தாவர சங்கமம் – 9 : தாலவிலாசம்

‘தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்;
பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்’
என்னும் பழமொழியை அடிக்கடி எங்களூர் மூத்தோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் நேரடிப் பொருள், தென்னை மரம் சீக்கிரத்தில் காய்க்கும். அதனால் அதை நட்டவன் தின்றுவிட்டுச் சாவான். பனை மரமோ காய்க்க வெகுகாலம் பிடிக்கும். ஆகையால் அதை நட்டவன் காய்க்காத வெறும் மரத்தை மட்டுமே பார்த்துவிட்டுச் சாவான் என்பதாக இருந்தாலும், இதன் உள்ளார்ந்த பொருள், பனை நட்டு வைத்தவன் அதன் நற்பலனைப் பெற்று தான் மட்டுமல்லாமல், தன் சந்ததியரும் வளமாக வாழ்வதை மகிழ்வுடன் பார்த்துவிட்டுச் சாவான் என்பதுதான்.
பனை பத்தாண்டுகளில் பயன் கொடுக்கத் தொடங்கும் என்பதை,
‘பெண்பிளையுந் தண்பனையும் பேணிவளர்த் தால்வருடம்
பண்பிலொரு பத்திற் பயன்கொடுக்கும்..’
என்கிறது, தாலவிலாசம் என்னும் அரிய நூல். அதிலும், பெண் பிள்ளையோடு ஒப்பிட்டு.
[தாலம் என்றால் பனை. விலாசம் என்றால் முகவரி. பனையின் முகவரி. அரிச்சந்திர விலாசம், டம்பாசாரி விலாசம் போல தாலவிலாசம்.]
இதை மட்டுமா சொல்கிறது? இன்னும் எத்தனையோவற்றை. அதுவும், தமிழின் பழம்பெரும் இலக்கிய இலக்கணங்களை தம் ஓலைகளில் ஏந்தத் தந்த நம் மண்ணின் ஆதித் தாவரங்களில் ஒன்றான பனை பற்றியும், அதன் அருமை பெருமைகள் பற்றியும். ஆம்!
யாழ்ப்பாணம் அருகிலுள்ள நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இயற்றிய இந்நூலானது… பனையில் ஆண் பனை, பெண் பனை என ஈரினங்கள் இருப்பதுபோல் கூந்தற்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதப்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை, லந்தர்பனை, எண்ணெய்பனை, நாட்டுப்பனை என வேறு 35 வகைகளையும்… இரும் பனை, குடை பனை, நெடும் பனை, மைஇரும் பனை, இணர்ப் பனை, இணர்ப் பெண்ணை, கருக்குவாய்ப் பெண்ணை, செழுங்கோட் பெண்ணை, தடவுநிலைப் பெண்ணை, திரள்அரைப் பெண்ணை, தீம்கள் பெண்ணை, நீடுஇரும் பெண்ணை, நெடுமாப் பெண்ணை, பராரைப் பெண்ணை, பரியரைப் பெண்ணை, பிணர்ப் பெண்ணை, பெருங்குலைப் பெண்ணை, பெருமடற் பெண்ணை, மடல்தாழ் பெண்ணை, மடலணி பெண்ணை, வண் கோட் பெண்ணை என தமிழ் இலக்கியங்களில் சிறப்புப் பெயர்களையும்…
இலாங்கலம், உடுபாதகம், உபதாகம், ஏடகம், ஐந்தரம், ஐந்தார், கரதாளம், கருங்குந்தி, கரும்புல், கற்பகம், காகக் கருப்பை, சடாபலம், தருராசன், தாலம், தாலி, தாளம், தாளி, திருணராசன், தீர்க்கதரு, துராரோகம், துருமசிரோட்டம், நீலம், புல், புற்பதி, புற்றாளி, பூமிபிசாசம், பெண்ணை, பொந்தி, போந்தை, மகாபத்திரம், மகோன்னதம், மதுரசம் போன்ற பல நிகர்சொற்களையும் கொண்ட… [தமிழகத்தில் திருப்பனந்தாள் – செஞ்சடையப்பர், திருப்பனையூர் – செளந்தரேஸ்வரர், திருப்பனங்காடு – தாலபுரீஸ்வரர், விரிஞ்சிபுரம் – மார்க்கபந்தீசுவரர், திருக்குறுங்குடி – வைஷ்ணவி நம்பி, பேரூர் – பட்டீஸ்வரர், திருவத்திபுரம் – வேதபுரீசுவரர், திருமழப்பாடி – வைத்தியநாதசுவாமி போன்ற பல கோயில்களில் தலமரமாகவும்… பனையபுரம், பனம்பாடி, பனம்பட்டு, பனையங்குளம், பனைஓலைப்பாடி, பனையஞ்சேரி, பனையூர், மேலப்பனையூர், கீழப்பனையூர், சிறுபனையூர், வைப்பனை, குஞ்சாபனை, கவார்பனை போன்ற எத்தனையோ ஊர்களின் பெயர்களிலும் (முன்னொட்டாக – இடையொட்டாக, பின்னொட்டாக) இருக்கும்…] நிகரிலா பெருமையுடைய பனையை கருவாகக் கொண்டது.
