முரம்பு – 16

கணந்தோறும் இருட்டிக்கொண்டு வந்தது. இருள் என்பது கொஞ்சநேரம்தான். கண்கள் பழகப் பழக ஒளியாகிவிடும் இயல்புகொண்டது.
கடப்பாரை, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, இருளுள் தெரிந்த மென்வெளிச்சத்தில் நடந்து வந்து மேட்டுத் துண்டு மரிசியில் குழந்தையைப் புதைத்த இடத்தருகில் இருந்த வேப்ப மரத்தடியில் வைத்துவிட்டு ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த முத்துசாமிக் கவுண்டர், எதுவும் பேசாமல் முன்னால் நடக்க… அவர் பின்னாலேயே நடந்து கட்டுத்தெருவுக்கு வந்தான் செவடன்.
மாணிக்கமும் ஏழுமலையும் துரிஞ்ச மரத்தடியில் கட்டியிருந்த கருப்பு மாட்டையும் செவுல் கன்னுக்குட்டியையும் அப்போதுதான் அவிழ்த்து, அன்னக்கூடையில் புண்ணாக்குப் போட்டு கலக்கி வைத்திருந்த கஞ்சித்தண்ணி காட்டிவிட்டு போய் கட்டுத்தெருவுக்குள் கட்டிவிட்டு வெளியில் வந்தார்கள்.
சட்டென என்ன நினைத்தானோ செவடன், ”செரி, கவுண்ர… நானு வூட்டுக்கா போறன்’’ என்று சொல்லிவிட்டு கவுண்டரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினான்.
நான்கடி எடுத்து வைத்திருப்பான். ”இருடா செவடா… தோ வந்துட்றன்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டின் முன்னால் போய் நின்று உள்ளே குரல் கொடுத்து பூரணியம்மாவை கூப்பிட்ட கவுண்டர், ”ஏன் பூர்ணி… செவடன் வூட்டுக்குப் போறான் பாரு… சோறுகீறு எதனா இருந்தா தந்துவுடு’’ என்றார்.
பூரணியம்மா, ஏற்கெனவே செவடனுக்கும் அவன் மனைவி பிள்ளைக்கும் சேர்த்து தந்தனுப்ப டீப்பனியில் சுடு கஞ்சிசோறு போட்டு தயாராக வைத்திருந்தார்.
தாழ்வாரத் திண்ணையில் இருந்த டீப்பனியை எடுத்து வந்து வெளியில் வாசலில் நின்றிருந்த கவுண்டரிடம் பூரணியம்மா தந்ததும் வாங்கிக்கொண்டு போய் கட்டித்தெரு முன்னால் நின்றிருந்த செவடனிடம் தந்து, ”இந்தாடா செவடா… இத எடுத்துனு போயி வூட்ல ஒக்காந்து சாப்டு’’ என்றார்.
எதுவும் சொல்லாமல் உணர்வற்ற தக்கை போல் கை நீட்டி வாங்கிக்கொண்டு நடந்தான் செவடன்.
எப்போதும் போல் இல்லாமல் செவடனின் குரல் துயரத்தில் தோய்ந்திருப்பதை மனத்தில் ஓட்டிக்கொண்டு மெல்ல நடந்து வீட்டின் பின்னால் போய் சாக்கடையில் கை கால் முகம் கழுவிவிட்டு தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்த கவுண்டர், சுவரோரம் சாய்த்து வைத்திருந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டு உட்கார்ந்து கிழக்கு வானையும் மேகத் திரள்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பார்க்கும் நிலவையும் அதைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டுவிட்டு ஒளிர்ந்த நட்சத்திரங்களையும் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு…
‘இந்த செவடன் மட்டும் இல்லனா… நம்ம பொழப்பு என்னாயிருக்கும்…? அவன் தந்த தெம்புலதான… அவன் கீற தொணயிலதான… கைமாத்து கிய்மாத்து வாங்கி ஆளக்கூப்ட்டு ஓட்டி மல்லாட்டப் போட்ருக்கம்…?’
