முரம்பு – 25

துரிஞ்ச மரத்தின் மேல்கிளையில் எங்கிருந்தோ கொடுக்காய்ப்புளி முள் எடுத்துவந்து வைத்து கூடு கட்டிக்கொண்டிருந்த காகம், பெரியசாமி அலறிக் கத்திக்கொண்டு வந்ததைக் கேட்டுவிட்டு பயந்துபோய் கீழே குனிந்து பார்த்தது.

”ஏய் பெரிசாமி, என்னாச்சிடா…?’’

முத்துசாமிக் கவுண்டர் கருப்பு மாட்டுக்கு தேய்த்துக் கொடுப்பதை நிறுத்திவிட்டு பதறிப்போய் கேட்டார்.

”காவாங்கர புளியா மரத்துல… சோலக்கண்ணன் கீறான்ல, பைத்தங்கிளி… சுருக்கு மாட்டிக்கீனு… தொங்கறான்.’’

மூச்சு வாங்க நடுநடுவில் விட்டுவிட்டு சொன்னான். ஆனாலும் சொல்ல வந்ததை, சொல்லவேண்டியதை முழுதாகச் சொல்லிவிட்டான்.

கேட்ட கவுண்டருக்கு தூக்கிவாரிப் போட்டது. இரவெல்லாம் தூங்காமல் முரம்புக் கொல்லியோடு சேர்த்து சோலைக்கண்ணன் பற்றி நினைத்துக்கொண்டிருந்தவருக்கு அவனது இறப்புச் செய்தி கேட்டதும், மொத்த உலகமே நொடியில் நொறுங்கியதுபோல் இருந்தது.

”என்னடா சொல்றவன்…?’’

மாட்டை விட்டுவிட்டு வேகமாக பெரியசாமியின் பக்கத்தில் வந்து அவனிரு தோளைப் பிடித்துக்கொண்டு, முகத்தை நேருக்குநேர் பார்த்து அதிர்ச்சிக் குரலில் கேட்டார்.

”ஆமா மாமா… சுருக்கு மாட்டிக்கீனு சோலக்கண்ணன் தொங்கினு கீறான்.’’

விடிகாலையில் எழுந்து காவாங்கரைக்கு தோட்டக்காட்டுக்குப் போயிருந்த பெரியசாமி, அங்கே புளிய மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்த சோலைக்கண்ணனைப் பார்த்துவிட்டு என்ன செய்வதெனத் தெரியாமல் குய்யோமுறையோவென கத்திக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்து கவுண்டரிடம் சொல்வதற்குள் தகவல் அக்கம்பக்கத்திலிருந்த எல்லோரையும் வந்து எட்டியிருந்தது.

”நேத்து சாங்காலங்கூட பாத்தன், அவன… நல்லாதான் இருந்தான். கண்ணாத்து புங்க மரத்தாண்ட தனியா நின்னுனு, அவன்பாட்டுனு என்னுமோ சொல்லி பொலம்பினிருந்தான்.’’

”கண்டிப்பா சொல்றன், அவனா சுருக்குமாட்டிக்கினு செத்திருக்க மாட்டான். யாராது அடிச்சிதான் மாட்டி வுட்ருப்பாங்க.’’

”இவனமாரி பைத்தங்களிக்குலாம் கடசில இதான் முடுவு, பாத்துக்க.’’

இப்படி பலரும் சோலைக்கண்ணன் குறித்து ஏதேதோ சொல்லிக்கொண்டு, கோயில் தாண்டி கோனாமூட்டு தென்னந்தோப்பு வழியாக நடந்து வேகமாக காவாங்கரைக்கு வந்தார்கள்.

”நேத்து பொசாய ஆட்ட ஓட்டினு வூட்டுக்கு வர்றப்பதான் பாத்தன்… கைல கொடுவாளும் கவுரும் எடுத்துக்கினு, காவாங்கரயில அவன்பாட்டுனு ரப்புரேட்டா புல்லாங்கோலு ஊதினு போனான்.’’

”யாரு வம்புதும்புக்கும் போவாம அவன்பாட்டுனு இருப்பான், பாவம்… அவுனுக்கு போயா இந்த கெதி…?’’

சேவிக் கவுண்டரும் மணி ஆச்சாரியும் மேட்டுக் கொல்லி வழியாக பேசிக்கொண்டு வந்தார்கள்.

