அரம்பு போற்றுதும் – 018 : ஊசி போட்டு

மார்ச் 12, 2026

*

சென்ற வாரத்தில் ஒருநாள், ஐயை உடன் கூட்டிப்போய் அருகில் இருக்கும் மருத்துவ மையம் ஒன்றில் ஊசி போட்டுக்கொண்டு வந்தாள் மதி.

அப்போது அங்கிருந்த முதியவர் ஒருவர், ஐயிடம் பேச்சிக் கொடுத்து அவன் பெயர் முதலானவற்றைக் கேட்டறிந்துவிட்டு, அருகில் இருந்த கடையில் மிட்டாய் வாங்கித் தந்திருக்கிறார்.

அவனும் அதனை மகிழ்வோடு வாங்கிக்கொண்டு, ”நன்றி’’ கூறிவிட்டு வந்திருக்கிறான்.

அதனால் அது முதல் அந்த மருத்துவ மையத்தைக் கடந்து சென்று வரும்போதெல்லாம் காட்டி, ”ஊசி போட்டு மிட்டாய் தந்து’’ என்பதை தவறாமல் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இது அல்ல கூற வந்தது. அன்று மதிக்கு ஊசி போட்டதை பக்கத்தில் இருந்து பார்த்தவன், இன்று காலை குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த தக்காளியில் ஒன்றை எடுத்துவந்து புத்தக அடுக்கருகில் வைத்துவிட்டு, சத்தமின்றி வந்து எனது எழுதுகோளில் ஒன்றை எடுத்துப்போய் குத்திக்கொண்டிருந்தான்.

என்ன செய்கிறான் என எட்டிப் பார்த்துவிட்டு கேட்டேன். ”அப்பு பப்பு, என்ன பண்றீங்க?’’

தலையை லேசாக உயர்த்திப் பார்த்துவிட்டு, ”ஊசி போட்டு’’ என்றான்.

”என்னது… ஊசி போடுறியா?’’

”ஆமா’’ என்று வேகமாகத் தலையாட்டினான்.

”ஏன், பப்பு…. தக்காளிக்கு என்னாச்சி?’’

உடனே முகத்தை சோகமாகக் காட்டிக்கொண்டு, ”சளி புடிச்சி’’ என்றான்.

”ஓ…’’ நானும் அவனுக்குப் போட்டியாக முகத்தை சோகமாக்கிக்கொண்டு, ”செரி பப்பு… நல்லா போடு, சரியாய்டும்’’ என்றுவிட்டுப் போய் ஒரு தேநீர் போட்டு வருவதற்குள், குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த பத்துக்கும் அதிகமான தக்காளிகளை எடுத்துவந்து ஊசி போட்டு வரிசையாக [அமர!]வைத்திருந்தான்.

என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமே புன்னகைத்துவிட்டுப் போய் மாடியில் உட்கார்ந்திருந்த மதியிடம், ”மதியம்மா… டாக்டர் ஐ சார், என்ன பண்றாருன்னு வந்து கொஞ்சம் பாருங்க’’ என்றுவிட்டு வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன். ஊசி போடாமல் இன்னும் ஒரே ஒரு தக்காளி மட்டுமே எஞ்சியிருந்தது; தப்பித்திருந்தது.

உடனே அதனை எடுத்து பத்திரமாக ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் திரும்பினேன்.

ஐ மிகுந்த கனிவோடும், அக்கறையோடும் வந்து அந்தத் தக்காளியை எடுத்துப் போவதற்காகப் பின்னால் நின்றிருந்தான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=