தாவர சங்கமம் – 12 : ஆமைநடை

அஞ்சல் துறையில் பணிபுரியும் தம்பி பிரபாகரன் நான் வியக்கும் நேர்மறை சிந்தனையாளர். எப்போது சந்தித்தாலும் புதுப்புது விஷயங்களை பகிர்பவர். அப்படி கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்தபோது ‘ஆமைநடை’ பற்றி சொன்னார்.

‘அதென்ன ஆமைநடை?’ என்று பின்னால் பார்க்கலாம். அதற்கு முன் நான் முதன்முதலில் (ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் அப்போது) பார்த்த ஆமையை பற்றி சொல்லவேண்டும். அதுவும் உள்ளங்கை அளவுள்ள மிகச் சிறிய ஆமை. என் இரண்டாவது அண்ணன் தன் நண்பர்களோடு குளிக்கப்போன கிணற்றிலிருந்து பிடித்துவந்து சில தினங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் வைத்து வளர்த்தது.

ஆரம்பத்தில் அச்சத்துடன் கண்டவன், நாட்கள் செல்லச்செல்ல கையில் எடுத்து வைத்துக் கொஞ்சிக் கதை பேசி விளையாடும் அளவுக்கு நெருக்கமானது. என்ன நினைத்தாரோ ஐயா, ஒருநாள் யாருக்கும் தெரியாமல் எடுத்துப் போய் அது வாழ்ந்த கிணற்றிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

அதுமுதல் அந்த ஆமையை நான்கைந்து தடவை கிணற்றில் ஐயாவுடனும், நண்பர்களுடனும் குளிக்கப் போகும்போது பார்த்திருக்கிறேன். என்னோடு சேர்ந்து அதுவும் வளர்ந்ததைக் கண்டு கடைசியாகப் பார்த்தபோது வியந்தும் இருக்கிறேன்.

ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பார்கள் கிராமத்தில். இது புகழ்பெற்ற சொலவடையும் கூட. ஆனால், இதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அந்த ஆமை வந்த பின்புதான் எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக முன்னேறத் தொடங்கியது. கூரை வீட்டில் இருந்து மெத்தை வீடு கட்டி குடியேறினோம். ஒவ்வொருவரும் நல்ல இடத்துக்கு உயர்ந்தோம்.

அதன்பிறகு குறைந்தது பதினைந்து தடவையாவது ஆமையை பார்த்திருப்பேன். கடைசியாக சென்றாண்டு மதியை பள்ளிக்கரணை கூட்டிப் போய் மருத்துவம் பார்க்க விட்டுவிட்டு, பக்கத்துத் தெரு கடை முன்னால் மழைக்காக ஒதுங்கி நிற்கையில் பார்த்தது.

ஆமைக்கு தமிழ் இலக்கியத்தில் அதிலும் குறிப்பாக, பக்தி இலக்கியத்தில் மிகப்பெரிய இடமுண்டு. திருமால் கூர்ம அவதாரம் எடுத்தது யாவரும் அறிந்ததே. கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். திருமால் தனது இரண்டாவது அவதாரத்திற்கு ஆமையை தேர்ந்தெடுக்கக் காரணம், ஆபத்துக் காலத்தில் எப்படி ஆமை தனது உடல் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்கிறதோ, அப்படியே மனிதர்களாகிய நாமும் அடக்கத்துடன் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய தத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே.

இதையே நம் வள்ளுவப் பாட்டன்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து  (குறள். 126)

என்று அழகுற இயம்பியிருக்கிறார், திருக்குறளில்.

‘ஆமை’ என்பதற்கு ‘அம்’ என்ற சொல்லே வேராகும். ‘அம்’ எனும் வேரிலிருந்து தோன்றிதே ‘ஆமை’ என்பர். கடலில் வாழ்பவை, நன்னீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை எனப் பல வகைகள் உண்டு ஆமையில். கடலாமை, நன்னீராமை, சருகாமை அல்லது வயலாமை பற்றிய செய்திகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.


