தாவர சங்கமம் – 5 : தோழப்பர்

ஞமலி, ஞாளி, கதநாய் என சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாய்க்கும் எனக்குமான பந்தம் மிக நீண்டது; நெடியது. அதிலும் நாய்களை அவ்வளவாகத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சாதவன்; விளையாடாதவன் என்றாலும், அதன்மீது எப்போதும் மிகுந்த அன்போடும் மதிப்போடும் இருப்பவன். ஆம்!
அப்போது நான் எங்களூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக நினைவு. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதுவும், காலை உணவுகூட உண்ணாமல், எங்கள் வீட்டிலிருந்த பெரிய அன்னக்கூடையில் பெங்கலிடத் தேவையான பூஜைப் பொருட்களை வைத்துத் தூக்கிக்கொண்டு ஐயா முன்னால் நடக்க, அவர் பின்னாலேயே நான் நடந்து தென்பெண்ணை ஆற்றின் மறுகரையில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் சிறு காடுபோல் மரஞ்செடிகொடிகள் அடர்ந்திருந்த இடத்திற்கு நடுவில் இருக்கும் ஊமை வேடியப்பன் கோயிலுக்கு முதல்தடவையாகப் போயிருந்தேன்.
ஏற்கெனவே அக்கோயில் குறித்தும், அங்கிருக்கும் சாமி குறித்தும் ஓரிருவர் சொல்ல அதுவும், ‘ஊமை வேடியப்பன் சாமி, இருக்கற சாமிங்கள்லயே கோவக்கார சாமி. யாரு என்ன தப்புப் பண்ணிட்டு அந்தப் பக்கம் போனாலும் செரி, சும்மா வுடமாட்டாரு’ எனக் கேள்விப்பட்டிருந்தவன் பெரும் பயத்தோடவே சென்றிருந்தேன்.
காரணம், அதற்கு முன்தினம்தான் என் வயதொத்த சிறார்களுடன் கூடிக்கொண்டு நான்கைந்து ஓணான்களை தென்னை ஓலைக்குச்சியில் சுருக்கிட்டுப் பிடித்து, அதன் வாயில் துண்டுபீடியில் நெருப்பிட்டுச் செருகி அறியாமையில் துன்புறுத்தியிருந்தேன்.
சென்று சிலநொடி கூட ஆகியிருக்காது. ஊமை வேடியப்பனை அதிலும், அவரோடு அக்கல்லில் இருந்த நாயின் வடிவத்தை பார்த்ததும் மிகுந்த உற்சாகமாகி, “இது நாயிதானய்யா?” என்றேன் ஐயாவிடம்.
எதுவும் சொல்லாமல் திரும்பிப் பார்த்து ‘ஆமாம்’ எனத் தலையாட்டினார். உடனே அவரிடம், ”அப்ப நாயும் சாமியாய்யா?” என்று கேட்டேன், அந்த வயதுக்குரிய துடுக்குத்தனத்துடன்.
மெல்ல இதழசைத்துப் புன்னகைத்தவர், ”ஆமா, இந்த நாயிதான் ஊமவேடிப்பனோட வாகனம்” என ஆரம்பித்து, ”இந்த நாயிமேல ஏறினுதான் சாமி எப்பயும் வருவாரு. யாரு என்ன தப்புப் பண்ணாலும் செரி… அதப் பாத்துனே இருந்து தண்டன தந்துருவாரு. அதோட நம்ம சுத்துப்பட்டுல கீற எல்லா ஊருங்களயும்… இந்த சாமிதான் ராவுபகலா காவலு காக்கறாரு. இவரமீறி நம்மூருல வந்து ஒரு கெடுதலு யாராலயும் பண்ணிட்டுப் போவமுடியாது, பாத்துக்க’’ என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்லிமுடித்தார்.