‘தனி ஒருத்தனா இருந்துகினு எம்மாம் வேலய இஸ்துப்போட்டு செய்யறான்… அம்மாம் செட்டு மண்ணா கீற எடத்துல கூட அசராம நின்னு காவா நோண்றான்…’
‘அடுத்துவுங்குளுக்கு ஒண்ணுனா ஓடியாந்து பட்டுனு சொல்ற செவடன்… ஏன்தான் தனுக்கு ஒண்ணுனா மட்டும் வாயவே தொறக்க மாட்றானோ தெர்ல…’
தனக்குள் ஏதேதோ நினைத்துக்கொண்டு சிலைபோல் உட்கார்ந்திருந்த கவுண்டருக்கு, சின்ன சட்டியில் கஞ்சிசோறு போட்டு கடித்துக்கொள்ள செட்டியார் வீட்டில் தந்த அணில்காய் ஊருகாய் எடுத்துக்கொண்டு வந்தார் பூரணியம்மா.
தான் வந்து பக்கத்தில் நிற்பதைக் கூட கவனிக்காமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த கவுண்டரைப் பார்த்து பூரணியம்மா, ”ஏந்தே… ரவ கஞ்சி கொண்டாந்துகீறன், குடி தே’’ என்று நீட்டினார்.
பூரணியம்மாவின் குரல்கேட்டு சட்டென நினைவு வந்தவராய் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கவுண்டர், ”வேணாம் பூர்ணி… சுத்தமா பசில்ல… போயி புள்ளிங்குளுக்கு தந்துட்டு, நீயும் குடிச்சிட்டு படு’’ என்றார், சில நொடி மவுனத்துக்குப் பின்.
”ஏந்தே, என்னாச்சு…?’’
தன் வலது கையில் சின்ன டீப்பனி மூடியில் வைத்திருந்த ஊறுகாயை கட்டில்மேல் வைத்த பூரணியம்மா, கவுண்டரின் முன்னால் வந்து நின்று அவரது தலைமுடியை கோதிக்கொண்டு கேட்டார்.
எதுவும் சொல்லாமல் தலையைக் கீழே தொங்கப்போட்டிருந்த கவுண்டரிடம், ”எதுவா இருந்தாலும் காலில பேசிக்கலாம் தே… இப்ப ரவ கஞ்சி குடிச்சிட்டு படு… அப்பதான் தூக்கம் வரும்’’ என்று சொல்லி, தன் கையில் வைத்திருந்த கஞ்சிசட்டியைத் தந்தார் பூரணியம்மா.
வாங்கிக்கொண்டு மெல்ல தலை நிமிர்த்திப் பார்த்த கவுண்டரின் கண்கள் கலங்கியிருப்பதை அவ்வளவு இருட்டிலும் கண்டுகொண்டு, சட்டென்று தன் புடவைத் தலப்பை எடுத்து துடைத்துவிட்ட பூரணியம்மா, ”எம்மாந்தான் அந்த ஆண்டவன் நம்முளுக்கு சோதன மேல சோதன தந்தாலும்… என்னிக்கும் நம்மள கைவுட்ர மாட்டான்னு நீதான தே சொல்வ… இப்ப நீயே இப்டி ஒடஞ்சிபோயி ஒக்காந்துனுருந்தனா… அத பாக்ற புள்ளிங்க கலங்கிட மாட்டாங்களா…?’’ என்று கேட்டார்.
விழியோரம் வழிந்து வந்த நீர்த்துளியைத் தன் இடது கையால் துடைத்துக்கொண்டு, தன் மடிமேல் வைத்திருந்த சட்டியில் மெதுவாகக் கைவிட்டு ஒருபிடி கஞ்சிசோறு அள்ளி வாயில் வைத்தார் கவுண்டர்.
நடுவீட்டுக்குள் குத்துரல் பக்கத்தில் சீமெண்ணை விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து புளியங்கொட்டை வைத்து தன் அக்கா செல்வியுடன் கொட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த முருகன்… கையில் வைத்திருந்த எட்டு கொட்டைகளைக் கீழே போட்டுவிட்டு, அருகருகில் இருந்த இரு கொட்டைகளுக்கு இடைப்பட்ட சிறு இடத்தில் தன் சுண்டு விரலால் கோடு கிழிக்கையில் இரு கொட்டைகளும் சிலுங்கியதால் கடுப்பாகி ஆட்டத்தை களைத்துவிட்டு, செல்வியிடமிருந்து அடிவாங்காமல் தப்பிக்க எழுந்து வேகமாக ஓடிவந்து வாசப்படியில் நின்று, ”எம்மா எம்மா… அக்காக்காரி என்ன அடிக்கறாம்மா…’’ என்று கூப்பிட்டு சொன்னதைக் கேட்டு செல்வியை அதட்டிக்கொண்டு வீட்டுக்குள் போனார் பூரணியம்மா.
