மண்ணின் கதை

(‘முரம்பு’ நாவல் – முன்னுரை)
எழுத்துதான் இனி வாழ்க்கை என்று மனத்தில் தோன்றிய நாள்முதல் எனக்குள் இருந்த கதைக் கரு இது.
தமிழ் இலக்கியம் இதுவரை எத்தனை எத்தனையோ நிலங்களையும், நிகழ்வுகளையும், மனிதர்களின் வாழ்வையும் பதிய வைத்திருந்தபோதும் தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய, அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்பகுதி மக்களின் வாழ்வைப் பதியவைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.
தென்பெண்ணை ஆற்றின் தென்பகுதியில் உள்ள திருவடத்தனூர் என்னும் எங்கள் சிறு கிராமத்தின் வாழ்வு, பல தனித்துவங்களைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது என்பதை நினைக்கும்போதெல்லாம் தோன்றும். அதையெல்லாம் எப்படிப் பதிவுசெய்யலாம் என எண்ணும் மறு நொடியே நாவல்தான் அதற்கான வடிவமாக இருக்கும் என்றும் தோன்றும். கூடவே அதை எங்கே தொடங்குவது, எங்கே முடிப்பது? என்ற வினாவும் எழும்.
‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ எனும் எனது முதல் நூலை எழுதிய பிறகு இந்நாவலைத் தொடங்கிவிடலாம் என்றிருந்தேன். ஆனால், அப்போ இப்போவென தள்ளித்தள்ளி, ஒன்பது நூல்களை இவ்விரண்டாண்டுகளில் எழுதிய பிறகே இதை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
அதுவும் இதன் முதல் வாக்கியம், ஓர் அழகிய அதிகாலைப் பொழுதில் மனத்துள்ளிருந்து பீரிட்டு வந்ததும், அடுத்தடுத்த வார்த்தைகள் வரிசைகட்டி வந்தன.
அவ்வாறு எழுதிய முதல் அத்தியாயத்தை நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளுமைகளான நாஞ்சில் நாடன் ஐயா, கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் உட்பட இன்னும் சிலருக்கு, என்ன சொல்வார்களோ எனும் குழந்தையின் பரிதவிப்போடு அனுப்பிவைத்தேன். படித்துவிட்டு அன்போடு இருவரும் தட்டிக்கொடுத்து தொடரச் சொன்னார்கள்.
அதிலும் நாஞ்சில் நாடன் ஐயா சொன்ன, ‘நல்ல தொடக்கம். சிறப்பான மண்ணின் மொழி. தொடருங்கள். வாழ்த்துகள்’ எனும் வார்த்தைகள் கூடுதல் உற்சாகம் தந்ததோடு, அவர் என்னருகில் வந்து உட்கார்ந்து, ஒவ்வோர் அத்தியாயத்தை எழுதி முடித்ததும் வாங்கிப் படித்துவிட்டு பேரன்போடு தட்டிக்கொடுத்தது போன்றிருந்தது.
இந்நாவல், 1972ல் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து விரித்து எழுதப்பட்டது. அதுவும் ‘முரம்பு’ என்னும் மண்ணைப் பற்றியது. அப்பெயரில் அங்கே உருவான ஓர் ஊரைப் பற்றியது. அவ்வூரின் தொடக்கமாக இருந்து, அர்த்தமுள்ள வாழ்வை அங்கு வாழும் ஒரு மனிதரைப் பற்றியது. அவர்தம் அன்புக்குறிய மக்களைப் பற்றியது. அவர்களது பேசப்படாத வாழ்க்கை பற்றியது.
இதன் வழியாக நான் சொல்ல நினைத்தது பல எனினும், சொல்லியவை மிகச் சிலவே. இருந்தும் இந்நாவல் நினைத்ததைவிட நிறைவாகவே வந்திருக்கிறது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நல் நண்பராகவும், ஓர் அண்ணனாகவும் இருந்து வருபவர் பெரம்பலூர் சுரேஷ். இந்நூலை மிக்க அன்போடு அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
இது என் முதல் நாவல்.
இது விதைப் பயிரா இல்லை பொட்டுப் பயிரா என்பதை அவை வேர்விட்டு முளைக்கும் வாசகமனங்கள் தீர்மானிக்கட்டும்.
‘முரம்பு’ மண்ணிலிருந்து,
வடிவரசு.
சென்னை – 43
ஜூலை 10, 2021
*
(நாளை முதல் தினம் ஓர் அத்தியாயம் வெளியாகும்.)