ஆச்சர்யத்தோடு ஊமை வேடியப்பனையும், அவர் அருகிலிருந்த நாயையும் ஆசைதீரப் பார்த்திருந்து, பொங்கல்வைத்து சாமிக் கும்பிட்டுவிட்டு வீடு வந்தும், சில தினங்களுக்கு அதைப் பற்றியே எதிர்படுவோரிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.
அதன்பிறகு இரண்டுமூன்று தடவை ஆற்றில் வெள்ளம் வரும்போது அவ்வழியாகச் சுற்றிக்கொண்டு பக்கத்தூரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளிக்குப் போகையில் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒருவித அச்சத்தோடும், ‘நம்ம சாமிதான, நம்மள ஒண்ணும் பண்ணாது’ என்னும் அதீத நம்பிக்கையோடும்.
பின் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தபோதுதான் ஒருநாள் தற்செயலாக, அது சாமிக்கல் இல்லை நடுகல் என்பதையும், அதிலிருக்கும் உருவம் ஊமை வேடியப்பன் இல்லை கருந்தேவகத்தி என்பதையும், உடன் இருக்கும் நாய் அவர் வாகனம் இல்லை அவனோடு வீரமரணம் அடைந்த அவன் நேசத்துக்குரிய நாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுடைய முப்பத்து நான்காவது ஆட்சியாண்டில் (கி.பி. 624இல்) நடப்பட்ட இந்நடுகல், தொறுப்போரில் அதாவது, வாணகோ அரைசரின் மருமக்கள் பொற்றொக்கையார் இளமகன் கருந்தேவகத்தி, தன் எருமையைக் காக்கும் கரந்தைப் போரில் இறந்துபட, அப்போது அவனுடன் காவலுக்கிருந்த கோவிவன் என்னும் நாய் (சில ஆராய்ச்சியாளர்கள் அது ‘கோவிலன்’ என்றும், ‘கோபாலன்’ என்றும் சொல்லப் பார்க்கலாம்) இரு கள்ளனைக் கடித்து எருமைத் தொறுவைக் காத்து அவ்வீரச்சமரில் இறந்துள்ளது. அதன் நினைவாக அவ்வீரனுக்கும், அவனது வீரநாய்க்கும் எடுக்கப்பட்டது.
எடுத்தனூர் (தற்போது எடத்தனூர் என அழைக்கப்படுகிறது) என்னும் எங்கள் பக்கத்தூரின் மேற்கு எல்லையில் இருக்கும் இந்நடுகல்லில், வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் கைகளில் வில்லும் குறுவாளும் ஏந்தியிருக்க, அவனது இடதுகால் பக்கத்தில் சிமிழும் கெண்டியும், வலது கால் பக்கத்தில் நாயின் உருவமும், மேற்பக்கத்தில் இருதோரணங்களும் செதுக்கப்பட்டுள்ளது. கூடவே,
‘கோவிசைய மயிந்திரபருமற்கு முப்பத்து நான்காவது
வாணகோ அரைசரு மருமக்கள் பொற்றொக்கை ஆர்
இளமகன் கருந்தேவக் கத்தி தன்னெருமைப் புறத்தே
வாடி பட்டான் கல்’
என்னும் கல்வெட்டு வாசகம் அதன் மேற்பகுதியிலும்,
‘(கோவிவ)ன் னென்னுந் நாய் இரு கள்ளனைக்
கடித்துக் காத்திருந்தவாறு’
என்னும் கல்வெட்டு வாசகம் வலப்பகுதியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
தன் தலைவனுக்குத் துணையாகப் போராடி மடிந்த நாய்க்கு எடுக்கப்பட்ட இந்நடுகல்லானது, வீரனுக்குத் துணைபுரியும் நாய்களின் வீரத்தையும், தியாகத்தையும் காட்டி நிற்பது. அதோடு, தன் தலைவன் அல்லாத அவன் சார்ந்த பிற உயிர்களுக்கு துன்பம் வரும்போதும் தன் உயிரை துச்சமாக எண்ணி எதிர்த்துக் காத்ததையும், உயிர்விட்டதையும் பறைசாற்றுவது. ஆம்!