கால்வாய்க்குக் கிழக்கே காவாங்கரை ஒட்டியுள்ள பெரிய புளியமரத்தின் கீழ்கிளையில், கிளைக் கால்வாய் ஓரமாக விறகுவெட்டி கட்டித் தூக்கிவர எடுத்துவந்திருந்த நூல் கயிற்றைக் கட்டி தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்தான்.

அடுத்த செத்தநேரத்தில் மொத்த ஊரும் கூடிவிட்டது. வந்தவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு ஏதேதோ சொல்லி பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, ஒருவரும் போய் மரத்தில் ஏறி அவன் உடலை அவிழ்த்து கீழே இறக்குவதாகத் தெரியவில்லை.

சோலைக்கண்ணன் குறித்த நினைவுகளோடு பெரியசாமியிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் நடப்பதுபோல் ஓடிவந்த கவுண்டருக்கு, வந்து புளியமரத்தடியில் நின்று சோலைக்கண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டதும் தன்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டது. தோளில் போட்டிருந்த துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் இருப்போரைப் பார்த்துவிட்டு, சற்று அருகில் போய் நின்று அவன் முகத்தைப் பார்த்தார்.

கண்கள் திறந்தபடி லேசாக நாக்கு வெளியே நீட்டிக்கொண்டு, உயிரோடு கழுத்தில் கயிறு கட்டி விளையாட்டாகத் தொங்கிக்கொண்டிருப்பவன் போல இருந்தது.

‘பாவம் இந்த சோலக்கண்ணன், எம்மாங் கஷ்டத்த அனுபவிச்சிருப்பான்…? கொஞ்ச நஞ்சமா பாடுபட்டான்… எப்டிலாம் இருந்தவன் வாழ்க்க, இன்னிக்கி இப்டி முடிஞ்சிபோச்சே…? ஈ எறும்புக்குக் கூட ஒரு கெடுதலு நெனக்காதவன்… யாரு பொருளுக்கும் எப்பியும் ஆசப்படாதவன். தான்வுண்டு வேல வுண்டுனு இருப்பானே… பாவம், அவுனயும் அவுன் குடும்பத்தயும் பாவிங்க இப்டி பண்ணிட்டாங்களே… அவுன் பாட்டுனு வருவான், அவுன் பாட்டுனு போவான். ஒருநாளும் ஒருத்தரு வூட்டுலயும் போயி நின்னு எனுக்கு அதுவேணும் இதுவேணும்னு கேக்க மாட்டானே… யாருனா எதனா விருப்பப்பட்டு தந்தா கூட, வேணும்னா வாங்கிப்பான்… இல்லனா எதுவுஞ் சொல்லாம போயினேருப்பானே. எல்லாத்துக்கும் அந்த புத்தூரானுங்கதான் காரணம். பணத்த வச்சிகினு ஆடி அமக்களம் பண்ணி ஒரு குடும்பத்தயே இன்னிக்கி இல்லாம நாசம் பண்ணி அழ்ச்சிட்டாங்களே… இந்த பாவம் அவுனுங்கள சொம்மா வுடுமா…? அந்த ஆண்டவன்தான் அவுங்கள சொம்மா வுடுவானா…?’

கவுண்டர் உள்குரலில் தனக்குத் தானே சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் பின்னால் வந்து நின்று தோளைத் தொட்ட பொன்னுசாமி ஆச்சாரி, ”முத்துசாமி’’ என்று கூப்பிட்டார்.

எந்தவித உணர்ச்சியுமின்றி மெல்ல திரும்பிப் பார்த்தார் கவுண்டர்.

”பாவம் இந்த சோலக்கண்ணன், இப்பிடி பண்ணிட்டு போயிட்டானே.’’

எதுவும் சொல்லாமல் ‘ஆமாம்’ என தலையாட்டினார் கவுண்டர்.

பக்கத்து புளியமரத்தில் உட்கார்ந்து கீழே கூட்டமாக நின்றிருப்பவர்களையும் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் சோலைக்கண்ணன் உடலையும் மாறி மாறிப் பார்த்த வயதான குரங்கு ஒன்று, கிளைமேல் வைத்து பிடித்திருந்த பாதி கடித்துத் தின்ற கொய்யாக்காயை எடுத்துக்கொண்டு வேகமாக இறங்கி தரைக்கு வந்து, தன்னை யாராவது பார்க்கிறார்களா, துரத்தி வருகிறார்களா என திரும்பி ஒருதடவை பார்த்துவிட்டு, ஓட்டமாக ஓடி சற்று தள்ளி தென்னந்தோப்பு அருகிலிருந்த தித்திப்பு புளிய மரத்தில் போய் ஏறிக்கொண்டது.