கட்டில்மேல் பக்கத்தில் வைத்திருந்த ஊறுகாயைக் கடித்துக்கொண்டு அள்ளி ஒவ்வொரு வாயாக சாப்பிட்ட கவுண்டர், கடைசியாக சட்டியைத் தூக்கி சாய்த்து ஒரே மொடக்கில் கஞ்சித்தண்ணி மொத்தத்தையும் குடித்துவிட்டு எழுந்து போய் திண்ணையில் வைத்துவிட்டு, அங்கிருந்த ஒடுக்கு விழுந்த சின்னக் குண்டான் நீரில் கையையும் வாயையும் கழுவிக்கொண்டு வந்து துண்டில் துடைத்துவிட்டு, கட்டிலில் விரித்துப்போட்டு படுத்துக்கொண்டார்.
செத்தநேரம் கூட ஆகியிருக்காது. சட்டென அசதியில் தூங்கிவிட்டார்.
நள்ளிரவு இரண்டு மணியிருக்கும்.
”ஐய்யா… ஐய்யா…’’
யாரோ தன்னை கூப்பிடும் சத்தம் வெகுதூரத்தில் கேட்டது கவுண்டருக்கு. மெல்ல தூக்கம் களைந்து ஒருக்களித்துப் படுத்தார்.
”ஐய்யா… ஐய்யா…’’
திரும்பவும் அதேகுரல். அதே வார்த்தை, அதே தொணியில்.
மெதுவாகத் தன் கண்களைத் திறந்து எழாமல் நாலா பக்கமும் தலையை மெதுவாக திருப்பிப் பார்த்தார். யாரும் இல்லை. வீட்டுக்குள் பார்த்தார். எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பூச்சிபொட்டுகளின் மென்சத்தம் தவிர வேறு எச்சத்தமும் கேட்கவில்லை. திரும்பவும் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார்.
”ஐய்யா… ஐய்யா…’’
கொஞ்சநேரம் கழித்து மறுபடியும் அதேகுரல். ஆனால் இம்முறை, அது எதையோ எண்ணி ஏங்கிய துயரக் குரல் போல கேட்டது. அதோடு, மழலை மனம் மாறாத பிஞ்சுக்குரல்.
இத்தடவை கண்களைத் திறந்து பார்க்காமல் அப்படியே படுத்துக்கொண்டு அக்குரலுக்காக, அது எத்திசையிலிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக ஐம்பொறிகளையும் ஒருபொறியாய்க் கொண்டு காத்திருந்தார் கவுண்டர்.
சிறிது நேரத்திற்குப் பின் ஓர் அழுகுரல் ஒலித்தது. அதுவும் கிழக்கே முரம்புக் கொல்லியிலிருந்து. பதறிப்போய் எழுந்து உட்கார்ந்த கவுண்டர், சுற்றுமுற்றும் பார்த்தார். ஆளரவம் இல்லை. எதையோ தன்னுள் நினைத்தபடி அங்கிருந்து நடந்தவர், நேராக கட்டுத்தெருவுக்குள் போய் கருப்பு மாடும் செவுல் கன்னுக்குட்டியும் இருக்கிறாதா எனப் பார்த்துவிட்டு, வெளியில் வந்து சுவரோரமாக இருந்த சிறு மூங்கில் கோலை கையில் எடுத்துக்கொண்டு முரம்புக் கொல்லி நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
‘எம்புள்ளதான்… கூப்டது எம்புள்ளதான்… அவன்தான் ஐய்யா ஐய்யான்னு ஆசஆசயா என்ன கூப்டான்… நானு போவாத்துனால அய்வறான்… பாவம் எம்புள்ள… எப்டிலாம் பொறந்து எப்டியெப்டிலாம் வளந்து ஆளாவ வேண்டிவன்…? கண்ணத் தொறந்து தாயி தவுப்பன் மொகத்தக் கூட பாக்காம போயி சேந்துட்டானே… அவன்தான் கூப்பட்றான்… அவன் உசுரு எங்கயும் போவல, இங்கதான் கீது… அவன பொதச்ச எடத்துலதான், இந்த மொரம்புக் கொல்லிலதான் கீது… அன்னிக்கி முருகனயும் கருப்புச்சியயும் கூப்டவன், இன்னிக்கி என்ன கூப்டுகீறான்… பாவம் புள்ள தனியாருக்க பயிந்துபோயி… இல்லனா, எதயோ பாத்து பயிந்துபோயி கூப்டுகீறான்…’