எப்படி யானை, குதிரை போன்ற விலங்குகள் போர்புரியும் வீரர்களுக்குப் பயன்பட்டதோ, அதுபோலவே தம்மைப்பேணும் தலைவர்களுக்கு நாய்கள் பயன்பட்டதையும், அதிலும் மனிதன் தொடக்க காலத்தில் விலங்குகளை வேட்டையாடி அவைகளின் இறைச்சியைத் தின்றபோது அவனது வேட்டைத் தொழிலுக்கு உதவும்பொருட்டு நாய்களை பழக்கப்படுத்தியதையும், நாய்களின் துணையுடன் வேட்டைத்தொழில் புரியும் வேடரை ‘நாயாடி’ என அழைக்கும் மரபு தமிழகத்திலும் கேரளத்திலும் இன்றும் இருப்பதையும் பார்க்கலாம். [மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு நாய்தான் என்பது ஈங்கோர் உபரித் தகவல்.]
‘கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்’
என்னும் புறநானூறு (33) வரி, வேட்டைத் தொழிலில் நாய் முக்கிய இடம் வகித்ததைக் காட்டுவது.
‘பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை’
என்னும் அகநானூறு (28) வரிகள், குறிஞ்சி நிலத் தலைவனுடன் நாய் இருந்ததை இயம்புவது.
‘இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலம்சுரித் தோகை ஞாளி மகிழும்’
என்னும் அகநானூறு (122) வரிகள், ஒளிபொருந்திய வேலையுடைய காவலர்கள் உறங்கினாலும், கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையும் உடைய நாய் குரைப்பதைச் சொல்வது.
இவ்வாறு நாய்கள் தொடர்ந்து வேட்டைத் தொழிலுக்கும், காவலுக்கும் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை, அதன்பின்னான காலங்களில் எழுப்பப்பட்ட நடுகற்களைக் கொண்டும், எழுதப்பட்ட கல்வெட்டு மற்றும் இலக்கியங்களைக் கொண்டும் அறியலாம்.
கடந்த ஐந்தாண்டுகளாக இருக்கும். நடுகல் பற்றி எண்ணும்போதெல்லாம் எப்படி முதலில் என் கண்முன்னால் இந்நடுகல் வருகிறதோ, அதுபோல் நினைவுக்கு வரும் குறளாக,
‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்ற வர்’
என்பது இருந்து வருகிறது (771). காரணம், அதன் கூறுமுறையும், சொற்கட்டுமானமும். அதுவும், என் தலைவன் எனும் பொருளில் என்னை (என் + ஐ) எனத் தொடங்கி கல்நின்றவர் என முடிய, ‘பகைவரே, என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நிற்காதீர். அவன் முன்னர் எதிர்த்துவந்து நின்று களத்தில் வீழ்ந்துபட்டு நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்’ எனப் பொருள்வரும்படி வள்ளுவத் தாத்தன் யாத்தது எண்ணும்தோறும் வியப்பில் ஆழ்த்துவது.
அதற்கடுத்தாற்போல் நினைவுக்கு வருவது, போரில் இறந்துபடாமல் வடக்கிருந்து உயிர்விட்டதற்காக கோப்பெருஞ்சோழனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கண்டு பொத்தியார் பாடிய,
‘….. வைகம் வம்மோ – வாழ்மொழிப் புலவீர்! –
‘நனந் தலை உலகம் அரந்தை தூங்க,
கெடு இல் நல் இசை ஆடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.’
என்னும் புறநானூறு (221) பாடல். காரணம், ‘கோப்பெருஞ்சோழன் மிகச்சிறந்தவன் என்றும் பாராமல், கூற்றம் அவனுடைய உயிரைக் கொண்டுசென்றது. அவன் சிறந்த புகழ் நிறுத்தி நடுகல் ஆயினன். ஆதலால் புலவர்களே, அக்கூற்றத்தைப் பழித்துரைப்போம் வாருங்கள்’ என எமனைப் பழித்துரைக்க அழைப்பதுபோல் சுவைபடப் பாடிய பாங்கு.