”இப்டியே ஆளாளுக்கு நின்னு வேடிக்க பாத்துனுருந்தா எப்டிப்பா… ஆவவேண்டித பாக்க வேணாமா…?’’

திரும்பி சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு கவுண்டரைப் பார்த்தார் ஆச்சாரி.

தனக்குள் எதையோ யோசித்துக்கொண்டிருந்த கவுண்டர், சட்டென பக்கத்தில் நின்றிருந்த பெரியசாமியைக் கூட்டிக்கொண்டு போய், ”நீ போயி மரத்துமேல ஏறி கவுத்த அவுரு. நானு கீள நின்னு புடிக்கிறன்’’ என்று சொல்லிவிட்டு, அவிழ்த்ததும் சோலைக்கண்ணன் உடலருகில் போய் கீழே விழாமல் பிடிக்கத் தயாராக நின்றார்.

பக்கத்தில் வந்த ஆச்சாரி, ”நாம பாட்டுனு இப்டி எதனா செஞ்சா, நாளபின்ன போலீசு கீலீசு வந்து கேட்டா என்ன சொல்றது, கவுண்ர…?’’ என்று கேட்டார் மெதுவான குரலில்.

திரும்பி ஆச்சாரியை பார்த்த கவுண்டர், ”அதுக்காக நாலுநாளிக்கி இப்டியே தொங்கவுட்டு பாத்துனுருக்க சொல்றீயா…?’’ என்றார் கோபமாக.

”அதுக்கில்ல…’’ என்று ஆச்சாரி இழுப்பதைப் பார்த்துவிட்டு, ”ஒருத்தன் நல்லவுனோ கெட்டவுனோ, அவன் நம்மூருகாரன். நம்ம மண்ணுல பொறந்து, நம்ம கூட தாயா புள்ளியா இருந்தவன்… இப்ப செத்துப்போயி பொணமா கெடக்கறான். தாயி தவுப்பன் இல்லாதவன். அதால நாம ஊருக்காரங்கதான் சேந்து ஆவவேண்டித பாக்கணும். அதவுட்டுட்டு அவன் வந்து என்னா சொல்வான், இவன் வந்து என்னா சொல்வான்னு ஒக்காந்துனுருந்தா… பொணத்த அய்வ வுட்டு நாறனதுக்கு அப்பறம்தான் எடுக்க முடியும், பாத்துக்க’’ என்று காட்டமாகச் சொல்லிவிட்டு, பெரியசாமி மேலே போய் கயிற்றை அவிழ்த்து விட்டதும் உடலைத் தாங்கலாகப் பிடித்து மெல்ல இறக்கி மண்ணில் படுக்கவைத்தார்.

இவ்வளவு நேரம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊரார், கவுண்டரும் பெரியசாமியும் சேர்ந்து சோலைக்கண்ணன் உடலை கீழே இறக்கியதும் ஓடிவந்து பக்கத்தில் சூழநின்று பார்த்தார்கள்.

பின்பக்கம் கிழிந்த பச்சை வண்ண டவுசரும், அதன்மேல் இடுப்பில் சிவப்பு நிற அரணாக்கயிறும் கட்டியிருந்தான். அதோடு, கழுத்தில் துணிக்கயிரில் தன் உடைந்து நூல்சுற்றிய புல்லாங்குழலும் தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தால் இரண்டு நாள் சாப்பிடாதவன் போல முகத்தில் ஒருவித வலிகலந்த ஏக்கம் படர்ந்திருப்பது தெரிந்தது.

பக்கத்திலிருந்த உண்ணிமில் புதரோரத்தில் அவன் கட்டியிருந்த கட்டம்போட்ட கிழிந்த லுங்கியும், எடுத்து வந்திருந்த புடி உடைந்து பொக்கை விழுந்த கொடுவாளும் கிடப்பதைப் பார்த்துவிட்டு சேவிக் கவுண்டர், பொன்னுசாமி ஆச்சாரியையும் கவுண்டரையும் கூப்பிட்டுக் காட்டினார்.