‘பூர்ணி, அவுனுக்கு ஆசப்பட்டு சந்தரகாலி பொடவ வாங்கிவச்சா… நானு, நடவண்டி செஞ்சிவச்சன்… முருகன், அவுனோட வர்ணக்கோல தரப்போறன்னு எல்லாத்துகிட்டயும் சொல்லினிருந்தான்… பாவம் எதயும் பாக்காமயே போயி சேந்துட்டான் புள்ள…’
‘வேடிப்பன், முனிப்பன், பொறடியாத்தா, எல்லசாமின்னு எம்மாஞ்சாமிய நானு கும்டிருப்பன்…? ஒரு சாமியும் வந்து எம்புள்ளய காபுந்து பண்லயே… அந்த பச்ச ரிசுவு என்ன பாவம் பண்ணிச்சுன்னு அதோட உசுர பூமிய பாக்கறதுக்குள்ளார எடுத்துனு வுடணும்…? மண்ணுமேல எத்தன மரம் மட்டிங்கலாம் கீது… கல்லு பச்சிங்கலாம் கீது… அதுக்கூட ஒண்ணாவாது எம்புள்ளிய இருக்க வுட்ருக்கலாமே… மொண்டியா மொடமாவாது அவன ஒரு ஓரமா நடமாட வுட்ருக்கலாமே… எம்புள்ள ஐய்யா ஐய்யான்னு அய்துனு என்ன கூப்டானே… நானு இப்ப என்ன பண்ணுவன்…?’
உடைந்துபோய் தனக்குள் என்னென்னமோ சொல்லி பெனாத்திக்கொண்டு, வெப்பால மர வழியாக மேற்குத் தூண்டில் இறங்கி நடந்து, காலில் பொத்த நெருஞ்சி முள்ளையும் பொருட்படுத்தாமல் நடுத்துண்டு மரிசி ஓரமாகப் போய் மேட்டுத் துண்டு மரிசியில் பிள்ளையைப் புதைத்த இடத்தருகில் உட்கார்ந்து, ”எய்யா, சரவணா… எஞ்சாமி… சரவணா…’’ என்று கண்கலங்கி அழுது கூப்பிட்டார்.
”நானு கூப்பட்றது ஒணுக்கு கேக்குதாய்யா…? எஞ்சாமி, சரவணா… எய்யா, சரவணா…’’
மெல்ல குழந்தையைப் புதைத்த மண் மேட்டைத் தன் இரு கைகளால் தொட்டுப் பார்த்துக் கேட்டார் கவுண்டர்.
”ஐய்யா ஐய்யான்னு, வாயார கூப்டியேய்யா… இதோ, ஒன் ஐய்யா வந்துகீறன் சாமி… பாரு சரவணா… எய்யா…’’
இரு கன்னத்திலும் கண்ணீர் வழிய மண்மேடு நடுவில் நட்டிருந்த வேப்பங்கன்றைத் தன் விரல்களால் மெதுவாகத் தொட்டு வருடினார்.
நடுவானுக்கு வந்திருந்த நிலவின் வெள்ளொளி, ஒளிமழை பெய்வதுபோல் ஏர் ஓட்டி பயிர் போட்டிருந்த முரம்புக் கொல்லியெங்கும் பெய்துகொண்டிருந்தது.
வேப்பங்கன்றைத் தொட்டு வருடிக்கொண்டிருந்த கவுண்டர், தன்நிழல் மண்மேட்டில் சிற்றுருவம் போல் சிந்திக்கொண்டிப்பதைப் பார்த்ததும் முதலில் அது இறந்துபோன தன் மகன் சரவணனின் நிழலுருவம்தான் என நினைத்து மெல்ல கை நீட்டி தொடப்போனவருக்கு, அவனுருவம் அல்ல அது தன்னுருவம்தான் என்பது புலப்பட்டதும் ஏமாற்றத்தோடு தலையை நிமிர்த்தி வானில் ஒளிக்கின்னம்போல் ஒளிர்ந்துகொண்டிருந்த நிலவைப் பார்த்தார்.
சட்டென நொடிநேரம் அதிலொரு மழலைமுகம் தெரியக்கண்டவர், அதிர்ந்துபோய் கண்களை அகல விரித்துப் பார்த்தார். எம்முகமும் இல்லை. உடனே எழுந்து நின்று தோளில் போட்டிருந்த துண்டால் கண்களைத் துடைத்துவிட்டு, அண்ணாந்து மறுபடியும் பார்த்தார். அப்போதும் இல்லை.
