சொல்லன்றி எதுவுமற்றவன்! – 237

எல்லாம் சரி, அதென்ன மண்ணில் விளையாடும் குழந்தைகள்?

(மெல்லிதாக இதழசைத்து முறுவலித்தவர், பார்வையால் தன் கால்கள் இரண்டும் மண்ணில் பதிந்திருப்பதைக் காட்டி)

மண்ணில் விளையாடாதக் குழந்தைகள் முழுமையான குழந்தைகளாக இருக்கவே முடியாது என்று தோன்றும். சிறுவயதில் என் அளவுக்கு மண்ணில் விளையாடியவர்கள் இருப்பார்களா தெரியாது. எப்போது பார்த்தாலும் மண்ணில்தான் விளையாடிக் கொண்டிருப்பேன். அதிலும், ஆற்று மணலை பார்த்துவிட்டால் போதும், அத்தனை உற்சாகமாகிவிடுவேன்.

மண்ணுடனான அந்தப் பிணைப்பும் நேசமும்தான், இப்பூமியெங்கும் இருக்கும் உயிர்கள் மீது அன்பு கொள்ளச் செய்தது. மண் குழந்தைகளுக்குள் கனிவை, கருணையை, நம்பிக்கையை உயிர்ப்பை, உயிர்கள் மீதான நேசத்தை விதைக்கவல்லது.

மண்ணோடு பிறந்து, மண்ணோடு வளர்ந்து, மண்ணோடு வாழும் யாரை வேண்டுமானாலும் பாருங்கள். தனித்துவமாகத் தெரிவார்கள். உயர்ந்த பண்பும், நேசமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக எம் ஐயாவை சொல்வேன்.

மண்ணில் விளையாட இன்றைக்கு எந்தக் குழந்தைகளையும் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதை ஏதோ கீழானச் செயலாக நினைக்கிறார்கள். அதனால், அரிதிலும் அரிதாக எங்கோ ஒரு சில குழந்தைகள் மட்டுமே இந்நகரில் விளையாட அனுமதிக்கப்படுவதை; விளையாடுவதை பார்க்கலாம். இது முற்றிலும் தவறு.

நாங்கள் சிறுவராக இருந்தபோது மண்ணில் விளையாடுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. விழுந்து காயம் பட்டால் கூட அந்த இடத்தில் இருக்கும் மண்ணை அள்ளி அதன்மீது போட்டுக் கொள்வோம். உடனே காயம் ஆறிவிடும். அத்தகைய மகத்துவம் கொண்டது மண்.

இன்றைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மண்ணில் வெறும் கால்களில் நடக்கிறேன். உட்கார்ந்து சிறுவன் போல விளையாடுகிறேன். நிச்சயம் எனக்குக் கிடைத்த இம்மண் விளையாட்டை எங்களது குழந்தைகளுக்கும் கொடுக்க நினைக்கிறேன்; கொடுப்போம்.

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 236

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=