ஐபக்கம் – 028 : ஐ என்னும் வாசிப்பாளி

#மார்ச்21,2024
இன்றைய தினம் என்றும் இல்லாதது போல மிக முக்கியமான மூன்று நிகழ்வுகள் ஒன்றடுத்து ஒன்றாய் நிகழ்ந்திட்டன. அதனால் மூன்றையும் தனித்தனிப் பதிவுகளாக (அதாவது, நாட்குறிப்புகளாக) எழுத வேண்டியானது.
முதல் பதிவு : மதியம் 12 மணி இருக்கும். எனது எழுத்தறையில் உட்கார்ந்து, ‘தாவர சங்கமத்தின்’ இறுதி அத்தியாயம் எழுதிக் கொண்டிருந்தேன். ‘போய் ஒரு தேநீர் போட்டு வரலாம்’ என எழுந்து நடுவீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கே கட்டிலில் படுத்துக் கொண்டு அ.முத்துலிங்கத்தின் ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ கட்டுரை நூலை வாசித்துக் கொண்டிருந்தாள் மதி. இது அல்ல விஷயம்.
அருகில் உறங்கிக்கொண்டிருந்த ஐ, எழுந்து சத்தம் போடாமல் தன் அம்மா என்ன செய்கிறார் எனப் பார்த்துவிட்டு, அவனும் அவளோடு சேர்ந்து புத்தகம் படிக்கத் (அதாவது, பார்க்க) தொடங்கிவிட்டான். அதுவும் ஏதோ ஓரிரு நொடிகள் அல்ல. நன்கு தேர்ந்த வாசிப்பாளி போல அத்தனை உன்னிப்பாக புத்தகத்தையும், அதில் இருக்கும் எழுத்துகளையும் வெகுநேரத்துக்கு பார்த்தது கண்டு எனது கண்ணே பட்டுவிடும் போல இருந்தது.
உடனே, நகர்பேசியில் இரண்டு மூன்று ஒளிப்படங்களும், ஒரு சிறு காணொளியும் எடுத்துக்கொண்டு, மனசுக்குள் மானசீகமாக நேற்று எழுதிய கண்ணூறு பாடலை பாடி திருஷ்டிக் கழித்திட்டேன். ஆம்!
ஐ என்னும் வாசிப்பாளியை கண்டுகொண்ட தினம் இன்று.
*