பின்னி வைத்தாற் போன்ற கொடி பிணங்கிய சிறு தூறுகளைக் கொண்ட வள்ளைக் கொடியின் நீண்ட இலைகளின் செறிவில், சொம்பி உறங்கிக் கிடக்கும் நிலையை வெறுத்த வலிமையான நகத்தினையுடைய  ஆமையை,

‘பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பில்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை’ (அகம். 256)

என்று மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனாரும், ஆமை வளைந்த காலினை உடையது என்பதை,

கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் (அகம். 117)

என்று பெயர் தெரியாத ஒரு புலவரும், நிறைந்த சூல் கொண்ட ஆமையானது, அடும்புக்கொடி சிதையுமாறு இழுத்து, வளைந்த உப்பங்கழியின் வெண்மையான மணல்மேட்டின் பக்கத்தே அதனைச் சேர்த்து,  யானைக் கொம்பினால் செய்த வட்டுப் போன்ற வடிவம் உடைய புலால் நாறும் முட்டையை ஈன்று, பிற உயிர்கள் எதுவும் அறியாவண்ணம் அம்மணலுள் மறைத்து வைக்கும். அதை பிளந்த வாயினையுடை ஆண் ஆமை அம்முட்டையிலிருந்து குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்படும் வரை பாதுகாக்கும் என்பதை,

‘அடும்புகொடி சிதைய வாங்கி, கொடுங்கழிக்

குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று, புதைத்த
கோட்டுவட் டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்’   (அகம். 160)

என்று ஒரு விலங்கியல் ஆய்வாளர் நோக்கில் அத்தனை அழகுடன் குமுழிஞாழலார் நப்பசலையாரும், திறந்த வாயினையுடைய ஆமையை,

பகுவாய் யாமை(அகம். 356)

என்று பரணரும், தேவர்களின் உணவுப்பொருளாக ஆமை இடம்பெற்ற செய்தியினை அதுவும், வாடாத பூக்களைச் சூடியுள்ள தேவர்கள் உண்ணும் பொருட்டுத் தீ வளர்க்கும் வேள்விக் குண்டத்தில் இடம்பெற்ற ஆமைதான் முன்பிருந்த குளிர்ச்சி பொருந்திய பொய்கைக்குச் செல்ல விரும்பியதைப் போல என்ற உவமையாகியுள்ள திறத்தை,

‘கரியாப் பூவின் பெரியோர் ஆர,
அழல்எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு’  (அகம். 361)

என்று எயினந்தை மகனார் இளங்கீரனாரும், புறநானூறில் நெல்லருக்கும் தொழிலைச் செய்வோர் தம்முடைய கூரிய அரிவாளின் வாய் மழுங்குமாயின், பின்னையும் மறங்குன்றாது அரிதல்வேண்டி சேற்றில் படிந்திருக்கும் ஆமையின் வளைந்த முதுகு ஓட்டினைத் தீட்டும் கல்லாகக் கருதித் தீட்டுவதை,

‘நெல்அரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்,

பின்னை மறத்தொடு அரிய, கல்செத்து,

அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்’ (புறம். 379)

என்று புறத்திணை நன்னாகனாரும், கூர்மையான நகங்களை உடைய வயலிடத்து வாழும் ஆமையினது வெண்மையான வயிற்றைக் கண்டாற் போன்று என்னும் பொருளில்,

‘வள்உகிர வயல்ஆமை

வெள்அகடு கண்டன்ன’ (புறம். 387)

எனக் குண்டுகட் பாலியாதனும் பாடியிருப்பதைப் பார்க்கலாம்.

[இவை தவிர, ‘வயல் ஆமைப் புழுக்கு உண்டும்’ (பட்டின. 64), ‘ஆமை தலை புடை சுரிப்ப’ (கம்ப. நாட்டுப். 18)…. எனப் பல இடங்களில் கம்பர் முதலான பெரும் புலவர்கள் படை ஆமையை பலவிதமாகப் பாடியிருப்பதைக் காணலாம்.]

