்ணுறங்கு –
அன்னயின் சீராட்டிலே…’’
ஒரு கட்டத்துக்கு மேல் கவுண்டரால் பூரணியம்மா பாடும் பாட்டை கேட்கமுடியவில்லை. பெருக்கெடுத்த அழுகையை அடக்கிக்கொண்டு எழுந்து வெளியில் வேகமாக வந்த கவுண்டர், அதே வேகத்தோடு அப்படியே போய் அங்கிருந்த கல்லின் மேல் இன்னொரு கல்லாய் உட்கார்ந்துகொண்டார்.
தாலாட்டுப் பாடி பிள்ளையைத் தூங்க வைத்ததாய் நினைத்த பூரணியம்மா, மெல்ல எழமுடியாமல் எழுந்து கட்டில் மேல் மடித்துவைத்திருந்த கட்டம்போட்ட துப்பிட்டியை விரித்துப் போட்டு அதன்மேல் குழந்தையைப் போட்டுவிட்டு, யாரிடமும் ஒருவார்த்தையும் பேசாமல் வெளியில் வந்தார்.
மழை முற்றிலும் விட்டு வானம் பளிச்சென வெளிவாங்கி ஆங்காங்கே ஒன்றிரண்டு மீன்நிலா காய்ந்துகொண்டிருந்தது.
உடல்வலியோடு நடக்கமுடியாமல் நடந்து கவுண்டர் உட்கார்ந்திருக்கும் கல்லருகே வந்த பூரணியம்மா, தலையைத் தன் இரு கால்களுக்கு நடுவில் தொங்கப் போட்டு ‘எம்புள்ள… எம்புள்ள’ என மென்குரலில் விட்டுவிட்டு சொல்லிக்கொண்டிருந்த கவுண்டரின் தோளை மெதுவாகத் தொட்டார்.
சட்டென்று நினைவு வந்தவராய் தலை நிமிர்த்திப் பார்த்த கவுண்டர், பூரணியம்மா அழுது வீங்கிப்போன முகத்தோடு வந்து நிற்பதைப் பார்த்துவிட்டு எழுந்து நின்று என்ன சொல்வதெனத் தெரியாமல் கட்டுத்தெருவைக் காட்டி, ”புள்ள…’’ என்றார்.
கவுண்டர் சொன்னதைக் கேட்ட பூரணியம்மா மிக மிக மெல்லிதாக உதடசைத்து சிரித்துவிட்டு, ”புள்ள கட்டுல்ல தூங்கினு கீறான்… ஏந்திரிக்கறதுக்குள்ள தூக்கினுபோயி… நம்ம மொரம்புக் கொல்லில பொதச்சிடுங்க’’ என்றார்.
இதை சற்றும் எதிர்பாராத கவுண்டர், தனக்குள் நொறுங்கிபோய் அழுதுகொண்டு மெல்ல தலையாட்டி, ‘சரி’ என்றார்.
அதைப் பார்த்த பூரணியம்மா, எதுவும் சொல்லாமல் திரும்பி கொட்டாய்க்கு நடந்து போனார்.
மழையில் நனைந்து குளிர்ந்திருந்த மண்ணும், கிழக்கிலிருந்து மேற்குநோக்கி குளிரைக் கூட்டிப்போகும் காற்றும் கூடி, நெருப்பை அள்ளி உயிர்வரை மாறிமாறி கொட்டுவதாய் எண்ணிக்கொண்டார் கவுண்டர்.
பிள்ளை நல்லபடியாகப் பிறந்தால், முனியப்பனுக்கும் வேடியப்பனுக்கும் கிடாவெட்டி பொங்கல் வைப்பதாய் பெராத்தன பண்ணியிருந்தார் பூரணியம்மா. கவுண்டருக்கு இம்முறையும் மகன்தான் பிறப்பான் என உறுதியாகத் தெரிந்திருந்தது. அதோடு, குழந்தை என்பது நாமாக நினைத்ததும் பெற்றுக்கொள்ளும் ஒன்றல்ல, அது கடவுளாகப் பார்த்து தருவது என்றே எப்போதும் நம்பினார்.
கட்டுத் தெருவின் முன்னால் நின்றுகொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த செவடனை நோக்கி கவுண்டர் கை காட்ட, அதற்காகவே காத்திருந்தவனாய் எட்டி வேகமாக ஓடிவந்தான்.
”புள்ளய தூக்கினு போயி… கொல்லில பொதச்சிடலாம்.’’
தான் சொன்னதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் தலையைக் கீழே தொங்கப்போட்டுக்கொண்டு நின்ற செவடனைப் பார்த்து கவுண்டர் சொன்னார்.
”கட்டுத்தெரு வுள்ளார கீற சின்ன மம்டியும் பாறக்குச்சியும் எடுத்துனு போயி… மோட்டுக்கொல்லி மர்சில காணி கல்லாண்ட பள்ளம் நோண்டு. பின்னாலயே புள்ளய தூக்கினு வரன்.’’
எதிர்பேச்சு பேசாமல் கண்கலங்கி, ‘சரி’ என தலையாட்டிவிட்டு திரும்பி வேகமாக கட்டுத்தெருவுக்குள் போனான் செவடன்.
