‘பெண்களால் ஆனவன் நான்’ – முதல் சுயபேட்டி!

(மார்ச் 2019, பாவையர் மலரில் வெளியான என் முதல் சுயபேட்டி இது)
விகடன் மாணவப் பத்திரிகையாளராக ஓராண்டு; அதில் தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றது. பின் மூன்றரை ஆண்டுகள் விகடனில் நிருபராகவும், அதிலும் ஒன்றரை வருடம் தலைமை நிருபராகவும் இருந்த என்னுள்… ‘நம்மை நாமே பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது. சட்டென நிருபராக மாறி, பாடலாசிரியர் வடிவரசு’வை பேட்டியெடுக்கக் கிளம்பிவிட்டேன்.
இதோ அந்தப் பேட்டி…
இரு பக்கமும் பச்சைபசேலென வேர்கடலைச் செடிகள் சிரித்துக்கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்று, சலசலவென நீரோடும் ஓடைக்கரை தாண்டி, தென்னையும் மாமரமும் நிழல் சிந்திக்கொண்டிருக்கும் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்தவாறு, பார்க்க அச்சு அசல் என்னைப் போலவே இருக்கும் (ஹிஹி…) வளர்ந்துவரும் பாடலாசிரியர் வடிவரசுவிடம் பேசத்தொடங்கினேன்.
வடிவரசு… நீங்களாக வைத்துக்கொண்டப் பெயரா?
இல்லவே இல்லை. இது எங்க ஐயா (அப்பா) வைத்தப்பெயர். வடிவு என்றால் அழகு. அழகுக்கெல்லாம் அரசு என்பதே என் பெயரின் அர்த்தம். இன்னொரு அர்த்தமும் சொல்வார்கள். வடிவு அதாவது வடிவம். அனைத்துமிங்கே ஏதோவோர் வடிவத்தோடுதான் இருக்கிறது. அப்படி இருக்கும் அனைத்துக்கும் அரசு. அதாவது தலைமை, முதன்மை என்பது.
தொடர்ந்து சமூகம் சார்ந்த தனிப்பாடல்கள் எழுதி வெளியிட்டு வருகிறீர்கள். இது திட்டமிட்டு செய்வதா? இல்லை ஏதேனும் காரணத்தோடு செய்வதா?
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில்தான் இதை செய்துவருகிறேன். இதனால் எனக்கு லட்ச லட்சமாகப் பணமோ, மிகப் பெரியப் பதவிகளோ வரப்போவதில்லை. இருந்தாலும் இது என் கடமையல்லவா? பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்துக்காகவும் மட்டுதான் எழுதுவேன் என்றால் அது எப்படி சமூகத்துக்கானப் படைப்பாக இருக்கும். சினிமாவில் அந்த சூழலுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் எழுத முடியும். ஆனால், இங்கே அப்படி இல்லையே. அதனால் சினிமாவைத் தாண்டியும் என் பாடல்கள் தொடர்ந்து சமூகத்துக்காக ஒலித்துக்கொண்டிருக்கும்.
இதனால் உங்களது வளர்ச்சி பாதிக்காதா?
ஹாஹா… சமூகத்துக்கான நல்ல விஷயங்களைத் தானே எழுதுகிறேன். இதனால் ஏன் என் வளர்ச்சி பாதிக்கப்போகிறது? அதே சமயம் நீங்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ‘இவன் சும்மா எப்பப்பாரு சமூகம் அது இதுன்னு கத்திட்டிருப்பான்’ என நினைப்பதும், இங்கே பீப் பாடலுக்குத் தந்த விளம்பரமும் மதிப்பும் நான் மூன்றாம் பாலினத்தவரின் மேம்பாட்டுக்காக எழுதிய ‘வானம் தாண்டி’ போன்ற பாடல்களுக்குத் தராததும், ‘இவன் அப்படியென்ன எழுதி சமூகத்த திருத்திடப்போறான்’ போன்ற ஏளனப் பார்வையும் பேச்சும் இல்லாமல் இல்லை. இதனையெல்லாம் என்னை பாதிக்கும் தடைகளாக ஒருநாளும் நான் நினைக்கவில்லை. மாறாக இன்னும் இன்னும் என்னை நம்பிக்கை நடைபோட வைக்கும் படிக்கட்டுகளாக நினைக்கிறேன்.
உங்களைப் பற்றியும் உங்கள் படைப்புகள் பற்றியும் ஓரிரு வரிகளில் சொல்லமுடியுமா?