தகவல் அதற்குள் ஆற்றோரமிருந்த ஊருக்கும் ஊர் தலைவருக்கும் மனைகாருக்கும் போயிருந்தது. இருவரும் தன் மோட்டார் சைக்கிளில் கவுண்டர் வீடிருக்கும் தெருவழியாக வந்து, கோயிலருகில் பொர்ச மரத்தடியில் நின்றுகொண்டு ஊர் பெண்களுடன் சோலைக்கண்ணன் பற்றி பேசிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம், ‘எங்கே?’ என கேட்டுத் தெரிந்துகொண்டு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு, நடந்து கோனாமூட்டு தென்னந்தோப்புக்குள் வேகமாக வந்துகொண்டிருந்தார்கள்.

”இந்த பைத்திங்கிளி நாயி எதுக்கு மரத்துமேல ஏறி… அதும் இம்மாம் பதுவிசா சுருக்கு போட்டிருக்க போறான்…? யாரோ அடிச்சிதான் இவன தூக்கு மாட்டி வுட்டுகீறாங்க.’’

பொன்னுசாமி ஆச்சாரியின் தம்பி கோபால் ஆச்சாரி சொன்னார்.

”இவன் என்ன கய்லயும் கய்த்துலயும் பவுனு போட்டுனு சுத்தினிருந்தானா…? இல்ல கத்த கத்தயா ரூவா வச்சினு சுத்தினிருந்தானா…? இவனே அடுத்த வேள சோத்துக்கு வக்கத்த அண்ணாடங்காச்சி… இவன போயி யாருடா அடிச்சி சுருக்கு மாட்டப் போறாங்க…?’’

பக்கத்தில் நின்றிருந்த சேவிக் கவுண்டர் கேட்டார்.

”ஏன் அடிச்சிபோட மாட்டாங்க…? இவன்தான் அங்கங்க நின்னுனு… கண்ணுமுன்னு தெரியாம யாரு வர்றாங்க, யாரு போறாங்கனு கூட பாக்காம… வாய்ல வந்தமரே ஓத்தா ஒம்மா, பூலு கூதின்னு வண்டவண்டயா கேட்டுனு கீறானே… அதக் கேட்ட எவுனாதுதான் ஆத்தரத்துல அடிச்சி சுருக்கு மாட்டிருக்கணும்.’’

”கோவாலு சொல்றதான் செரி, பாத்தா அப்டிதான் தெர்து.’’

”ஏ ஆமாம்ப்பா, இவனா மரத்துமேல ஏறி கவுறு கட்டி தொங்கனமாரி தெருல.’’

மணி ஆச்சாரி சொன்னதும், ”ஆமாமா… அப்பிடிதான் தெருது.”

”இல்லல்ல… இவனேதான் மாட்டிகீறான். இவன்தான் பைத்திங்கிளின்னு ஊருக்கே தெரிமே… இந்த நாய போயி எந்த நாயி வந்து சாவடிக்கப்போது…?’’

”அதும் பாஞ்சாமத்துல வந்து போட்டுகீறான்.’’

”இல்லல்ல, பொசாயவே மாட்டனமாரி கீது.’’

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பொன்னுசாமி ஆச்சாரி, ”ஏய் நிறுத்துங்கடா…’’ என்று சத்தமாகக் கத்தி சொன்னதும் எல்லோரும் வாயை மூடிக்கொண்டார்கள்.

”சொம்மா வாயி கீதுன்னு அவன்அவனும் வாய்ல வந்ததலாம் சொல்லிகீனு… என்ன நடந்துச்சினு எவனா கண்ணால பாத்தீங்களா…? இல்லல்ல… அப்றம் என்ன மயிருக்கு வாயி கிய்ய அது இதுன்னு நோணாவெட்டி பேசிக்கீனு. எவன்னா நேருல பாத்தவன் இருந்தா மட்டும் முன்னால வந்து சொல்லுங்க… கீறீங்களா…? எவன்னா கீறீங்களா…?’’

ஆச்சாரி கேட்டதும் ஒருவரும் வாய் திறக்கவில்லை.

மெல்ல கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்த தலைவரும் மனைகாரும் சிறு ஆவாரம் செடியோரம் கிடந்த சோலைக்கண்ணன்  உடலைப் பார்த்துவிட்டு, மேலே அண்ணாந்து தூக்குமாட்டித் தொங்கிய கிளையையும் பக்கத்தில் அவிழ்த்துப் போட்டிருந்த கயிற்றையும் பார்த்து பொன்னுசாமி ஆச்சாரியிடம், யார் முதலில் வந்து பார்த்தது தொடங்கி… யார் யார் சேர்ந்து அவிழ்த்தது வரைக்கும் கேட்டறிந்தார்கள்.

