ஐபக்கம் – 057 : கனவு அரும்பிய இடம்

#மே24,2024
என் வாழ்வில் சந்தித்த மிக முக்கியமான நபர்களில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களிடம் ஐ’யை காண்பித்து ஆசி பெறுவதற்காக, இன்று பல்லாவரத்தில் இருந்து நுங்கம்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் போயிருந்தோம்.
இதுதான் ஐ தனது வாழ்வில் மேற்கொள்ளும் முதல் ரயில் பயணம். அதனிலும் முக்கியமானது, இன்று அவன் முதன் முதலாக நான் படித்த [; எனது கனவுகள் அரும்பிய] லயோலா கல்லூரிக்கு வந்தது. அதுவும் 149 நாள் குழந்தையாக. ஆம்!
அவ்வகையில் பெரிதாய் மகிழ்ந்திட்ட நான், அவனிடம் கூறினேன். ”ஐ, பாப்பா… இப்ப நீ, எங்க இருக்க தெரியுமா…? அப்பா ரொம்ப ரொம்ப ஆசப்பட்டு படிச்ச… லயோலா கல்லூரியில. ஆமா, மகனே.
இது வெறும் கல்லூரி இல்ல… உன் அப்பாவோட கனவுகள் அரும்பின இடம். லட்சக்கணக்கான ஏழை மாணவர்களோட வாழ்க்கையில கல்வி ஒளி ஏத்தின இடம். அதுமட்டுமில்லாம… எத்தனையோ சாதனையாளர்கள உருவாக்கின இடம். இது அத்தனைக்கும் மேல… ஆயிரக்கணக்கான மரம் செடி கொடிகள் இருக்கிற இடம்; உன் தாத்தா பாக்கணும்னு ஆசப்பட்டு வந்து, பாத்து வியந்த இடம். ஆமா, மகனே.
நான் படிச்ச, கனவு கண்ட இடத்துக்கு… இன்னிக்கு நீ, கைகுழந்தையா வந்ததுல… இந்த அப்பாவுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா…?’’
சொல்லிவிட்டு அவன் நெற்றியிலும், உச்சந்தலையிலும் ஆனந்த முத்தமிட்டேன். ஆம்!
அதுவரை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் கட்டடங்களையும், நெடிதுயர்ந்த மரங்களையும் பார்த்திட்டவன், உடனே தன் வட்ட முகம் மலர பொக்கை வாய் காட்டிச் சிரித்து, ‘அ’ என்றிட்டான்.
மனத்துக்குள் நான் பயின்ற இடத்தில், ஐ ‘அ’கரம் எழுதி கல்வி பயிலத் தொடங்கிவிட்டதாய் உணர்ந்தேன். ஆம், ஆம்!
*