இவ்வாறு நடுகல் குறித்து இன்னும் எத்தனையோ பாடல்கள் நம் சங்கப் பரப்பெங்கும் இருப்பதையும், அவற்றில்,
‘….. ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’
என்னும் அகநானூறு (131) பாடல் வரிகள், நிரைமீட்டப் போரில் ஆண்மை மிக்கார் இறந்துபட நடுகல்லாக்கி வழிபடுவதையும்,
‘பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,
அணி மயிற் பீலி சூட்டி, பெயர் பொறித்து,
இனி நட்டனரே, கல்லும்’
என்னும் புறநானூறு (264) பாடல் வரிகள், கன்றுகளுடன் கறவை மாடுகளையும் மீட்டுக் கொண்டு வந்து பகைவரை விரட்டிய நெடுந்தகை இறந்துபட, அழகிய மயிற் பீலியைச் சூட்டி அவன் பெயரை எழுதி நடுகல் நட்டதையும் கூறப் பார்க்கலாம்.
பொதுவாக நடுகல் என்பது போரில் வீரமரணம் எய்திய பெருமகனுக்கு அவன் பீடும், பெயரும் பொறித்து நடுவது மரபு. ஆனால் ஒரு நாய்க்கு அதுவும், மனிதனுக்கு நிகராக இங்கே நட்டிருப்பது, ‘மனிதன் மட்டுமல்ல… இப்பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் சமம்தான்’ என்பதை நம் மூதாதையர் நமக்கெல்லாம் உணர்த்தத்தான் எனப் படுகிறது.
நாய்க்கு பலருக்கும் தெரிந்த ஞமலி, ஞாளி தவிர… அக்கன், அசுழம், அற்பம், உச்சி, எகினம், எகினன், கிராமசிம்மம், குக்கல், குக்கன், குரைமுகன், கூரன், கொள்ளிவாலி, சகுடம், சதுஷ்பாதம், சாரமேயன், சுணங்கன், சுவா, சுவானம், சுனகன், சூரன், ஞெள்ளை, துத்தம், தோழப்பர், நயக்கன், நாளி, பட்டி, பாகி, பாசி, புரோகம், பைகிரி, மண்டலி, மிருகதஞ்சகன், மிருகாரி, முடுவல், முலவை, முவ்வை, யட்சம், வக்கிரவாலதி, வடி, வங்கு, வண்டரம், விசுவாசி, வைரவனூர்தி, அற்றம், உரோகதி, கடுவாய், குக்குரன்… என இன்னும் எத்தனையோ பெயர்களைக் கொண்டுள்ளது நம் தமிழ்மொழி.
கடவுளர்களில் நாயை தன் வாகனமாகக் கொண்டிருக்கிறார் பைரவர். காவல் தெய்வங்களில் ஐயனார் கோயில்களில் நாயின் சிலை இருப்பதையும், கங்காதரமூர்த்தி சிற்பங்களில் நாய் இடம்பெற்றுள்ளதையும் காணலாம்.
