தாவர சங்கமம் – 8 : புறடியாத்தா

பத்து வயதிருக்கும். எங்கள் வீட்டின் பின்னால் இருந்த பூவரச மரத்தடியில் கோயில் கட்டி, பந்தல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஐயாவை தேடிக்கொண்டு வந்திருந்தார், அவரது நண்பரான இஸ்லாமியர் ஒருவர்.
அரை மணி நேரம் பேசியிருப்பார்கள். விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த எனக்கு, அவர்கள் பேச்சின் நடுவில் உச்சரித்த ‘சாமி, பொங்கல், பொறடியாத்தா, ஞாத்திக்கெழம’ போன்ற சில சொற்கள் மாத்திரமே காதில் விழுந்தது.
அவர் போனதும் எழுந்துபோய் கட்டிலில் உட்கார்ந்து காசிரிக்கா நாரில் கையிறு திரித்துக்கொண்டிருந்த ஐயாவிடம் கேட்டேன். ”எதுக்குய்யா, அந்த பாயி வந்துட்டுப் போறாரு?’’
என் கேள்விகளில் எப்போதும் மகிழும் ஐயா, தனக்கே உரிய தனித்தன்மையுடன் மென்மையாகப் புன்னகைத்துவிட்டு சொன்னார். ”அதுவா… வர்ற ஞாத்திக்கெழம பொறடியாத்தாவுக்கு வந்து, பொங்க வக்கசொல்லி கூப்டுட்டுப் போறாங்க.’’
முதலில் தோன்றவில்லை. சிலநொடி யோசனைக்குப் பின்புதான் தோன்றியது. கேட்டேன். ”அவுருதான் பாயிமாராச்சே… அவுரு எதுக்குய்யா நம்மள வந்து பொங்குலு வக்க சொல்லி, கூப்டுட்டுப் போறாரு?’’
”அது ஏன்னு… வர்ற ஞாத்திக்கெழம, நீயே வந்து பாத்துத் தெரிஞ்சிக்க.’’
ஐயா எப்போதும் இப்படித்தான். பலதை கேட்டதும் உடனுக்குடன் ஒளிவுமறைவின்றி எனக்குப் புரிவதுபோல் சொல்லிவிடுவார். சிலதை மட்டும் நேரில் வந்து பார்த்து தெரிந்துகொள்ளச் சொல்வார்.
எனக்கும் அது ஒருவகையில் மகிழ்ச்சிதான் என்றாலும், அதுவரைக்கும் பொறுக்கமுடியாமல் என் அம்மாவிடம் ஆரம்பித்து, அண்ணன்கள் வரைக்கும் ஐயாவுக்குத் தெரியாமல் ரகசியமாகப் போய் கேட்டுப் பார்த்தேன். அவர்களோ, என்னை விட புத்திசாலிகளாய், ‘இவன் எதுக்கு ஐயாகிட்ட கேக்காம… நம்மக்கிட்ட வந்து கேக்கறான்?’ என்னும் தொணியில் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ”போயி ஐயாகிட்டயே கேளு, சொல்லுவாரு’’ என்றார்கள்.
இப்படியே தவிப்புடன் ஒருவாரம் கழிந்து, ஐயா சொன்ன அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்துவிட்டது. அதிகாலையில் அவருடன் சேர்ந்து நானும் சீக்கிரமே எழுந்து குளித்துக் கிளம்பி, எங்கள் வீடிருக்கும் ஊரின் முதல் தெருவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தாண்டி நிலத்தின் நடுவில் தனித்திருக்கும் அந்த பாய் வீட்டுக்குப் போனேன்.