பெருத்த ஏமாற்றத்தோடு தொம்மென உணர்வற்று கீழே உட்கார்ந்த கவுண்டர், மண்மேட்டையும் நடுவில் நட்டிருக்கும் வேப்பங்கன்றையும் சரிந்த விழிகளில் ஏக்கத்தோடு பார்த்தார்.
மேட்டிலிருந்த தன் சிறு குடிசை வீட்டுக்கு வெளியில், வாசலில் தென்னங்கீற்று போட்டு படுத்துக்கொண்டிருந்த செவடனுக்கு எவ்வளவு உருண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.
வெகுநேரம் வெறுமே படுத்திருந்தவன் மெல்ல எழுந்து உட்கார்ந்து, தெருவின் இருபக்க முனை வரைக்கும் பார்த்தான். ஒருவரும் இல்லை. பலர் வீட்டுக்குள்ளும் சிலர் வாசலிலும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
சற்று தள்ளியிருந்த கூரை வீட்டின் வாசப்படி திட்டோரம் படுத்திருந்த வெள்ளை நாய் மட்டும், அவன் எழுந்து உட்கார்ந்திருப்பதைத் தன் கூர்த்த விழியால் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது… நிலவு வெளிச்சத்தில் நன்றாகவே தெரிந்தது செவடனுக்கு.
உண்மையில் முன்னிரவு வீட்டுக்கு வருவதற்கு முன், கவுண்டர் மட்டும் கஞ்சிசோறு கொடுத்தனுப்பாமல் போயிருந்தால் செவடனின் மனைவி, பிள்ளை இருவரும் பட்டினியாகத்தான் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்திருப்பார்கள். செவடனைப் போல் அவர்களும் பசியில் தூக்கம் வராமல் இரவு முழுக்க விழித்திருப்பார்கள்.
நல்லவேளை பூரணியம்மா டீப்பனி நிறைய கஞ்சிசோறு போட்டு, பிடியில் கல்யாணமுருங்கை இலையில் கடித்துக்கொள்ள அணில்காய் ஊறுகாய் வைத்து, வாழைநார் போட்டு கட்டி தந்தனுப்பினார். இல்லையேல் மூவரும் பட்டினிதான்.
கவுண்டர் தந்த கஞ்சிசோற்றை வாங்கிக்கொண்டு வந்து காலை மதியம் இருவேளையும் சாப்பிடாமல் பசியில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு படுத்திருந்த தன் மனைவியிடம் தந்த செவடன், ”நானு கவுண்ரு வூட்லயே சாப்டன் புள்ள… நீயும் புள்ளயும் வயிறார சாப்ட்டு படுங்க’’ என்று பொய் சொல்லிவிட்டு, கண் கலங்கியபடி போய் குடிசைக்குப் பின்னாலிருந்த சாக்கடையில் கை கால், முகம் கழுவிக்கொண்டு மெல்ல அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை.
சட்டெனப் பானையிலிருந்த தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி கன்னம் கழுத்து மார்பு எங்கும் வழிய, பசித்த வயிறு நிறைய குடித்த செவடன், தன் தோளில் போட்டிருந்த துண்டால் முகத்தையும் கழுத்தையும், மார்பையும் துடைத்துவிட்டு… தன் வறுமையை எண்ணிக்கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
நெடுங்காலில் சாய்ந்து உட்கார்ந்து, அவன் மனைவியும் பிள்ளையும் ஊறுகாய் கடித்துக்கொண்டு கஞ்சிசோற்றை வாரிவாரி சாப்பிட்டு தங்கள் பசியைக் கொஞ்சம் கொஞ்சமாக வெல்வதைப் பார்த்து நிறைந்தவனாய் பக்கத்திலிருந்த துணி மூட்டைமேல் மடித்து வைத்திருந்த தன் கிழிந்த கட்டம்போட்ட துப்பிட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, கூரைமேல் போட்டிருந்த தென்னங்கீற்றை எடுத்து வாசலில் போட்டு படுத்துக்கொண்டான்.
வறுமை தன்னோடு பிறந்ததாக எப்போதும் நினைத்துக்கொள்வான் செவடன். அதிலும் கவுண்டர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், எப்போதோ தான் பசியால் மடிந்துபோயிருப்பேன் என்றும் சொல்லிக்கொள்வான்.