பனையின் வேர் முதல் குருத்து வரையான அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள், அவை கிடைக்கும் காலம், அவற்றிலிருந்து பயன்படு பொருட்கள் உருவாக்கும் விதம், அவற்றால் விளையும் நன்மைகள் என முழுக்க முழுக்க பனையின் மேன்மைகளையும், பயன்களையும் தமிழுலகம் அறிய செய்யுள் வடிவில் அதுவும், நானூறுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்தது.
சுவையுடன் கூடிய உவமைகளுடன், பனையின் பகுதிகளை குறிப்பிட தமிழில் வழங்கப்படும் சொற்கள் பலவற்றை இயம்புவது. 1940 ஆம் ஆண்டு தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. பனை மரத்தின் 801 பயன்களைக் கூறுவது.
பனை இருந்தாலும் நீண்டகாலம் வாழ்ந்து பயன்கொடுக்கும், வெட்டி வீழ்த்திய பின்னாலும் தூண் போன்ற பொருட்களாக இருந்து உதவும் என்பதை,
‘நட்டா யிரவருட நானிலத்திற் காய்த்துநிற்கும்
பட்டா யிரவருடம் பாழ்போகா’
என்றும், பனை விதை முளைத்து ஆடு மாடுகளுக்குத் தப்பி வளர்ந்துவிட்டால், அது பொய்யாமல் முனிவர்களுடைய வாய்மொழி என்றென்றும் உண்மையாக விளங்கிப் பயன் தருவதுபோல் தரும் என்பதை,
’முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மையோ
லெப்போதுநின் றுபய னீயுமே’
என்றும் பாடியிருக்கிறார் புலவர்.
ஓர் மரத்தைப் பற்றி அதுவும், அதன் பயன்களைப் பற்றி மட்டுமே ஒரு முழுநூலா அதுவும், செய்யுள் வடிவிலா? எனக் கேட்டால். ஆம்!
அப்படியொரு நூலினை யாக்க ஒரு படைப்பாளனை தூண்டியிருக்கிறது, செய்திருக்கிறது என்றால், பனையின் பெருமை எத்தகையதாக இருந்திருக்கவேண்டும்; இருக்கும்!

‘கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளைதந்த பஞ்சிஅம் குறுங்காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்’
எனக் குறுந்தொகையில் கள்ளில் ஆத்திரையானும் (293),
’இரும் பனை வெண் தோடு மலைந்தோன். அல்லன்;’
எனப் புறநானூறில் கோவூர் கிழாரும் (45),
‘வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு…’
எனப் பதிற்றுப்பத்தில் கபிலரும் (70),
‘பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!’