அங்கே எங்கள் வருகைக்காக காத்திருந்த பாய், ஐயாவை வரவேற்று பொங்கல் வைக்கத் தேவையானப் பொருட்களை அவரிடம் தந்துவிட்டு, ஒரு பையில் பூசைக்கு வேண்டிய பொருட்கள் சிலவற்றை தான் எடுத்துக்கொண்டு, அவர் வீட்டுக்குப் பின்னால் இரண்டு துண்டு தாண்டி மரஞ்செடிகொடிகள் சூழ சிறு காடு போல் அடர்ந்திருந்த கல்லாக்குட்டையின் மேற்குப் பக்க மல்லாட்டைக் கொல்லியோரம் கூட்டிப்போனார்.
எதுவும் பேசாமல் நான் பாட்டுக்கு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்கள் பின்னாலேயே போனேன்.
பெரிதும் இல்லாத, அதேநேரம் மிகச் சிறிதாகவும் இல்லாத வேப்ப மரத்தடியில் இருந்த பெண்ணின் உருவம் பொறித்த கல்லின் முன்னால், கொண்டுபோன பொங்கல் கூடையை இறக்கி வைத்துவிட்டு, மடித்துக் கட்டியிருந்த தன் வேட்டியை கீழே அவிழ்த்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டார் ஐயா.
சற்று தள்ளி என்னருகில் நின்றிருந்த பாய், தன் கையில் வைத்திருந்த பூசைப் பொருட்கள் இருந்த பையை என்னிடம் தந்துவிட்டு அங்கிருந்து போனதும் ஐயாவிடம் கேட்டேன். ”இது என்ன சாமிய்யா?’’
நொடியும் தாமதிக்காமல், ”பொறடியாத்தா’’ என்றார்.
பின்னாலேயே, ”இது நம்ம சாமியா? இல்ல, அதோ போறாரே பாயி… அவுங்க சாமியாய்யா?’’ என்று கேட்டேன்.
பல் தெரியாமல் சிறிதாக உதடசைத்து சிரித்துவிட்டுச் சொன்னார். ”எல்லாரோட சாமியும்தான்.’’
நானோ விடாமல், ”அவங்களுக்கு அல்லா மட்டும்தான் சாமின்றாங்க. நீ என்னடான்னா… இது அவுங்களுக்கும் சாமின்றயேய்யா?’’ என்றேன்.
என் சாமர்த்தியமானக் கேள்வியை கேட்டு சத்தமாகச் சிரித்துவிட்டு சொன்னார். ”அட மடையா, இது அவுங்க முன்னவங்க காலங்காலமா கும்டுனு வர்ற சாமி. நம்மள மாரிலாம் அவுங்க கும்டலனாலும்… இந்த சாமிக்கு அவுங்க குடும்பம் ஆண்டு வுடாம பொங்குலு வச்சினு வர்து. அதாலதான் சொன்னன், இது அவுங்க சாமியும்தான்.’’
புரிந்தது போலவும், அதேநேரம் புரியாதது போலவும் விழித்தேன். பிறகு விளக்கமாகவே சொன்னார்.
”ஒரு காலத்துல இவுங்க வூட்டாருங்க ரண்டு பேரு (தாயும் மகளும்)… இதோ, இந்தக் கொல்லிலதான் மல்லாட்டக்கி களவெட்டினு இருந்துகீறாங்க. அப்ப எங்கருந்தோ புள்ளய கடிக்க வந்த பாம்ப… இந்த வழியா அதோ, அந்த மரிசிமேல நடந்துபோன யாரோ ஒரு மகராசி பாத்துட்டு, துடிதுடிச்சி ஓடியாந்து… அதுக்கிட்ட கடி வாங்கி புள்ளய காப்பாத்தி, உயிர வுட்டுக்கீறா. அதப் பாத்த தாயிக்கும் புள்ளக்கும் என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாம கத்திக் கூசப்போட்டு… அக்கம் பக்கத்து கொல்லில கீறவங்கலாம் வந்ததும் விசியத்த சொல்லிகீறாங்க.
அப்பறம் எல்லாரும் சேந்து ஊரு பேரு தெரியாத மகராசிய கையெடுத்துக் கும்டுட்டு தூக்கினுப் போயி… மாரியாத்தா கோயிலு முன்னால வச்சு நடந்தத ஊராருகிட்ட சொல்லிகீறாங்க.