ஊரிலிருந்த வரைக்கும் ஏர் ஓட்ட, சேடை ஓட்ட, பறம்பு அடிக்க, அண்ட வெட்ட, பட்டை கட்ட, கிணறு தோண்ட, கால்வாய் தோண்ட, நாத்து பிடுங்க, நடவு நட, பயிர் போட, களை வெட்ட, களை பறிக்க, மல்லாட்டை பிடுங்க, தழை கழிக்க, நெல் அறுக்க, சாமை அறுக்க, எள் அறுக்க, கட்டு தூக்க, நெல் அடிக்க, பொன ஓட்ட, நெல் தூற்ற, மூட்டை தூக்க, போர் போட, பிரி விட… என வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது கூலி வேலை இருக்கும். செவடனும் அவன் மனைவியும் பிள்ளையை பேராமுட்டா கிழவியிடம் விட்டுவிட்டு போய் சம்பாதித்து வந்து வாயையும் வயிற்றையும் கழுவி காலம் தள்ளி வந்தார்கள்.
வெள்ளத்தில் வீட்டை பறிகொடுத்துவிட்டு ஊரைவிட்டு வெகுதூரம் தள்ளி முரம்பு மேட்டுக்கு குடுத்தனம் வந்தபிறகு அதுவும் இல்லை. வாரத்தில் ஓரிரு நாள் கூலி வேலை கிடைத்தாலே ஆச்சரியம்தான்.
கவுண்டர் தந்த அரை மூட்டை அரிசியையும், நடுநடுவில் இரண்டு மூன்று தடவை தந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் காசையும், அவ்வப்போது தந்தனுப்பிய சோற்றையும் கூழையும் வைத்துதான் தன்னோடு சேர்த்து தன் பெண்டாட்டி பிள்ளையும் உயிர் வாழ்வதாகவும், இல்லையென்றால் என்றோ சிக்கி சின்னாபின்னமாகி பசிக்கு இரையாகியிருப்பார்கள் என்றும் நினைத்துக்கொண்டான் செவடன்.
இங்கே வேதனை என்னவென்றால், அரசாங்கம் வீடு கட்டித்தரும் வரைக்கும் தினம் மூன்றுவேளை சோறு தான் போடுவதாக வாக்கு தந்துவிட்டுப் போன ஊர் தலைவன், ஒருவாரம் கூட போடவில்லை. அதிகாரிகள், தாங்கள் சொல்லிவிட்டுப் போனதை அதோடு மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டதை வந்து வருத்தத்தோடு ஊராரிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு பெரிபடியால் ஐந்துபடி அரிசி மட்டும்தான் இப்போதைக்கு தன்னால் தரமுடியும் என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டுப் போனதுதான்.
‘செரி, வந்த வரைக்கும் லாபம்’ என நினைத்த பலரும் போய் வரிசையில் நின்று ஊர் தலைவன் தந்த அரிசியை வாங்கிக்கொண்டார்கள். செவடன் மட்டும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன்மேல் கொண்ட கோபத்தில் கைநீட்டி வாங்க மறுத்துவிட்டான். அவனோடு சேர்ந்து பேராமுட்டா கிழவி உட்பட இன்னும் நான்கைந்து பேர்களும் வாங்க மறுத்துவிட்டார்கள்.
கவுண்டர் அடிக்கடி செவடனிடம் சொல்வார், ‘எப்பயும் இருக்கறத வச்சினு சந்தோசமா வாழக் கத்துக்கணும் செவடா… அப்பதான் நாம நிம்மதியா இருப்பம். அத வுட்டுட்டு இல்லாத்துக்கு ஆசப்படறதும்… அடுத்தவன நம்பினு ஒக்காந்துனு கீறதும்… தன்னவுட எவனோ அதிகமா வச்சினு கீறான்னு அவனப் பாத்து பொறாம படறதும் பொச்சரிப்பு படறதும் என்னிக்கும் நம்மள ஆபத்துலதான் கொண்டுனு போயி வுடும். இருக்றத வச்சினு வாழாத மனுசு… ஒரு நாள்ல ஒருநாளு நம்மள இல்லாமப் பண்ணிடும், பாத்துக்க’.
அதேபோல், ‘படுத்ததும் வர்ற தூக்கமும்… ஏன்ச்சதும் ஓடற சோம்பலும்தான் நம்மள என்னிக்கும் நல்ல வாழ்க்க வாழ வச்சிக்கினு கீது செவடா’ என்றும் சொல்வார்.