எனத் தனிப்பாடலில் சத்தி முத்தப் புலவரும்,
‘பிளிறு மேகத்தைப் பிடி எனப்
பெரும் பனைத் தடக் கை
களிறு நீட்டும்’
எனக் கம்பராமாயணத்தில் கம்பரும் (2045) பாடியுள்ள பனையின் மட்டையானது (ஓலையின் காம்பு)… இரு புறமும் கூரான கருக்குடன் வாள் போல் தோற்றமளிப்பதையும், இது வேண்டியன தந்து (கள், நுங்கு, பனம்பழம் போன்றவை) மக்களைக் காப்பதையும் கூறும்போது,
‘……… பொல்லாக்
கலிகொன்று காமர் குடைக்கீழ்ப் – பொலியும்
உருக்குவாள் வேந்தன்போ லோரிருபாற் கூருங்
கருக்குவாள் கொண்டுலகைக் காக்கும்’
என்று பகை ஒழித்து வெண் கொற்றக் குடையின் கீழ் ஆட்சி செய்யும் உருக்கு வாளை ஏந்திய வேந்தனை பனைக்கு உவமையாகக் கூறுகிறார், இந்நூலின் ஆசிரியரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
தமிழின் செய்யுள் நடை மரபுக்கு ஏற்ப முதலில் பிள்ளையாரை வணங்கி, வெண்பா வகையில் அமைந்த காப்புப் பாடலுடன் தொடங்குகிறது நூல்.
‘மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னர்வரு
போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
நாதனே முன்னே நட’
அதன்பின் ‘நூல்’ என்ற தலைப்பில், கடவுள் வணக்கமாக மற்றுமொரு வெண்பாப் பாடலோடு நூல் பகுதி தொடங்கி… பனை பூமியில் உண்டான வரலாறு, பனை உண்டாக்கும் வகை, கங்குமட்டை, பாளை, குரும்பை, நுங்கு, பணுவில், சார்வாய், பழம், பனாட்டு, கிழங்கு, பனையோலை, நார் என வரிசையாக ஒவ்வொன்றைப் பற்றியும் கவிநயத்தோடும், சொற்சுவையோடும் கூறி, இறுதியில் மழை, பூமி, உயிர்கள், அறம், பனை, தமிழ் ஆகியவற்றை வாழ்த்தும் ஓர் அழகான வெண்பாவுடன் நூல் நிறைவடைகிறது.
‘பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளுங்
கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
நற்றமிழும் வாழி நயந்து.‘
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். அவ்வகையில், பனை ஓலை எதற்கெல்லாம் பயன்படும் என்பதை,
‘……… – மன்னுபனை
யோலைதனை யொன்னுவிட் டோர்வருடம் வெட்டிவெயில்
மேலுலர விட்டு மிதித்தடுக்கிச் – சாலவும்
வேலி யடைக்கலாம் வீடுகளும் வேயலாம்
கோலக் குடில்கட்டிக் கொள்ளலாம் – மேலுந்தான்
வாரி விளையா வயற்கெருவராய் போட்டுவிட்டால்
வீரியமாய்ச் செந்நெல் விளையுங்காண்…’
என்று கவினுறப் பாடியிருக்கிறார் புலவர். அதுவும், ஓலையை எவ்வாறு வெட்டவேண்டும் என ஆரம்பித்து, வெட்டிய ஓலையை எப்படி வெயிலில் உலர்த்தவேண்டும். அது வேலிக்கும், வீடுகளுக்கும், குடிலுக்கும் பயன்படும் விதம். விளையாத வயலுக்கு எருவாய் போட்டால் எவ்வாறு வீரியமாய் செந்நெல்லை அது விளைவிக்கும் என்பது வரைக்கும் கூறியிருக்கிறார்.
பனையோலை பற்றியே இவ்வாறென்றால்… பனையின் மற்ற பாகங்களான பாளை, குரும்பை, நுங்கு, பழம், கிழங்கு பற்றியெல்லாம் இன்னும் எவ்வாறு பாடியிருப்பார்?
‘ஒரு மரத்தையும் நடாதவனுக்கு, இன்னொரு மரத்தை வெட்ட எந்த அருகதையும் இல்ல’ என்பார் எங்களூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அப்துல் சத்தார். ‘மரங்கள நேசிக்காதவன், நல்ல மனுசனாவே இருக்கமுடியாது’ என்பார் அண்மையில் தனது 102 ஆம் வயதில் இறந்துபோன என் பாட்டி.
இங்கே ஒரு புலவனை ஒரு தாவரம் ஒரு மொத்த நூலையே அதுவும், கலிவெண்பா என்னும் பா வடிவைக் கொண்டு பாடவைத்திருக்கிறதென்றால், அவன் உயிர்களை அதிலும் குறிப்பாக, தாவரத்தை (பனையை) எந்தளவுக்கு நேசித்திருக்க வேண்டும்? அதனோடு பின்னிப்பிணைந்த ஓர் அழியாத அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும்?
