சொல்லன்றி எதுவுமற்றவன்! – 307
ராயல்டி தராதபோது ஏன் அவர்களைப் பிடித்துத் தொங்க வேண்டும்?
நல்லக் கேள்விதான். இங்கே நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவை எல்லாம் தெரிந்துதான், போனால் போகட்டும் என்றுதான், பல எழுத்தாளர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் தம் படைப்புகள் வாசகர்களிடம் போய் சேர்ந்தால் போதும் என்று எண்ணியே அவற்றில் தலையிடுவதில்லை.
ஆனால், இந்நிலை சமீப காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பிரபல எழுத்தாளர்கள் தொடங்கி புதிதாக எழுத வருபவர்கள் வரை பலர், தம் எழுத்தைக் கொண்டு யார் யாரோ பலன் அடைவதை விரும்பாமல் தாமாகவே அதனை வெளியிட்டு வருகிறார்கள். இது நல்லதொரு வரவேற்கத்தக்க முயற்சியே.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கூறவேண்டும். கடந்தாண்டு பேச்சுவாக்கில் மூத்த எழுத்தாளர் ஒருவர் வருத்தத்தோடு சொன்னார். ‘என் புத்தகங்களை கடந்த இருபது ஆண்டுகளாக வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்த பதிப்பாளர், எனக்கு இதுவரை ஒரு ரூபாய்கூட ராயல்டியாகத் தந்ததில்லை. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதுகூட எட்டிப் பார்க்கவில்லை. அப்படி ஒரு தொகை நம் புத்தகத்துக்கு வரும், அதை அவர்கள் கட்டாயம் தரவேண்டும் என்பதே இங்கே பல எழுத்தாளர்கள் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். அப்படியும் தெரிந்தவர்கள் கேட்டால், ஏதோ நமக்கும், நம் படைப்புகளுக்கும் அவர்தான் வாழ்க்கை தந்தது போல பேசுவார்கள். சிலர் பழகிய முகத்திற்காக தெரிந்தே கேட்காமல் விட்டுவிடுகிறார்கள். இதுதான் அவர்களுக்குப் பெரிய வசதியாகப் போகிறது.’
நல்லவேளை நாம் தப்பித்தோம் என மனத்துள் சொல்லிக் கொண்டேன்.
[இன்னும்]
*