ஆமைக்கு அண்டசம், அந்தரங்கத்தியானி, அம்பணம், உறுப்படக்கி, ஐந்துறுப்படக்கி, ஒடுங்கி, ஓடன், கச்சன், கச்சபம், கச்சம், கடிப்பு, கமடம், கல்லி, கிராகம், குருளை, கூடாங்கம், கூர்மம், சங்குருளை, சதுர்க்கதி, சிலாயுதன், சுருக்கி, தௌலேயம், நீர்ப்பரிசை, பஞ்சகுத்தம், பஞ்சநகக்கூர்மையோன், பஞ்சநகம், பஞ்சாங்ககுத்தம், பஞ்சாங்கம், பீவரம், மவுனி / மௌனி, யாமை, வஞ்சகமூடி, விருத்தம் எனப் பல பெயர்கள் உண்டு தமிழில்.

அதேபோல ஆமையைக் கொண்டு…

* ஆமைக்கல் – தரையில் பதிக்கும் ஆறுகோணமுடைய கல்,

* ஆமைத்தாலி – ஆமை வடிவுள்ள தாலி,

* ஆமைதவழி – ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம்,

* ஆமைநெய் – ஆமைக் கொழுப்பினின்று எடுக்கும் நெய்,

* ஆமைப்பலகை – ஆமையுருவமைந்த மணை,

* ஆமைப்பூட்டு – ஆமையுருவமைந்த பூட்டுவகை,

* ஆமைமடி – பால் நிரம்பச் சுரக்கும் சிறுமடி,

* ஆமையோட்டுக்கட்டி – பெரும்புண்கட்டி,

* ஆமைச்சுரம் – சிறுபிள்ளைகளுக்கு வரும் சுரநோய்,

* ஆமையாழ் – செவ்வழியாழ்வகை…

முதலான பல சொற்களும்… கலைப் பொங்கிஷங்கள் மிகுந்த நம் தமிழ்நாட்டில் திருச்செங்கோடு – அர்த்தநாரிஸ்வரர், திருக்கழுக்குன்றம் – பக்தவச்சலேசுவர் முதலான பல கோயில்களில் ஆமை வடிவிலான ஆமை மண்டபங்களும்… காஞ்சிபுரம், திருக்கச்சூர் முதலான ஊர்களில் ஆமை வடிவில் திருமால் சிவனை வழிபட்ட கோயில்களும் (கச்சபேசம்)… ஆமையை தம் பெயரில் தாங்கிய இறைவனும் (கச்சபேசுவரர், கச்சாலீசுவரர்) இருப்பதைப் பார்க்கலாம்.

அரசர் சின்னம் 21-ல் (முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம்) பதினாறாவதாக சூடாமணி குறிப்பிடும் ஆமையில்… அழுங்காமை (கடலாமை வகை), கல்லாமை, கிணற்றாமை, கடலாமை, சருகாமை, சேற்றாமை, தரையாமை, பறையாமை (கருநிறமுள்ள ஆமை), மலையாமை (மலையில் காணப்படும் ஆமை வகை), வெங்கலாமை, பாலாமை (வெண்மை நிறமுள்ள ஆமைவகை) உள்ளிட்ட எத்தனையோ வகைகள் இருக்கின்றன.

இவற்றில் கடலில் வாழக்கூடிய கடல் ஆமையை பார்ப்பதற்காகவும், அவை இரவு நேரங்களில் கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வதையும், அவ்வாறு இட்டுச் செல்லும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து குஞ்சு பொரித்ததும் கடலில் கொண்டுபோய் விடுவதற்காகவும் சென்னையில் இயங்கி வரும் ‘SSTCN’ (Students Sea Turtle Conservation Network) என்னும் தன்னார்வலர் அமைப்புடன் சேர்ந்து, சென்னை – நீலாங்கரை கடற்கரையில் இருந்து, அடையாறு கடலில் கலக்கும் சென்னை – பெசன்ட் நகர் கடற்கரை முடிய ஏழு கி.மீ தூரம், முன்னிரவு 11.15-க்கு தொடங்கி, விடிகாலை வரைக்கும் நடப்பதற்கு ‘ஆமைநடை’ என்று பெயர்.