இங்கே இன்னொரு சுவாரசியமானத் தகவல். இப்புலவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்த ஈழத்திற்கு பனை என்றொரு பொருள் உள்ளதாக ஆய்வாளர் தொ.பரமசிவன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்த்தாலும் பனை அவரது வாழ்வில் எத்தகையதோர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை ஆழ அறிந்துகொள்ளலாம்.
என்னிடம் பலரும் எனது ‘நிலைத்தினை’ நூலை முன்வைத்து கேட்பார்கள். ‘எப்படி மரங்களப் பத்தி, இவ்ளோ பெரிய நூல் எழுத முடிஞ்சது?’. நான் மென்மையாகப் புன்னகைத்து, இத்தாலவிலாசம் நூல் பற்றியும், அதன் ஆசிரியர் பற்றியும் சொல்லிவிட்டு, ‘நம் முன்னோர்கள் இப்படித்தான் சங்ககாலம் தொட்டு தாவரங்களோடும், சங்கமங்களோடும் ஒன்றரக் கலந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களது இலக்கியப் படைப்புகள், ஓவியம், சிற்பம் யாவற்றிலும் இத்தனை வகையான உயிர்கள் இடம் பெற்றிருக்கின்றன. நாம்தான் அவற்றையெல்லாம் விட்டு விலகி வெகுதூரத்துக்கு வந்து உயிரற்ற எதையெதையோ பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எழுதிக்கொண்டிருக்கிறோம்’ என்பேன்.
சிலர் சட்டெனப் புரிந்துகொள்வார்கள். சிலரோ ஏதோ மாதிரி என்னை பார்ப்பார்கள். அவர்களிடம், ‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் நிலத்தை பாகுபாடு செய்த நம் திணை மரபு தொடங்கி… வாகை, வெட்சி, தும்பை, கரந்தை, உழிஞை, காஞ்சி, நொச்சி, போந்தை என வெற்றியை வெளிப்படுத்த தாவர மலர்களைச் சூடிக்கொண்ட பாங்கையும்… குறிஞ்சிப்பண், மருதப்பண், முல்லைப்பண், கொன்றைப்பண், ஆம்பல்பண், மாதவிப்பண் என இசைப்பிரிவில் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்திய நேர்த்தியையும்… குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மருத யாழ், பாலை யாழ், நெய்தல் யாழ் என இசைக் கருவிகளில் தாவரத்தின் பெயர்களை வைத்திருக்கும் சிறப்பையும்… நண்டின் கண்ணுக்கு நொச்சி அரும்பு, பல்லி முட்டைக்கு புன்னை அரும்பு, கிளியின் மூக்குக்கு அவரைப் பூ, அணில் பல்லுக்கு முள்ளி மலர், மயில் குடுமிக்கு வாகைப்பூ எனத் தாவரங்கள் தொடர்பான உவமைகள் பண்டைய இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதையும்’ சொல்வேன். எதுவும் பேசாமல் போய்விடுவார்கள்.
இப்பிரபஞ்சம் முழுவதும் தாவர சங்கமத்தால் ஆனதென்றால், மனிதன் அவற்றில் ஓர் அங்கம். அதனால்தான் இப்புலவன் தன்னைப் போல தன்னுடன் தன்னைச் சுற்றி இருக்கும் இன்னோர் அங்கமான பனையை இத்தனை நேசித்து தெரிந்துகொண்டு, தம் சொற்களில் வடித்து வருங்கால சந்ததிகளுக்குப் பயன்படும்படி தந்துவிட்டுப் போயிருக்கிறான்.
அவ்வகையில் இத்தாலவிலாசம் என்னும் அரிய மேன்மிகு நூல், ஒரு சங்கமத்தால் ஓர் தாவரத்தைப் பற்றிப் பாடப்பட்ட மிகச் சிறந்த நூல்! ஆம், என்னைக் கேட்டால் அப்படித்தான் சொல்வேன்.
‘தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்;
பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்’
இது பழமொழி; பழையமொழி.
‘பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்;
பனைய பாடி வச்சவன் சாகவே மாட்டான்’
இது என்மொழி; புதுமொழி.
*
(கொலுசு – ஆகஸ்ட் 2023 இதழில் வெளியானது.)