”செரி, என்ன பண்ணலாம்னு கீறீங்க…?’’

மனைகார் ஆச்சாரியிடம் கேட்டார்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் அவர் திரும்பி கவுண்டரைப் பார்த்தார்.

உடனே பக்கத்தில் நின்றுகொண்டு, சோலைக்கண்ணனின் உடலில் கையிலும் காலிலும் லேசாக வயிட்டியிருப்பதையும், இடதுகால் கட்டைவிரலில் அடிபட்டு நகம் பேர்த்துக்கொண்டு ரத்தம் வந்து காய்ந்திருப்பதையும், காலெல்லாம் காப்புகாய்த்து ஆங்காங்கே வெடித்திருப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டரின் தோளை தொட்டுக் கூப்பிட்ட மனைகார், ”நீங்க சொல்லுங்க கவுண்ர, என்ன பண்ணலாம்னு கீறிங்க…?’’ என்று கேட்டார் நிதானமான குரலில்.

”நானு என்ன சாமி சொல்லப்போறன்… ஊரு மனேகாரு நீங்க, தலிவரு தோ கீறாரு. நீங்களா பாத்து ஒரு முடுவு பண்ணி என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. அதான் சரியாருக்கும்.’’

கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு திரும்பி சோலைக்கண்ணன் உடலைப் பார்த்தவர், ”இல்ல கவுண்ர, ஊருல பெரிவுரு நீங்க… நீங்களே ஒரு முடுவு சொல்லுங்க’’ என்றார்.

எள்ளளவும் யோசிக்காமல் உடனே, ”இவுனுக்கு தாயி தவுப்பன் கூட பொறந்தவுங்கன்னு யாரும் கெடயாது… யாரோ சித்தாத்தாக்காரி ஒருத்தி கொளமஞ்சனூர்ல கீறத்தா சொல்றாங்க. அவுளும் இப்ப கீறாளா இல்லயான்னு தெர்ல. ஊராரு நாமதான் பாத்து ஆவவேண்டித செய்யிணும்’’ என்றார் கவுண்டர்.

‘சரி’ என தலையாட்டிவிட்டு திரும்பி தலைவரைப் பார்த்தார் மனைகார். அவருக்கும் அதுதான் சரியெனப்பட்டது. உடனே அவரும் ‘சரி’ என்று தலையாட்டினார்.

”செரி, அப்றென்னப்பா பாத்துக்கினு…? தூக்குங்க, தூக்கினு போயி ஊரு பொதுவுல வப்போம்’’ என்றார் பொன்னுசாமி ஆச்சாரி.

மறுநொடியே, ‘வா, வந்து தூக்கு’ என திரும்பி கவுண்டர் கண்ணைக் காட்ட, கூட்டத்தோடு நின்றிருந்த செவடன் முன்னால் வந்து சோலைக்கண்ணன் உடலை தனியொருவனாக அலேக்காகத் தூக்கி தன் இறுக்கமான ஓங்கிய தோள்மேல் போட்டுக்கொண்டு கிடுகிடுவென நடந்து தென்னந்தோப்பு வழியாக கோயில் தாண்டி ராமு கவுண்டர் வீட்டின் முன்னாலிருந்த காட்டுவா மரத்தடியில் கொண்டுவந்து, பின்னிய தென்னை மட்டை எடுத்துப் போடச் சொல்லி அதன்மேல் படுக்கப்போட்டான்.

ஊர் போடுமுட்டைகள், அதிலும் குறிப்பாக முருகன் கூட்டாளிகள் வந்து ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு எட்டிஎட்டி உடலைப் பார்த்துவிட்டு போய் எதிரிலிருந்த வேப்ப மரத்தடியில் வட்டமாக மண்ணில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

”ஏ, பாவம்டா சோலக்கண்ணன். நாமலாம் எத்தன வாட்டி அவனப் பாத்து பைத்திங்கிளினு சொல்லி பைசி காட்டிகீறோம். நம்மள ஒருவாட்டி கூட பதிலுக்கு அவன் திட்னதில்லல்ல…?’’

