அரம்பு போற்றுதும் – 025 : உன் பேரென்ன?

ஏப்ரல் 24, 2026
*
மாலை சரியாக ஐந்து மணி இருக்கும். ஐ உறங்கி எழுந்ததும் முகம் கழுவி துடைத்து ஆடை அணிவித்து அருகில் இருக்கும் சிறிய பூங்காவுக்கு கூட்டிப் போயிருந்தேன்.
எப்போதும் உள்ளே நுழைந்ததும் ஓடிப்போய் முதலில் அவனது விருப்ப ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு, சுற்றிலும் இருக்கும் ஆல், அரசு, வேம்பு, புங்கை முதலான மரங்களையும், அதில் அவ்வப்போது வந்தமர்ந்து இசைபடக் கூவும் குயிலின் குரலையும் கேட்டுக்கொண்டு ஆசை தீர ஆடுபவன், இன்று அதிசயமாக ‘ஊஞ்சல் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, நேராகப் போய் பூங்காவின் மறு கோடியில் இருந்த ஏணியில் ஏறி சறுக்கு விளையாட ஆரம்பித்தான்.
‘சரி, அவன் பாட்டுக்கு விளையாடட்டும்’ என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஓர் ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். ஐயை விட சில மாதங்கள் மட்டுமே மூத்த ஆதிரா பாப்பா வந்து முதலில் அவனுக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, அவன் கை பிடித்து நிறுத்தி, ’’உன் பேரென்ன?” என்று கேட்டார்.
ஆர்வத்தோடு ”ஹாய்’’ சொன்னவன், பெயரைக் கேட்டதும் பதில் சொல்லாமல் என் அருகில் ஓடிவந்து காலை கட்டிக்கொண்டான்.
உடனே அந்தப் பாப்பா என்னை நோக்கி புகார் கூறுவது போல பார்த்ததும் அவனிடம் சொன்னேன். ”டேய் பப்பு… அக்கா, உன் பேர் என்னன்னு கேட்குறாங்க பாரு. சொல்லு.’’
எப்போது, யார் கேட்டாலும் தட்டாமல் சொல்பவன், வேண்டுமென்றே கூச்சப்பட்டு இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, ”வேணாம்’’ என்றான்.
மேலும் ஒரு தடவை கேட்டுப் பார்த்தேன். ம்… ஹூம்.
‘சரி, இது வேலைக்கு ஆகாது’ என்று அவனை அப்படியே தூக்கிக்கொண்டு சொன்னேன். ”அக்காதான பப்பு… ஆசையா கேட்குறாங்க, சொல்லு.’’
சட்டென்று கம்மியக் குரலில் தனக்கு மட்டும் கேட்பது போல, ”ஐ பாப்பா’’ என்றான்.
அவன் சொன்னது கேட்காததால் பக்கத்தில் வந்த பாப்பா, ”அக்காவுக்கு கேக்கல… சத்தமா சொல்லு’’ என்றார்.
உடனே என்னை நோக்கி பொய்யாகச் சிரித்துவிட்டு கத்துவது போல சொன்னான். ”ஐ பாப்பா.’’
அந்தப் பாப்பாவுக்கு அவன் சொன்னது அதாவது, அவனது பெயர் புரியாததால் நான் விளக்கிச் சொன்னதும் கேட்டுவிட்டுப் போய் ஏணியில் ஏறி மறுபடியும் சறுக்கி விளையாட ஆரம்பித்தார்.
ஐயிடம் சொன்னேன். ”அந்த அக்கா உன் பெரென்னன்னு கேட்டாங்கல்ல… இப்போ நீ அவங்கக்கிட்ட, உங்கப் பேரென்னன்னு கேளு.’’
”வேணாம்.’’
”ஏன், பப்பு?”
”வேணாம்.”
”கூச்சப்படாம எல்லார் கிட்டேயும் உங்கப் பேரென்னன்னு கேக்கணும், செரியா?’’
‘சரி’ என்று தலையசைத்துவிட்டு கேட்டான். ”அக்கா, உங்கப் பேரென்ன?”
உடனே அவர் பல் தெரியச் சிரித்துவிட்டு, ”ஆதிரா” என்றார்.
”சரி, அக்காவுக்கு டாட்டா சொல்லு. நாம வீட்டுக்குப் போவோம். நாளைக்கு சீக்கிரமா வரலாம்” என்றதும் ‘சரி’ என்று ”டாட்டா’’ கூறிவிட்டு, எதிரில் வந்த பாட்டி ஒருவரிடம், ”பாட்டி, உங்கப் பேரென்ன?’’ என்று கேட்டான்.
அவர் காதில் விழாததால் கடந்து போவதைப் பார்த்துவிட்டு புகார் குரலில் சொன்னான். ”அப்பா… பாட்டி, பேர் சொல்ல மாட்றாங்க.’’
”நீ கேட்டது அவங்களுக்குக் கேட்கல பப்பு. அதான் சொல்லாமப் போறாங்க. நீ இன்னும் சத்தமா கேட்கணும், சரியா?’’
”ம்’’ என்றவன், பூங்காவிலிருந்து வெளியில் வந்து இடது புறமாகத் திரும்பி அங்கிருந்த தெரு ஒன்றுக்குள் வளைந்து நுழைந்து நடக்கையில் சட்டென்று ஓரிடத்தில், ”அப்பா, கீழ விடு’’ என்றான்.
எதுவும் கேட்காமல் கீழே இறக்கிவிட்டேன்.
உடனே அங்கிருந்த சுவர் ஒன்றின் ஓரமாகப் படுத்திருந்த ஆட்டின் அருகே போய் நின்று, ”ஆடு, உன் பேரென்ன?’’ என்று கேட்டான்.
நன்கு பருத்திருந்த முது தாய் வெள்ளாடு அது. அவனைக் கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் தன் பாட்டுக்கு தொடர்ந்து அசை போட்டுக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு திரும்பி, ”அப்பா, ஆடு பேர் சொல்லமாட்டுது’’ என்றான்.
சட்டென்று என்ன சொல்வதென்று தெரியாமல் வெறுமே சிரித்துவிட்டுப் போய் அவனைத் தூக்கியபடி சொன்னேன். ”ஐ பப்பு… ஆடு இப்போ சாப்டுட்டு இருக்குல்ல. அதான் சொல்ல மாட்டுது. நாளைக்கு வந்து கேட்கலாம், செரியா?’’
எனது பதிலால் திருப்தியுற்று தலையசைத்தவன், அடுத்து அங்கிருந்து சற்று தள்ளியிருந்த வேப்ப மரத்தைப் பார்த்தான்.
உடனே அவன் பார்வையின் நோக்கம் புரிந்துவிட்டதால், அங்கிருந்தே; அப்போதே என்ன சொல்லி சமாளிக்கலாம் என யோசிக்கத் தொடங்கிவிட்டேன்.
*