இந்நடையில் பங்கு பெற்றுவிட்டு வந்த பிராபகரன், அது பற்றி சொன்னதும் எனக்கும் போகவேண்டும் என்று தோன்றியது. இரண்டு காரணங்கள். ஒன்று, எனக்குப் பிடித்த ஆமையை காண்பதற்கு. இரண்டு, இரவு நேரத்தில் கடற்கரையில் நீண்ட தூரம் நடக்கும் வாய்ப்புக்காகவும், அது தரும் அரிய அனுபவத்திற்காகவும்.

உடனே என் விருப்பத்தை சொன்னேன். எனக்கும் மனைவி மதிக்கும் பதிவு செய்து, சிவராத்திரிக்கு முந்தைய தின இரவு ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். ஆவலோடு காத்திருந்து போனோம்.

[இந்நடை வாரத்தில் எல்லா நாட்களும் நடக்கும் என்றாலும், பொதுமக்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகள் மட்டுமே (அதுவும், ஜனவரி பாதியிலிருந்து மார்ச் இரண்டாம் வாரம் வரை ஆமைகள் அதிகமாக வரும் நாட்களில்தான்) பங்கேற்க முடியும்.]

முதல் ஒரு மணி நேரம் சிறு அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சம்மந்தமாக அதிலும் குறிப்பாக, ஆமைகள் குறித்தும், அது கொஞ்ச கொஞ்சமாக அழிந்து வருவதையும், அதற்கு ஏன் நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதையும் பற்றி பேசப்பட்டது. பிறகு மெல்ல அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.

யாருமற்ற கடற்கரையில் நாங்கள் மட்டும் (சுமார் நாற்பது பேர்கள்) கடலின் இரவழகையும், அது தரும் மென்குளிர்வையும், அலையொலிகளையும் ரசித்துக்கொண்டு நடந்து வந்தோம்.

திருவான்மியூர் கடற்கரை வரைக்கும் ஓர் ஆமை கூட கண்ணில் படவில்லை. சற்றுநேரம் அங்கே மணலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினோம். இருள் சிறிது சிறிதாக மங்கி பொழுது லேசாகப் புலர ஆரம்பித்தது.

பெசன்ட் நகர் கடற்கரை கடந்து அடையாறு கடலில் வந்து கலக்கும் இடம்நோக்கி பெருத்த ஏமாற்றத்தோடு போய்க்கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் ஆமை ஒன்று அலைக்குள்ளிலிருந்து வெளிப்பட்டு, சில நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்துவிட்டு, தனக்கான ஓர் இடத்தை தேர்ந்தெடுத்தது.

எவ்விதத்திலும் அதனை தொந்தரவு செய்யாமல் சற்று தூரத்தில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தோம். தன் நான்கு கால்களில் முன் இடது காலையும் பின் வலது காலையும் ஒருசேரவும், முன் வலது காலையும் பின் இடது காலையும் ஒரு சேரவுமாக அடுத்தடுத்து தனித்தனியாகக் கொண்டு ஓர் ஐந்து நிமிடம் வேகவேகமாக மண் (குழி) பறித்தது. பிறகு உடலில் சிறு அசைவுகள் மட்டும் தெரிய (அதுவும் பிரசவ வலியுடன் கூடியது), மிகமிகமிக மெல்லிய முக்கலுடன் இன்னோர் அரை மணி நேரம் பறித்த குழிக்குள் முட்டைகள் இட்டுவிட்டு, மறுபடியும் தன் கால்களால் முன்பிருந்தது போலவே மண்ணிட்டு, அத்தனை பாதுகாப்பாக தனது உடலால் ஓங்கி ‘தம்தம்’ என்று அடித்து மூடிவிட்டு, அப்படி ஒரு நிகழ்வே நடக்காதது போல அந்த இடத்தை முன்னால் இருந்தது மாதிரி சாமர்த்தியமாய் செய்துவிட்டு (அப்படியே மேற்சொன்ன அகநானூற்றுப் பாடல் விவரித்த காட்சி!), அங்கிருந்து நகர்ந்து ஓடிப்போய் கடல் அலைக்குள் புகுந்து மறைந்துபோனது.