அதிலும் சில தினங்களுக்கு முன் கிரீன் குட்டைக்கு விறகு வெட்டப் போயிருந்தபோது, விறகுவெட்டி சுமை கட்டி தூக்கிப் போக தயாராக வைத்துவிட்டு பக்கத்திலிருந்த கல்லாக்குட்டையில் போய் ஆதண்டங்காய் பறிக்கும்போது எதையோ கேட்ட செவடனிடம் கவுண்டர் சொன்னார், ”நீ வேணா நல்லா பாரு செவடா… ஆடுமாடு எதனாலும் எடுத்துக்கோ… அது முன்னால என்ன வச்சாலும் செரி… வவுறு ரொம்பற வரிக்கும்தான் அது தின்னும். அதுக்குமேல ஒரு வாயி வக்காது… அதுக்கப்றம் அத ஒரு வேண்டாப் பொருளாதான் பாக்கும். ஆனா, நாம என்ன பண்றம்… எதப் பத்தியும் ஓசன பண்ணாம, இன்னிக்கி நாளிக்கி நாளான்னிக்கினு மூட்டமூட்டயா சேத்துவக்க ஆசப்படறம்…”
”ஊரப்பாக்கத்துல நடுத்தெருல கீறானே கருக்காப் பல்லு ராமசாமி… அவன் அம்மாம் சொத்துபத்த யாருயாரு வாயில வவுத்துலலாம் அடிச்சிப் புடுங்கி சேத்தான்… கடசில பாத்தியா அவன் கெதிய… லக்குவான் அடிச்சி கை கால் வெளங்காமப் போயி அவன் பீ, மூத்தரத்து மேல அவனே படுத்துனு கீறான்… இன்னிக்கி அவன் புள்ளிங்களே அவனப் பாத்து சீன்னு காறி துப்புதுங்க… ஏன்டா பொறந்தம், எப்படா சாவு வருன்னு தெனக்கியும் பொலம்பினு கீறான்… அவன் அம்மாம் அய்யோக்கியதனம் பண்ணி சேத்துவச்ச சொத்துபத்துங்க ஒண்ணும் வந்து இன்னிக்கி அவன காபுந்து பண்ல பாத்தியா… இதான் செவடா நமுக்குலாம் பாடம்…’’
”இம்மாம் நெலத்த எவனோ வந்து கேட்டான்னு தூக்கி ஊராருக்கு தந்துட்டு வந்துட்டனேன்னு எல்லாரும் என்ன திட்டறாங்கதான்… நாளிக்கி என் பொண்டாட்டி புள்ளிங்களும் திட்டுவாங்கதான்… திட்டட்டும். ஆனா, அவுங்கள நல்ல புள்ளிங்களா வளத்து ஆளாக்கிடுவன் செவடா… பெரிவன் நாராயணகுப்பத்துல ஒம்பதாவது படிக்கறான்… நள்ளுவன் எடத்தனூருல ஏழாது படிக்கறான். மேலக்கி சின்னவனயும் ஊரப்பாக்கத்து பள்ளிக்கோடத்துல சேத்துடுவன். பொண்ணுக்குதான் படிப்பு வரல போமாட்டன்னு சொல்லிடிச்சி. என்னிக்கில்ல என்னிக்காது நானு பண்ணது சரிதான்னு நெனச்சிப் பாத்து சந்தோசப்படுவாங்க எம்புள்ளிங்க… அதுபோதும் செவடா, எனுக்கு…’’
விடிகாலை அஜ்ஜான் கூவும்வரை குழந்தையைப் புதைத்த இடத்திலேயே உட்கார்ந்திருந்த கவுண்டர், சட்டென எழுந்து பனியில் வேகமாக நடந்து வீட்டு வாசலுக்கு வந்து கட்டிலில் துண்டை விரித்துப்போட்டு படுத்துக்கொண்டார்.
”ஏந்தே, வவுறுகிவுறு எதனா சரில்லயா…?’’
பூரணியம்மாவின் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்த கவுண்டர், கட்டுத்தெருவுக்குப் போய் சாணியள்ள கையில் தோண்டி வைத்துக்கொண்டு கோழிக்கூண்டருகில் அவர் நின்றிருப்பதைப் பார்த்து, ‘ஆமாம்’ என தலையாட்டினார்.