மேலும் நாயில் சடைநாய், சாதிநாய், செந்நாய், சோணங்கிநாய், தோனாய், வேட்டைநாய் , குடத்திநாய், சிவிங்கிநாய் எனப் பல வகைகளும்… நாயின் பெயர் கொண்ட நாய்முள்ளி, நாயெலுமிச்சை, நாய்த்துளசி, நாய்க்காளான், நாய்த்தேக்கு, நாய்க்கடுகுச்செடி, நாய்க்கடம்பு, நாய்க்கரந்தை, நாய்க்கரும்பு, நாய்த்தருவை, நாய்ப்பாகல், நாய்ப்பயறு, நாய்ச்சீரகம், நாய்க்கொட்டி, நாய்க்குமிழ், நாய்வால்நெல், நாய்வேம்பு, நாயுருவி போன்ற பல தாவரங்களும்… நாயின் பெயராலான நாய்மீன், நாய்முருகை, நாய்முள், நாய்ப்பல், நாய்வேளை, நாய்வேட்டம், நாய்விருத்தி, நாய்வெள்ளை, நாய்விட்டைக்கல், நாய்நரம்பு, நாய்த்தீற்றி, நாய்த்திசை, நாய்ச்சி, நாய்ச்சியார், நாய்க்கோலம், நாய்க்கெளுத்தி, நாய்க்குணம், நாய்க்காசு, நாய்க்கரணை, நாய்க்கடுவான், நாய்க்கடிச்சை, நாய்க்கடிசன்னி உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானச் சொற்களும்… நம் இலக்கியங்களிலும், நம்மிடையேயும் இருப்பதைப் பார்க்கலாம்.
ஆக, இத்தனைப் பெருமைகளுக்கும், சிறப்புக்கும் சொந்தமானது நாய் என்பதால்தான் நம் முன்னவர்கள் அவற்றின் மீதான நேசத்தை, வீரத்தை, மகத்துவத்தை நடுகல் வைத்துப் போற்றியிருக்கிறார்கள்; வணங்கியிருக்கிறார்கள்.
நமது மூதாதையர்தான் இப்படியென்றால், இங்கே நம் மண்ணை ஆள வந்த வெள்ளையரில் ஒருவரோ தன் நாய்க்கு [செஞ்சியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் விடுதியில்] சமாதி கட்டி, தனது பெயர் இல்லையென்றாலும் தன் நாயின் பெயரும் (BRENDA), சமாதியும் காலம் கடந்தும் (1914இல் கட்டப்பட்டது) இருக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார். எத்தனை உயர்ந்த எண்ணம் பாருங்கள்!
சில வருடங்களுக்கு முன்புவரை கருந்தேவகத்தி, கோவிவன் என்ற பெயர்களை மாற்றி அல்லது மறைத்து வெறுமே ஊமை வேடியப்பன்; அவரது நாய் எனக் கொண்டுவந்தவர்கள் மேல் கோபமாக வரும். ஆனால் இப்போதெல்லாம், அவ்வாறாவது அதனை அழியாமல் அல்லது அழிக்காமல் பாதுகாத்து இன்னும் வணங்கிவருகிறார்களே என நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
அவ்வகையில் ‘நாய் என்பது வெறுமே ஓர் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்கு, நம் ஏவலுக்குக் கட்டுப்பட்டது, நம்மை அண்டி வாழ்வது, நாம் உண்டுவிட்டுப் போடும் மீதியை உண்பது’ எனக் கீழாக எண்ணாமல்… இனியாவது அதனை ‘இத்தாவர சங்கமத்துள் ஒன்றாக, அனைத்து உயிர்களுக்கும் நிகராக, நம்போல் சில உயரிய தனித்துவங்களைக் கொண்டதாக’ மனத்தார எண்ணி, நம்மோடு நம்மைச்சுற்றி வாழ்ந்துவரும் நாய்களை மதித்து நடத்தினாலே போதும். அதுவே நாம் ‘தம் இன்னுயிர் தந்து பிற உயிர் காத்து நடுகல்லாய் நிற்கும் அந்த கோவிவனுக்குச் செலுத்தும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்’ எனத் தோன்றுகிறது. ஆம்!
‘நாயியின்னு சொல்லாத கோமானே சீமானே –
நாயிமுன்ன நாமவொண்ணும் மேலுயில்ல கோமானே…
நாயிபாசம் வச்சதுன்னா உயிரவுடும் சீமானே –
நாயிக்கு நாயிதான் ஈடுயிண கோமானே…’
(கொலுசு – ஏப்ரல் 2023 இதழில் வெளியானது.)
*