சொல்லன்றி எதுவுமற்றவன்! – 225
இதைக் கொஞ்சம் புரியும்படி விளக்கமாக சொல்லமுடியுமா?
சொல்கிறேன். எனக்குத் தெரிந்த மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர். ஓர் இதழின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். அத்தனை நேர்மையாக காரசாரமாக யார் என்று பார்க்காமல் எழுதுவார். அவரைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். அதிகம் அவரிடம் பேசியதில்லை என்றாலும், நான்கைந்து தடவை பேசி இருக்கிறேன். பெருமையாக உணர்ந்த நாட்கள் அவை.
அவர்மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தேன். அப்படிப்பட்டவர் திடீரென்று ஒருநாள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஊடகத்தில் போய் சேர்ந்துகொண்டு, அந்த கட்சிக்காரராகவே மாறிவிட்டார். அன்று அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் கிழிகிழியெனக் கிழித்தவர், இன்று அக்கட்சியின் பெருமை பாடி அதன் மூலமாகக் கிடைக்கும் ஆதாயத்தை அடைந்துவருகிறார்.
பத்திரிகையாளருக்கு எது இருக்கிறதோ இல்லையோ, முதுகெலும்பு இருக்கவேண்டும் என்பார்கள். அப்படி ஒன்று இருந்ததையே மறந்துவிட்டு, அக்கட்சிக்காக இன்று இரவு பகலாக உழையோ உழையென்று உழைத்து வருகிறார். நாளை அவர் சட்டமன்ற உறுப்பினராகவோ, ஏன் மாநிலங்களவை உறுப்பினராகவோ கூட ஆகலாம்.
என்ன ஆகி என்ன பிரயோஜனம்? ஒரு நேர்மையான பத்திரிகையாளராக கம்பீரமாக வளம் வந்தவர், இன்று சுயம் இழந்து ஆதாயம் தேடி மானம், மரியாதை எல்லாம் தொலைத்து பச்சோந்தியாக இருப்பதைப் பார்த்து என் போன்றவர்கள் காரித் துப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை இனி அவரால் ஒருபோதும் துடைத்துவிட முடியாது.
[இன்னும்]
*