அப்பதான் ஊருக்குப் புறத்தால வந்து நம்மூரு புள்ளய காப்பாத்தன தாயிகாரிய… இனிமேலு ‘புறடியாத்தா’ன்னு நாமலாம் செல வச்சி சாமியா கும்டலாம். இவுளுக்கு பொங்குலு வக்காம இனி ஊருல எந்தத் திர்ணாவும் நடக்கக் கூடாதுன்னு முடுவுகட்டி… சாதி மதம் பாக்காம எல்லாரும் கூடி, அவ்ளோ விமர்சியா தூக்கினுப் போயி… இவள அடக்கம் பண்ணிகீறாங்க.
அதுக்கப்பறம் ஒரு நல்ல நாளா பாத்து, இந்தப் பொறடியாத்தாவுக்கு ஒரு செல செஞ்சு எடுத்தாந்து… இவ உயிரவுட்ட இந்த எடத்துலயே வச்சி… அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் கடவுளா கும்டுனு வர்றாங்க.
ஊருல திர்ணா நடந்தாலும் நடக்கலனாலும் செரி. இதோ, இந்த பாயிமாருங்க குடும்பம் மட்டும் நன்றி மறக்காம இவுளுக்கு பொங்குலு வச்சி… என்னிக்கோ அவுங்க வூட்டுப் புள்ளய காப்பாத்தனதுக்கு கைமாறு செஞ்சினு வர்றாங்க.’’
[இத்தெய்வம் குறித்து இன்னும் விரிவாக எனது ‘முரம்பு’ நாவலில் எழுதியிருக்கிறேன்.]
ஐயா தன்னை மறந்து கொட்டும் அருவி போல் சொல்லி முடித்ததும் கேட்டு சிலிர்த்துப் போனேன். இதுதான் நம் மண்ணின் உண்மையானப் பண்பாடு, கலாச்சாரம் என எண்ணி வியந்தேன்.
அதுமுதல் எங்களூரில் பாதிக்குமேல் இருக்கும் இஸ்லாமியர்கள் மீது மதிப்பும் மரியாதையும் இன்னும் பலமடங்கு அதிகமானது.
நினைவு தெரிந்த நாள்முதல் எங்களூர் இஸ்லாமியர்களுடன் மாமன் – மச்சான், அண்ணன் – தம்பி, பாட்டி – தாத்தா, சித்தி – சித்தப்பா போன்ற உறவுமுறைகளுடன் பேசிப் பழகி வருகிறேன். ஒருநாளும் சினிமாவில் காட்டுவது போல அவர்கள் மதவெறியுடனும், தீவிரவாத எண்ணத்துடனும் இருந்து பார்த்ததில்லை. எங்கள் திருவிழாவில் அவர்களும், அவர்கள் திருவிழாவில் நாங்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி கலந்துகொள்வோம். அதேபோலதான் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுகளிலும் உரிமையுடன் பங்கேற்போம்.
பொங்கலிட்டு சாமி கும்பிட்டு முடித்ததும் சிறிது திருநீறை எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, உடைத்த தேங்காயின் நுனி முடியோடு சேர்த்து தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த பாயிடம் தந்துவிட்டு, மற்றதையெல்லாம் எடுத்துப் பொங்கக்கூடையில் வைத்து தூக்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி நேராக வீட்டுக்குப் போகும் வழியில் கேட்டேன். ”பாயிமாருங்கதான் பொட்டுலாம் எதுவும் வக்க மாட்டாங்களேய்யா… அப்பறம் எதுக்கு அவுங்குளுக்கு திர்நூறு தந்த?’’
மிதமான வேகத்தில் நடந்துகொண்டிருந்தவர் சட்டென நின்று என் முகத்தைப் பார்த்து சொன்னார். ”பொட்டு வக்கலன்னா என்ன… கழுத்துல இட்டுப்பாங்க. இல்லனா… ரவ எடுத்து தண்ணில போட்டுக் குடிப்பாங்க.’’ வியப்பாக இருந்தது.
