சொல்லின்றி எதுவுமற்றவன்! – 043
‘வானம்தாண்டி‘ பாடல் முழுக்க முழுக்க திருநர்கள் பார்வையில் எழுதப்பட்டது. ஒருவகையில் இது உங்களுக்கு பெரும் சவாலாக இருந்திருக்குமே?
ஆமாம். ஆனால், அந்த சவால் எனக்கு திருநர் பிரியா பாபுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்ன ஒரு விஷயத்திலேயே எளிமையாகிவிட்டது. ”தோழர், இங்க ஆண்கள் வெறும் ஆண்களோட வாழ்க்கைய மட்டும்தான் வாழ்வாங்க. பெண்கள் பெண்களோட வாழ்க்கைய மட்டும்தான் வாழ்வாங்க. ஆனா, நாங்க ஆண் பெண் இருவரோட வாழ்க்கையயும் வாழுறோம். இதுதான் எங்களோடப் பெருமை.’’
அவரது இந்த வார்த்தைகள் குறித்து அன்றைய தினம் முழுவதும் திரும்பத் திரும்ப ஆழமாக யோசித்தேன். ஏற்கனவே சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல், திருநர் கல்கியின் ‘குறி அறுத்தேன்’ கவிதை தொகுப்பு உள்ளிட்ட இன்னும் சில நூல்களில் திருநர்கள் குறித்து வாசித்திருக்கிறேன். சில திருநர்களிடம் நேரிலும், நகர்பேசியிலும் பேசியிருக்கிறேன். அவர்களது வாழ்வை ஓரளவுக்கு கண்டிருக்கிறேன்.
அதனால் நான் எழுதப்போகும் பாடலில்… இதுவரை காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த, ‘இவங்க கஷ்டப்படுறாங்க. ஒதுக்கப்படுறாங்க. பாவம். இவங்களுக்கு நாமளாம் எதுனா செய்யணும்’ போன்ற எதுவும் இருக்கக்கூடாது. அதாவது, அவர்களது நெகட்டிப் பக்கம் இருக்கவே கூடாது. முழுக்க முழுக்க பாசிட்டிவான, கொண்டாட்டமான பாடலாகவே இருக்கவேண்டும்’ என்று முடிவெடுத்தேன்.
ஆகையால்,
‘வானம் தாண்டி எல்லை –
ஆழ்கடல் எங்கள் பாதை…
பூமிப் பந்தை எடுத்து –
அன்பில் நனைப்போமே…
மேக ஆடை உடுத்தி –
மின்னல் வரிகள் படித்து…
நிலவுத் தாளில் நித்தம் –
இன்பம் வரைவோமே…
இருகால் பல்லவி நாங்கள் –
இசையும் உயிர்மொழிதான்…
நடக்கும் நதிகள் நாங்கள் –
தடைகள் தேன்துளிதான்…’
என ஒவ்வொரு வரிகளையும் பார்த்துப் பார்த்து யாத்தேன். அது பலநூறு திருநர்களின் உள்ளத்தில் எனக்கோர் உயரிய இடத்தை பெற்றுத்தரும், அவர்களது வாழ்வில் மிக முக்கியமானப் பாடலாக மாறும் என ஒருபோதும் அப்போது நினைக்கவில்லை.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 042