சில நிமிடங்கள் நின்று பார்த்த நாங்கள், சத்தம் போடாமல் அப்படியே வரிசையாக கீழே உட்கார்ந்து, மொத்த நிகழ்வையும் துளித்துளியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதுவும் அதிகாலை நேரம், சிவராத்திரி தினம் தொடங்குகையில் கிழக்கு வானில் ஒளிர்ந்த பிறை நிலவையும், ஆமை பிரசவிப்பையும் ஒருங்கே பார்த்தது ஒருபோதும் வாழ்வில் மறக்கமுடியாதது. எப்போது நினைத்தாலும் பெரும் சிலிர்ப்பையும் சில்லிப்பையும் தரக்கூடியது.

எவ்வாறு நோக்கிலும் ஒன்றரை முழ நீள அகலத்துடன் இருந்திருக்கும் (ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் திருவான்மியூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய இதுபோன்ற ஓர் ஆமையை பார்த்து கண்ணீர் உகுத்திருக்கிறேன்). அத்தனை மகிழ்வுடன் அது முட்டையிட்டுப் போன இடத்தில் தோண்டி ஒவ்வொரு முட்டையாக எடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். மொத்தம் 146 முட்டைகள். ஒன்றை வாங்கி உள்ளங்கையில் சில நொடிகள் வைத்திருந்தேன். கருவறையில் இருந்து சற்று முன்னால் வெளிவந்த கதகதப்புடன் இருந்தது.

பிறகு முட்டைகளை பத்திரமாக கொண்டுபோய் பாதுகாப்பான இடத்தில் வைப்பது வரைக்கும் பார்த்திருந்துவிட்டு, கடற்கரை மணலில் அலையிசை கேட்டவாறு ஆசுவாசமாய் உட்கார்ந்து, வெவ்வேறு உருக்களில் குணதிசையில் தெரிந்த மேகத்திரள்களுக்குப் பின்னால் இருந்து ஒளிக்கைகள் நீட்டி அருக்கன் உதித்தெழுந்ததும் வீட்டுக்குப் புறப்பட்டு வந்தோம்.

வழிநெடுகிலும் ஆமைகள் பற்றியும், அதற்காக இரவு முழுக்க விழித்திருந்து அவற்றின் முட்டைகளை நாய் போன்றவற்றிடம் இருந்து காத்து பத்திரப்படுத்தி, குஞ்சு பொரித்ததும் கொண்டுபோய் கடலில் விடும் உள்ளங்கள் (ஆண் ஆமையின் பணியை செய்வோர்!) குறித்த எண்ணங்களும்தான் என் உள்ளக்கடலில் திரும்பத் திரும்ப அலை அலையாக வந்துகொண்டிருந்தன.

வீட்டுக்குள் நுழையும் முன் இவ்வாறு எண்ணிக் கொண்டேன். ‘பொருள் தேடித் திரிந்து, வெறுமே தேய்ந்து அழியும் மானிடர்கள் மத்தியில், இன்னோர் உயிர் அழியக்கூடாது என நினைத்து, அதற்காக தம் உறக்கம் தொலைத்து பாடுபடும் மனங்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.’ ஆம்!

இப்பிரபஞ்ச உயிர்த்தொகுதியில் மனிதர் முதல் மரங்கள் வரையான எல்லா தாவர சங்கமங்களும் ஒன்றுதான்; முக்கியம்தான். அவ்வாறு நினைப்பதும், அதன்படி நிற்பதும், செயல்படுவதும்தான் அறத்தில் தலையாயது; வாழ்வில் உன்னதம் மிக்கது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

அதையே எனது இந்த வாழ்நாள் முழுமைக்கும் சொல்ல நினைக்கிறேன். ஆம், ஆம், ஆம்!

*

(கொலுசு – டிசம்பர் 2023 இதழில் வெளியானது.)

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=