கொட்டாவுக்குள் போன பூரணியம்மா, நெடுங்கால் முட்டில் ஒயர்கூடப்பையில் மாட்டி வைத்திருந்த புது சந்தரகாலி புடவையை எடுத்துக்கொண்டு கவுண்டரிடம் வந்து, ”இந்தப் பொடவிலதான் அவுனுக்கு யானக் கட்டி போடனுன்னு ஆசப்பட்டன்’’ என்று சொல்லிவிட்டு, புடவையைக் கைகளால் மெல்லத் தொட்டு வருடி முகத்தில் ஒருதடவை அழுந்த வைத்து தேய்த்துவிட்டு, ”இதல யானக் கட்டி தூக்கினு போயி… இந்த பொடவியே படுக்கயாப் போட்டு… வலிக்காம கை கால் மொகம்லாம் போத்திவுட்டு பொதச்சிட்டு வாங்க’’ என்று சொல்லி கவுண்டரின் கையில் தந்துவிட்டு, சட்டென்று திரும்பி நடந்து மீண்டும் கொட்டாய்க்கு போனார்.
கவுண்டருக்கு ஒருபக்கம் பிள்ளையை இழந்தது பெருந்துன்பமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தன் மனைவி நடந்ததை உடனே ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து மீண்டு நடக்கவேண்டியது நோக்கி வலுவோடு நகர்ந்ததை நினைத்தால் ஆறுதலாகவும் இருந்தது.
பூரணியம்மா சென்று கொட்டாய்க்குள் நுழையும் வரை பார்த்த கவுண்டர், உடனே தன் இரு கண்களையும் துடைத்துக்கொண்டு கட்டுத்தெருவுக்குப் போய் ஓரமாக வெட்டிச் சாய்த்து வைத்திருந்த மூங்கில் கழியில் ஒன்றை எடுத்து, மாணிக்கத்தையும் ஏழுமலையையும் எழுந்து ஆளுக்கொரு முனையாகப் பிடிக்கச் சொல்லி தந்துவிட்டு, கையில் வைத்திருந்த சந்தரகாலி புடவையை நடுவில் யானை கட்டி கட்டிலில் படுக்கப்போட்டிருந்த குழந்தையைத் தூக்கி அதன் உச்சந்தலையில் அழுந்த ஒரு முத்தமிட்டு எடுத்துவந்து அதில் போட்டுவிட்டு கையெடுத்துக் கும்பிட்டவர், ”நம்ம கொல்லிக்கி தூக்கினு போங்க…’’ என்றார்.
பேராமுட்டா கிழவிக்கும் அவர் பேத்திக்கும் கவுண்டர் சொன்னதைக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது.
எதற்கெனப் புரிந்துகொண்ட மாணிக்கம் முன்னால் நடக்க, புரியாத ஏழுமலை பின்னால் நடக்க, கவுண்டர் பிள்ளையை யானையோடு சேர்த்து தூக்கிப் பிடித்துக்கொண்டு குனிந்து கட்டுத்தெருவுக்கு வெளியில் வர, முன்னைக் காட்டிலும் இப்போது வானமும் பூமியும் இன்னும் வெளிச்சமாக இருந்தது.
நடப்பது எதுவும் புரியாமல் அழுதுகொண்டு பின்னாலேயே வந்த முருகனைத் தூக்கிக்கொண்டு கவுண்டர் முன்னால் நடந்து போக, அவர் பின்னாலேயே இருவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தனர்.
வெப்பால மர வழியாக மேற்குத் துண்டில் இறங்கி, நடுத்துண்டு மரிசியோரமாக நடந்து, மேட்டுத் துண்டு மரிசியில் செவடன் பள்ளம் தோண்டும் இடத்தருகில் போய் நின்றார்கள்.
பள்ளத்தைப் பார்த்துவிட்டு, ”போதும் செவடா…’’ எனச் சொன்ன கவுண்டர், மெல்ல பிள்ளையை யானையிலிருந்து எடுத்து முருகனைக் கீழே உட்காரச் சொல்லி அவன் மடியில் வைத்துவிட்டு, புடவையை அவிழ்த்து நான்காக மடித்து குழிக்குள் மெத்தை போல் பாதியை வைத்து, குழந்தையை தூக்கி உள்ளே அதன்மேல் மெதுவாக வைத்துவிட்டு மீதிப் பாதியால் போர்த்திவிட்டு, தன் இரு கையால் ஒருசேர ஒவ்வொரு பிடியாக மண்ணள்ளி குழந்தைக்கு வலிக்காமல் மேலே வைத்தார்.
சரியாக முக்கால் பள்ளம் நிரம்பியதும் தலை நிமிர்த்தி பக்கத்தில் கண்கலங்கி நின்றிருந்த செவடனைப் பார்த்து கவுண்டர், ”செவடா… அதோ, அந்த வேப்ப மரத்து கீள மொளச்சிருக்க கன்னுல ஒண்ண… போயி வேரோட புடுங்கியாடா…’’ என்றார்.
உடனே ஓடிப்போய் ஒருமுழ உயரமுள்ள வேப்பங் கன்று ஒன்றை பிடுங்கி வந்து நீட்டினான் செவடன்.
வாங்கி குழிநடுவில் வைத்து, சுற்றிலும் மண்போட்டு மூடி மெதுவாக அமுக்கிவிட்டு எழுந்த கவுண்டர், புதைத்த மண்மேட்டையும் அதன் நடுவில் நட்ட வேப்பங்கன்றையும் ஒருதடவை தொட்டு கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, செவடனையும் பிள்ளைகளையும் பார்த்து தலையசைத்துக் கீழே காட்டி, ”எம்புள்ள…’’ என்று உடைந்த குரலில் உதடசைத்து சிரிப்பதுபோல் சொல்லிவிட்டு, மேற்கே கொட்டா நோக்கி இருளுக்குள் நடக்க ஆரம்பித்தார்.
[இன்னும்]
*