கிராமத்தில் பிறந்து சிறகுவிரித்துப் பறந்து, நகரத்தில் வாழ்வை அழகுற நகர்த்தும் அக்மார்க் கிராமவாசி நானெனில், அன்பும் மனிதமும் தேடலும் சமமாய்க் கலந்த படைப்புகள் என்னுடையது.
குடும்பம் பற்றி…?
94 வயதான ஐயா, அம்மா, நான்கு அண்ணன்கள், ஓர் அக்கா மற்றும் நான். விவாசாயக் கூலிக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி நான். குடும்பக் கஷ்டம், வறுமை எல்லாவற்றையும் படிப்படியாக வென்று இப்போது சொல்லிக்கொள்ளும் படியாக வாழும் உழைப்பாளிக் குடும்பம் எங்களுடையது.
பத்திரிகைத் துறையில் இருந்தவர் நீங்கள். அதனால் பெற்றதும், இழந்ததும்?
ஹாஹா… நல்ல கேள்வி. பெற்றது நூறு சதவிகிதம் எனில், இழந்தது இருநூறு சதவிகிதம்.
சினிமா…?
கடந்த மூன்றாண்டுகளாக தீவிரமாக முயற்சி செய்துவருகிறேன். கிட்டத்தட்ட எல்லாக் கதவுகளையும் தட்டிவிட்டேன். பல கதவுகள் திறக்கவில்லை என்றாலும், சில கதவுகள் எனக்காக திறந்துள்ளது. சீக்கிரமே திறந்த கதவினையும், அதிலென் வரிகளையும் கேட்பீர்கள்.
பாடல் மட்டும்தான் எழுதுவீர்களா… இல்லை புத்தகங்கள்…?
‘கால்கிலோ கண்ணீர்த் துளி’ என்றொரு கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன். அதன்பின் கிட்டத்தட்ட நான்கு புத்தகங்கள் எழுதிவிட்டேன். வெளியிடக் கேட்டு சில பதிப்பகங்களுக்குச் சென்றால் என்ன எழுதியிருக்கிறேன் என மருந்துக்குக் கூடப் பார்க்காமல் நேரடியாக பிஸ்னஸ் பேசுகிறார்கள். வேண்டாமென வந்துவிட்டேன். இந்த வருடம் அனைத்தையும் (தற்போது எழுதிவரும் ‘ஐயா’ உட்பட) வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். பார்ப்போம்!
உங்களுக்குப் பிடித்த பாடலாசிரியர் யார்?
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பழநிபாரதி, நா.முத்துக்குமார் என அனைவரையும் ரசித்திருக்கிறேன். ஆனால், மனத்துக்கு மிக நெருக்கமாக உணரும் ஒருவரெனில் அது வாலி ஐயாதான். அவரை நேரில் சந்தித்துப் பேசவேண்டுமென மிக ஆசையாக இருந்தேன். அதற்கான பல சந்தர்பங்கள் இருந்தபோதும் வேண்டுமென்றே மறுத்துவிட்டேன். நான் பாடல் எழுதி, அதை அவர் கேட்டு, ‘யார்யா இந்த வடிவரசு… இப்படி எழுதியிருக்கான். வரச் சொல்லுயா பாக்கனும்’ என தட்டிக்கொடுக்க அன்போடு ஒருநாள் அழைப்பார். அன்றுதான் அவரை பார்க்கவேண்டும். அந்நாள் சீக்கிரமே வருமென நினைத்திருந்தேன். ஆனால், அதற்குள் அவர் மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர் வரிகள் வழியாக தினந்தோறும் அவருடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
உங்கள் முதல் ஆல்பம் பாடலில் ‘அகரத்தை விட பெண் மேலானவன்’ என்றும், பெண்மீகம் பாடலில் ‘பூலோகம் பிழைக்க உயிர்க் கவிதை’ என்றும் சொல்லியிருந்தீர்கள். பெண்களை இப்படியெல்லாம் பாட என்ன காரணம்?
பெண்களால் ஆனவன் நான். அன்னையில் ஆரம்பித்து அக்கா, தங்கை, பாட்டி, சித்தி, அண்ணி, தோழிகள், காதலி என எப்போதும் பெண்கள் சூழவே நான் இருக்கிறேன். இருப்பேன். அதனால் பெண்களைப் பற்றி இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுவேன். பெண்கள் வெறும் சக உயிர்கள் மட்டுமல்ல… அதையும் தாண்டிய உயர்வு; உன்னதம்.
– சா.வடிவரசு
*