”ஆமாம்டா… நானும் ரவியும் ஒருநாளு புளியாமரத்து பின்னால மறஞ்சினிருந்து, கல்லால சுரீர்னு அடிச்சிட்டம். பாவம் அவுனுக்கு எம்மாம் வலிச்சிருக்கும்ல…?’’

முருகன் கண்கலங்கி அழாத குறையாகச் சொன்னான்.

”நீயாது பரவால்ல, இந்த குமாரு கீறான்ல குமாரு… அவன் என்னா பண்ணான் தெரிமா… சோலக்கண்ணன் எங்கருந்தோ தேங்கா ஒண்ணு கொண்டாந்து தலமோட்டுல வச்சிக்கினு… கோயிலாண்ட படுத்துனுருந்தான். இவன் போயி அசாம அத தூக்கினு… அவனப் பாத்து சூத்தாட்டி காட்டிட்டு ஓடியாந்துட்டான்.’’

கேட்டுவிட்டு பாதிபேர் மட்டுமே சிரித்தார்கள். மீதிபேருக்கு சிரிப்புக்குப் பதிலாக அழுகையைத்தான் அது வரவழைத்தது.

”சோலக்கண்ணன்தான் இப்ப செத்துப்போயிட்டான்ல… இனிமேலாச்சி நாம அவன ‘டா’ போடாம இருக்கலாம்டா… பாவம் அவன்.’’

முருகன் சொன்னதைக் கேட்டுவிட்டு, ”ஏ ஆமாம்டா, முருகன் சொல்றதான் செரி’’ என்றான் ரவி.

”வாங்கடா நாம போயி, ஒருவாட்டியாது அவன அண்ணான்னு சொல்லாம்மா…?’’

உடனே குமார் எல்லோரையும் பார்த்து கேட்க, ஒருமனதாக எல்லோரும் ‘சரி’ என தலையாட்டினார்கள்.

எழுந்து திபுதிபுவென திரும்பவும் போய் சோலைக்கண்ணன் உடலைச் சுற்றிலும் நின்று, ஒவ்வொருவரும் வரிசையாக ”சோலக்கண்ணு அண்ணா…’’ என்று தங்களுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிவிட்டு வந்து மரத்தடியில் உட்கார்ந்துகொண்டார்கள்.

அடுத்த செத்தநேரத்தில் மேளக்காரர்கள் வந்து காட்டுவா மரத்தோரமிருந்த துவரை மிலார் எடுத்துப்போட்டுக் கொளுத்தி காய்ச்சி பறை அடிக்க, இருவர் போய் ஓடைக் கரையிலிருந்து மூங்கில் வெட்டிவந்து பாடை கட்ட ஆரம்பித்தார்கள்.

வெயில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மழை வருவதுபோல் வானம் மப்பும் மந்தாரமுமாக மாறிக்கொண்டிருந்தது. புளியமரத்திலிருந்து அப்படியே காவாங்கரை வழியாக ஓட்டமாக கொளமஞ்சனூர் போன பெரியசாமி, நான்கைந்து பேரிடம் கேட்டு விசாரித்து, ஒருவழியாக சோலைக்கண்ணனின் சித்தாத்தா அங்கம்மா கிழவியைக் கண்டுபிடித்து தகவல் சொல்லி, கையோடு கூட்டிவந்தான்.

வழிநெடுக ஏதேதோ சொல்லி அழுதுகொண்டு வந்த கிழவி, ராமு கவுண்டர் வீட்டின் முன்னால் படுக்கப் போட்டிருந்த தன் அக்கா மகன் சோலைக்கண்ணன் உடலைப் பார்த்துவிட்டு, ”அய்யோ… அய்யோ… அய்யோ… இப்டி நீ சுருக்குபோட்டுனு சாவவா என் அக்காக்காரி ஒன்னப் பெத்துப் போட்ட்டு போனா…?’’ என்று மாரிலடித்துக்கொண்டு கத்தி அழ ஆரம்பித்தார்.

