அரம்பு போற்றுதும் – 019 : சொப்பு சாமான்

மார்ச் 22, 2026

*

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினெட்டாம் தேதி, காலை பதினொரு மணியிலிருந்து 12:30-க்குள், சென்னை முகப்பேரில் உள்ள ஜஸ்வந்த் சிங் ஐயா கார்டனில், அங்குள்ள ஆலம் முதல் பிரம்மக் கமலம் வரையான முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய மரஞ்செடிகொடிகள் சூழ – பனை மாலை, ஜடை, வளையல் – வாழை நார் புடவை, வளையல் – சோற்றுக் கற்றாழைப் புடவை – மா பலா வாழைக் கன்றுகள் – பேய்மிரட்டி என்னும் பெருந்தும்பை திரி விளக்கு – மர பொம்மைகள் – தாவரம் சார்ந்த புத்தகங்கள் – தினை பாயாசம் – பனங்கிழங்கு அல்வா, பனை ஓலைக் கொழுக்கட்டை, தட்டு, பெட்டி… என இன்னும் இன்னுமாய் நூறு சதவிகிதம் தாவரங்கள் சார்ந்து, மதிக்கு நடத்திய வளைகாப்பு விழாவில், பிறக்கப்போகும் மகவுக்காக மரத்தால் செய்யப்பட்ட சொப்பு சாமான்களும் வாங்கி வைத்திருந்தோம். அதனை நேற்று மாலை முதல் தடவையாக எடுத்து ஐயிடம் விளையாடுவதற்காகக் கொடுத்தோம்.

முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவனுக்கு, அவை ஒவ்வொன்றும் என்னென்ன என்று விளக்கிச் சொன்னதும் மிகுந்த ஆர்வமாகி, அதில் இருக்கும் கலந்தரைப்பானை (mixer grinder) எடுத்துக்கொண்டு துவையல் அரைப்பது போல ஒலி எழுப்பி விளையாடத் தொடங்கினான்.

சில நிமிடங்கள் அருகில் அமர்ந்து பார்த்திருந்துவிட்டு, எழுந்து கழிவறைக்குப் போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தேன்.

விளையாட்டில் மூழ்கிப்போயிருந்தவன் பக்கத்தில் சென்று மறுபடியும் உட்கார்ந்து, ”என்ன பப்பு, செய்யற?’’ என்று கேட்டேன்.

பற்கள் காட்டிச் சிரித்தவன், ”சட்டினி’’ என்றான்.

”வாவ்… சூப்பர் பப்பு’’ என்றுவிட்டு, ”சரி, அதுக்கு முன்னாடி நாம ரண்டுபேரும் சேர்ந்து சோறு ஆக்கலாமா?’’ என்று கேட்டேன்.

உடனே தலையாட்டி, ”ம்’’ என்றான்.

அடுப்பு மீது குக்கர் எடுத்து வைத்து அதனுள் அரிசி கொட்டி தண்ணீர் ஊற்றி மூடிவிட்டு பற்றவைப்பதற்கு முன்னால் எரிவாயு உருளையைத் (Gas cylinder) தேடினேன். காணவில்லை.

சுவர் ஓரமாக உட்கார்ந்து எங்கள் விளையாட்டைப் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த மதியிடம் கேட்டேன்.

கள்ளச் சிரிப்புச் சிரித்து, ”தெரியாது’’ என்றாள்.

‘சரி’ என்று ஐயிடம் கேட்டேன். ”ஐ, பப்பு… இங்கே இருந்த சிலிண்டர் எங்க தங்கம்?’’

உடனே எழுந்தவன், ”வா…’’ என்றுவிட்டு, பின்னால் நான் வருகிறேனா என்பதை நடுநடுவில் திரும்பிப் பார்த்துக்கொண்டு, வேகமாக ஓடிப்போய் கழிவறை முன்பாக ஓர் மூலையில் சுவர் ஓரத்தில் கூடுதலாக வைத்திருந்த பெரிய எரிவாயு உருளையைக் காட்டினான்.

”டேய் பப்பு… நான் கேட்டது உன்னோட சின்ன சிலிண்டர.’’

சட்டென்று இன்னும் பக்கத்தில் போய் உட்கார்ந்தவன், அதன் அருகில் தான் கொண்டுபோய் வைத்திருந்த சிறிய எரிவாயு உருளையைத் தொட்டுக் காட்டி, ”தோ’’ என்று சிரித்தான்.

‘சரிதான்’ என்று நானும் சிரித்துக்கொண்டு, ”சூப்பர் பப்பு’’ என்று பாராட்டிவிட்டு, அங்கிருந்த எரிவாயு உருளையை எடுத்துவந்து அடுப்பருகில் வைத்துப் பற்றவைத்து சோறாக்கி, வெந்ததும் இறக்கித் தட்டில் பரிமாறத் தொடங்கினேன்.

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தவன், திடீரென்று ஓரத்தில் இருந்த கலந்தரைப்பானை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினான்.

அடுத்து அவன் என்ன செய்யப்போகிறான் என்பது ஓரளவுக்கு தெரிந்திருந்தாலும், அதனைக் காண்பதற்காக எழுந்து மதியையும் உடன் கூட்டிக்கொண்டு மெதுவாகப் போய் எட்டிப் பார்த்தோம்.

தனது விளையாட்டு கலந்தரைப்பானை எடுத்துப்போய் சமையலறை மூலையின் நிலைமாடத்தில் இருந்த உண்மையானதன் அருகில் வைத்து, ”ட்ரூ… ட்ரூ…” என்று ஒலி எழுப்பி துவையல் அரைத்துக்கொண்டிருந்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு வந்து பரிமாறிய உணவு முன்பாக உட்கார்ந்து, அவன் கொண்டுவந்து தரப்போகும் துவையலுக்காக நாங்கள் இருவரும் ஆவலோடு காத்திருந்தோம்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=