எங்கே தான் தூக்கத்தில் மகனின் குரல் கேட்டு எழுந்து கொல்லிக்குப் போய் அவனைப் புதைத்த இடத்தில் இவ்வளவு நேரம் தூங்காமல் உட்கார்ந்துகொண்டு இருந்துவிட்டு வருவது தெரிந்தால் தன் மனைவி துடிதுடித்துவிடுவாரோ என நினைத்த கவுண்டர், தான் வயிறு சரியில்லாமல்தான் எழுந்து தோட்டக்காட்டுக்குப் போய் வருவதாக நினைத்து பூரணியம்மா கேட்டதற்கு, ‘ஆமாம்’ என தலையாட்டினார்.
”செரி, படுத்துக்க தே…’’ என்று சொல்லிவிட்டு போய் கட்டுத்தெருவில் சாணி அள்ளி வந்த பூரணியம்மா, கவுண்டரின் தூக்கம் கெடக்கூடாதென்று நினைத்து சத்தமின்றி மெதுவாக கரைத்து வாசல் தெளித்துவிட்டு கை கால் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போனார்.
கண்மூடி வெறுமே கட்டிலில் படுத்திருந்த கவுண்டர், வீட்டின் பின்னாலிருந்த பூவரச மரத்தின் மேல்கிளையில் கூடுகட்டியிருந்த காக்கையின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தார். வானம் ஓரளவுக்கு வெளுத்திருந்தது. இன்னும் சற்று நேரத்தில் செவடன் வந்துவிடுவான் என நினைத்து எழுந்தவர், தன் சோமத்தை அவிழ்த்து உதறி சரிசெய்து இறுகக் கட்டிக்கொண்டு, துண்டை எடுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு, படுத்திருந்த கட்டிலை தூக்கிப் போய் சுவர் ஓரமாக சாய்த்து வைத்துவிட்டு, வீட்டுக்குள்ளிருந்து அழுக்கு ஏனங்களை அன்னக்கூடையில் போட்டு எடுத்துக்கொண்டு சாக்கடைக்கு கழுவப் போன பூரணியம்மாவிடம், ”ஏன் பூர்ணி… நானு கொல்லிக்கா காவா நோண்ட போறன்… செவடன் இந்நேரம் வந்துருப்பான். புள்ளிங்க ஏன்ச்சதும் ரவ நீசத்தண்ணி தந்தனுப்பு’’ என்று சொல்லிவிட்டு மெல்ல கட்டுத்தெரு தாண்டி நடந்து துரிஞ்ச மர வழியாக மேட்டுத் துண்டு மரிசிமேல் குழந்தையைப் புதைத்த இடத்தருகில் வந்து நின்றார்.
சரியாக அதேநேரம், பனிக்குத் தோதாக தான் கட்டியிருந்த நீல கட்டம் போட்ட லுங்கியைத் தலைவரை தூக்கிப் போர்த்திக்கொண்டு வெப்பால மர வழியாக இறங்கி நடந்து வந்தான் செவடன்.
தன் உலர்ந்து வெடித்துப்போன உதட்டை நாவால் தடவி ஈரப்படுத்திய கவுண்டர், செவடன் பக்கத்தில் வந்ததும் அவனிரு கண்களின் கீழிமைகளும் இரவு முழுக்க தூங்காமல் வீங்கியிருப்பதையும் கண்கள் லேசாகச் சிவந்திருப்பதையும் பார்த்தார்.
தலை வரை போர்த்தியிருந்த லுங்கியை இறக்கி இடுப்பில் கட்டிக்கொண்டு பக்கத்தில் வந்த செவடன், கவுண்டர் உற்சாகமின்றி காலையிலேயே சோர்வாக இருப்பதையும் அவரது இரு விழிகளும் லேசாகக் கலங்கியிருப்பதையும் பார்த்தான்.
உயரவானில் நாரைக் கூட்டமொன்று தன் வெண் சிறகை அகலவிரித்து அசையும் வான்ஓவியம் போல் கிழக்கு நோக்கி பறந்துபோக, சற்று தள்ளி பின்னாலேயே நான்கு தண்ணிக்கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக இரைதேடி போய்க்கொண்டிருந்தன.
ஒருவரை ஒருவர் பார்த்து பொய் புன்னகை காட்டிக்கொண்டு, வேப்ப மரத்தடியில் முன்தினம் மாலை வைத்துவிட்டுப் போன கடப்பாரை மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கால்வாய் தோண்டப் போனார்கள் இருவரும்.
[இன்னும்]
*