”இவன எப்டியெல்லாம் பெத்து –

எப்டியெல்லாம் வளத்தாளே…

மாருலயும் போட்டு தோளுலயும் போட்டு –

மகராசன்னு சொன்னாளே…

தங்கமுன்னு வைரமுன்னு –

பூரிச்சி போனாளே…

இவன் ஆடறதும் பாடறதும் கண்டு –

வாயடச்சி நின்னாளே…’’

தள்ளி ஆங்காங்கே நின்றுகொண்டு பேசிக்கொண்டிந்தவர்கள் கிழவி கத்தி ஒப்பாரி வைத்து அழுவதைக் கேட்டுவிட்டு பக்கத்தில் வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

”முள்ளா இருந்திருந்தா வேலியா கட்டிருப்பன் –

எலயா இருந்திருந்தா ஆட்டுக்கு போட்டிருப்பன்…

காயா இருந்திருந்தா வவுத்துக்குத் தந்திருப்பன் –

கொட்டயா இருந்திருந்தா மண்ணுல நட்டிருப்பன்…

மரமா இருந்திருந்தா நெருப்புல வச்சிருப்பன் –

அட எதுக்கும் இல்லாம பாரமா இருந்து போனானே…”

கிழவி இந்த ஒப்பாரிப் பாட்டை பாடிக்கொண்டு அழுவதைத் தன் மச்சான் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த கவுண்டர் வேகமாக எழுந்து பக்கத்தில் வந்து, ”இப்பெதுக்கு இதலாம் சொல்லினு ஒப்பாரி வக்கிற நீ…? அவன் ஒண்ணும் வக்கத்து வூடுவூடா போயி கையநீட்டி எச்சிசோறு வாங்கித் தின்னு வாந்துட்டு போவல… அதோட, ஒருவேலயும் செய்யாம ஒதவாக்கரயா பூமிக்கி பாரமாவும் இருந்துட்டு போவல’’ என்றுவிட்டு, ”என்ன பொறுத்தவரிக்கும் அவுனோட சாவு நல்ல சாவுதான். இந்த பூமிமேல நிம்மிதில்லாம அவ்தாலயும் இவ்தாலயும் நடந்துனு லோலுபட்டு கெடந்தவுனுக்கு… இந்த சாவு நெல நிம்மிதிதான்’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி கண் கலங்கிக்கொண்டு வீட்டின் பின்னால் வந்து முருங்கை மரத்தடியில் நின்று தனக்குள் சத்தமின்றி அழுதுகொண்டிருந்தார்.

பின்னாலேயே வந்த ராமு கவுண்டர், அவருக்கு ஆறுதல் சொல்லி கூட்டிவந்து திண்ணையில் உட்கார வைத்தார்.

ஒருகட்டம் வரைக்கும் வெறும் வேடிக்கையாக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஊரார்கள், சோலைக்கண்ணன் குறித்து பலரும் சொல்வதைக் கேட்டுவிட்டு தாங்களும் கண்கலங்கி அழ ஆரம்பித்தார்கள்.

பாடை கட்டி முடித்ததும் எல்லோரும் சேர்ந்து வேகவேகமாக செய்யவேண்டிய முக்கிய சடங்குகளையெல்லாம் செய்து, உடலைக் குளிப்பாட்டி புது சோமம் கட்டிவிட்டு, பொட்டிட்டு நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை ஒட்டிவிட்டு, வீட்டின் பின்னாலிருந்து சிறு வாழைக்கன்று ஒன்று வெட்டிவந்து அத்துடன் திருமணமாகாமல் இறந்துபோன சோலைக்கண்ணனுக்கு மணம் செய்துவைத்து கன்னிகழித்து, அதை இரண்டாக வெட்டி அவனோடு சேர்த்து அதையும் எடுத்துப்போய் பாடையில் வைத்து தூக்கிக்கொண்டு கிழக்கே ஊரை ஒட்டியுள்ள ஆற்றங்கரையோர இடுகாட்டில் போய் புதைத்துவிட்டு ஆற்றில் தலை மூழ்கிவிட்டு வந்தார்கள்.

தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி முடியனூரான் கொல்லி முடக்கில் வளையும்போது ராமு கவுண்டர் கேட்டார், ”ஏன் முத்துசாமி, அவனாதான் சுருக்குமாட்டினு செத்திருப்பான்னு நெனக்கிற…?’’

எதுவும் சொல்லாமல் செத்தநேரம் அமைதியாக வந்தவர், மெல்ல திரும்பி ராமு கவுண்டரைப் பார்த்து சிரிப்பதுபோல் உதடசைத்துக் காட்டிவிட்டு, ”அதந்த ஆண்டவுனுக்குதான் தெரியும்’’ என்றார்.

”சின்ன வயசுல எப்டிலாம் தெறவிசியா இருந்தான்… பாவம், இன்னிக்கி இப்டி போயி சேந்துட்டான்.’’