எங்கள் கிராமம் குறித்தும், அங்கே வாழும் மக்கள் குறித்தும், அவர்கள் வணங்கும் தெய்வங்கள் குறித்தும், அதிலும் குறிப்பாக இந்தப் புறடியாத்தா குறித்தும் எண்ணும்போதெல்லாம்… இச்சாதி, மதம், கடவுள், அரசியல் எல்லாம் மிகமிகப் பிந்திதான் மனிதர்களுக்குள் வந்ததென்றும், அதற்கு முன் எல்லோரும் ஒன்றாகவே இருந்தார்கள் என்றும், இன்னும் சொல்லப்போனால் புல் முதல் மனிதர் வரையிலான அனைத்து ஜீவராசிகளும் நிகராகவே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஒன்றையொன்று சார்ந்து ஓர் ஒத்திசைவுடனே இருந்திருக்கின்றன என்றும், அதன் தாக்கம் இப்போதும் மனித மனத்துக்குள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும், அதற்கான நிகழ்கால சாட்சியாக இப்பொறடியாத்தா இருக்கிறாள் என்றும் தோன்றும். ஆம்!
புறநானூறில் ஓர் அழகியக் காட்சியுண்டு (323). பெயர் தெரியாத புலவன் ஒருவன் யாத்தது.
‘புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்…’
புலியிடம் அகப்பட்டு இறந்துபோன காட்டுப்பசுவினுடைய கன்றிற்குச் சினம் நீங்கிய முதிய பசுவினுடைய கன்று, அதனைச் சேர்த்துக் கொண்டு, தன்பாலை ஊட்டி உண்பிக்கும் என்பது இதன் பொருள்.
விரிவாகச் சொல்லப் புகுந்தால்… புலியினால் தாய்ப்பசு (அதுவும் காட்டுப்பசு) கொல்லப்பட்டமையால், அதன் கன்று தாயின்றித் தவிப்பது அறிந்த இன்னொரு பசு, அது வேறு இனத்தைச் சார்ந்தது என்ற சினமின்றி, அதன் தனிமைகண்டு தன் கன்றைப்போல் அக்கன்றை அறவணைத்துப் பாலூட்டி வளர்ப்பதாயிற்று. எத்தனை உயர்வானக் காட்சி; எண்ணம் பாருங்கள்!
இப்பிரபஞ்ச உயிர்களுக்குள் ஏது சாதி, மதம், இனம், மேல், கீழ். எல்லாம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லை என்பதற்கு இக்காட்சி ஓர் உதாரணமாய் எப்போதும் தோன்றும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான இச்சங்கப் பாட்டின் தொடர்ச்சியாய் வைத்துப் பார்க்கையில், எங்களூர் பொறடியாத்தா… ஓர் இந்துத் தாயாக தன்னை நினைத்துக்கொண்டு, இன்னோர் இஸ்லாமியக் குழந்தையை காப்பாற்றவில்லை. தம் போன்ற தாவர சங்கமத்துள் ஓர் உயிரை தன் இன்னுயிர் ஈந்து காத்திருக்கிறாள். அதை ஏதோ பெருமைக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அவள் செய்யவில்லை. தன் கடமையாக, தனது அன்பின், தாய்மையின் வெளிப்பாடாக செய்திருக்கிறாள். அத்தியாகத்தால்தான் அவள் இப்போதும்; ஏன் எப்போதும், மதம் என்னும் மதம் கடந்து தெய்வமாக வணங்கப்படுகிறாள்; வணங்கப்படுவாள். ஆம்!
‘அரவம் தீண்டப்போன துலுக்கப் பிள்ளையை
காத்தாள் இந்துத் தாய்
மதம் பாராமல் தன்னுயிரீந்து.’
(கொலுசு – ஜூலை 2023 இதழில் வெளியானது.)
*