ராமு கவுண்டர் வருத்தத்தோடு சொன்னதைக் கேட்டதும் சட்டென்று கவுண்டருக்கு, சோலைக்கண்ணன் பதினான்கு வயதாக இருக்கும்போது கோயிலில் பொங்கல் வைத்துக்கொண்டிருந்த தன்னிடம் வந்து வைத்தியம் குறித்து கேட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது.

அதுவும் ஊர் பருவாரங்களோடு பனை ஓலையில் காத்தாடி செய்து சுற்றிக்கொண்டிருந்தவன், என்ன நினைத்தானோ திடுமென கோயில் முன்னால் உட்கார்ந்து அடுப்புமூட்டி பொங்கலிட்டுக் கொண்டிருந்த கவுண்டரைப் பார்த்துவிட்டு ஓடிவந்து, ”எண்ணா எண்ணா… நானு ஒண்ணு கேப்பன், சொல்லுவியா…?’’ என்று கேட்டான்.

மெல்லத் தலையாட்டி புன்னகைத்த கவுண்டர், ”கேளுடா சொல்றன்’’ என்றார்.

”எப்டிண்ணா எல்லாத்துக்கும் வைத்தியம் சொல்லி செரி பண்ற…?’’

சோலைக்கண்ணனின் கேள்வியைக் கேட்டுவிட்டு தனக்குள் சிரித்துக்கொண்ட கவுண்டர், ”வைத்தியம்றது மொதல்ல நோவாளிக்கு தெம்பு தர்றதான். அதுக்கப்பறம்தான் தய தண்ணினு அதுக்கான மருந்து தர்றதுலாம்’’ என்றார்.

புரியாததுபோல் உதட்டைப் பிதுக்கிக்காட்டி முழித்தான் சோலைக்கண்ணன்.

மெல்ல முறுவலித்த கவுண்டர், அவனுக்கு புரிவதுபோல் இன்னும் விளக்கமாகச் சொன்னார்.

”யாரு நம்மக்கிட்ட வந்து அவுங்குளுக்கு அது இதுன்னு சொல்லி வைத்தியங் கேட்டாலும்… அவுங்க கண்ணப் பாத்து உறுதியா இதான்னு சொல்லி, அதுக்கான மருந்த பறிச்சாந்து தந்து… தெம்பா நாலு வார்த்த சொல்லி… இதப் போட்டுட்டு படு சட்டுனு சரியாப்புடும்னு சொன்னம்னா போரும், வாங்கினு போயி அவுங்குளும் தெம்பா போட்டுட்டு படுப்பாங்க. மருந்து அவுங்க நோவ செரி பண்ணுதோ இல்லியோ… நாம தந்தனுப்புன தெம்பு அவுங்குள செரிபண்ணிடும். மருந்த வுட தெம்புதான் எந்த நோவயும் சரியாக்கற மொத மருந்து. அதுக்கப்பறம்தான் எதுவாருந்தாலும்.’’

”வைத்தித்துல இம்மாருக்காண்ணா…?’’

கண்கள் அகல விரிய கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டான் சோலைக்கண்ணன்.

‘ஆமாம்’ என தலையாட்டினார் கவுண்டர்.

மெல்ல கண்கள் மூடி தனக்குள் எதையோ நினைத்து, சில நொடிகள் சிரித்துக்கொண்டு கவுண்டரின் முகத்தைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்த சோலைக்கண்ணன், ”எனுக்கும் பெரியாளாயி ஒன்னமரே எல்லாத்துக்கும் வைத்தியம் சொல்லுணும்ணா… அதான் என் ஆச’’ என்று சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த ஓலைக் காத்தாடியை காற்றின் திசையில் காட்டி சுழலவிட்டுக்கொண்டு வேகமாக ஓடி பருவாரங்களோடு சேர்ந்துகொண்டான்.

தனக்குள் இதை ஓட்டிப்பார்த்துக்கொண்டு ராமு கவுண்டரிடம் எதுவும் பேசாமல் மெல்ல முரம்புக் கொல்லி மேடேறி வீட்டுக்கு வந்து, கட்டுத்தெரு பின்னால் துரிஞ்ச மரத்தடியில் போட்டிருந்த கோலமாவு கல்மேல் போய் உட்கார்ந்து, சற்று தள்ளி முளைகுச்சியில் கட்டியிருந்த கருப்பு மாட்டை கண்கலங்கப் பார்த்தார் கவுண்டர்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=