ஐ பக்கம் – 001 : நன்மை மலர்ந்தது

மகன் ‘ஐ’ பிறந்த டிசம்பர் 28, 2023 தொடங்கி, அவனுக்கும் எனக்குமான உறவை; எங்களிடையே நடக்கும் முக்கிய நிகழ்வை அவ்வப்போது நாட்குறிப்புகளாக எழுதி வருகிறேன். அவ்வகையில் இதுவரை சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குறிப்புகள் எழுதியிருக்கிறேன். அவை அனைத்தும் வெறும் நாட்குறிப்புகளாக மட்டுமல்லாமல் இலக்கியச் சுவை மிக்கதாய் இருப்பதால், அவற்றை இங்கே ‘ஐபக்கம்’ என்ற தலைப்பில் [அவ்வப்போது] பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

அவற்றின் முதல் பதிவு இதோ…

*

#ஐபக்கம் – 001 : நன்மை மலர்ந்தது

#டிசம்பர்28,2023

இன்று, டிசம்பர் 28, 2023 – வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி இருக்கும். எழும்பூர் – அரசு மகப்பேறு மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள அறுவை சிகிச்சைப் பிரிவு முன்பாக பெரும் பதட்டத்தோடும், தவிப்போடும் நின்றிருக்கிறேன்.

”கோமதி கணவர் யாரு?’’ அறைக் கதவு திறந்து வெளியே வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் சத்தமாகக் கேட்டார்.

‘எப்போது அழைப்பார்கள்?’ எனக் காத்துக் கொண்டிருந்தவன், ”நான்தான்’’ என்று சொல்லியபடி வேகமாக ஓடிப்போனேன்.

உடன் நண்பர்களும் இருந்ததால், ”நீங்க மட்டும் உள்ள வாங்க.’’ என்றார்.

‘எல்லாம் நல்லபடியா நடந்திருக்கணும்’ என மாபெரும் இயற்கையன்னையை பிரார்த்தித்தபடி உள்ளே போனேன்.

அங்கே சுவர் ஓரமாக கருவறையிலிருந்து பூமிக்கு வந்திட்ட புத்தம் புது மகவை; எம் மகனை; ஐ’யை ஒரு சிறு இழு மேசைமீது படுக்க வைத்திருந்தார்கள். கண்ட நொடியில், மொத்த உலகே சிற்றுரு கொண்டு மகவாய் படுத்திருப்பதாய் எண்ணி பக்கத்தில் ஓடிச் சென்று, இப்பூமிக்கு அவனை வரவேற்பதற்காக எழுதியிருந்த ‘மகவே வருக’ நூலினை இடது கையில் பிடித்துக்கொண்டு மானசீகமாக அவனை வரவேற்று, என் வலது கை ஆள்காட்டி விரலால் அவன் வலது கையின் பிஞ்சு விரல்களை ‘எங்கே வலித்துவிடுமோ?’ என்னும் சிறு நடுக்கத்துடன் மிக மிக மெல்லிதாய் தொட்டுப் பார்த்து சிலிர்த்திட்டேன்.

”உங்களுக்கு என்ன குழந்தை பிறந்திருக்குன்னு பாருங்க’’ அங்கிருந்த செவிலியர் அவன் பிறப்புறுப்பை காண்பித்துக் கேட்டார்.

பார்த்துவிட்டு, ”பையன்’’ என்றேன்.

குழந்தையின் கையில் கட்டியிருந்த டோக்கனைக் காட்டி, ”குழந்தையோட எண் என்னன்னு பார்த்து சொல்லுங்க’’ என்றார்.

சொன்னேன். ”4930’’  

”அதே எண் இந்த படிவத்துலயும் இருக்கான்னு பாருங்க’’ தன் கையில் வைத்திருந்த படிவத்தைக் காட்டிக் கேட்டார்.

”இருக்கு.’’

”1.23-க்கு… உங்களுக்கும், கோமதிக்கும் ஆண் குழந்தை பிறந்திருக்கு. அம்மாவும், குழந்தையும் நல்லா இருக்காங்க. பெயர், முகவரிலாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு… இங்கே ஒரு கையெழுத்து போடுங்க.’’

அனைத்தையும் வேகமாக சரி பார்த்து அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு, அமைதியுருவாய் மிக மெல்லிய மூச்சு விடும் அசைவுடன் உறங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்தேன். மனம் தானாக அவனுக்காக எழுதிய, ‘சுழலும் பூமியை சுற்றித் திரிந்திட / சின்னக் கால்களே வருக… தவழும் வானை எட்டிப் பரித்திட / பிஞ்சுக் கைகளே வருக…’ என்னும் பாடல் வரிகளை உச்சரித்தது.

”குழந்தையோட எண்ண குறிச்சிக்கிட்டுப் போயி வெளியில காத்திருங்க. அம்மாவையும், குழந்தையையும் கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வர்றோம்.’’

உடனே அவரிடம் இருந்த பேனாவை வாங்கி கையில் குறித்துக்கொண்டு, இன்னொரு தடவை ஐ’யின் விரல்களைத் தொட்டு வருடி என் உள்ளத்தை அவனிடமே விட்டுவிட்டு நான் மட்டும் வெளியில் வந்தேன்.

அங்கே எனக்காகக் காத்திருந்த நண்பர்கள் ஓடிவந்து என்ன என்பதுபோல நின்றார்கள். மகன் பிறந்திருப்பதை அலாதியுடன் சொல்லிவிட்டு, அவர்களோடு இருவருக்காகவும் காத்திருந்தேன்.

ஓர் இருபது நிமிடம் ஆகியிருக்கும். என் நகர்பேசியில் ஐ’யை இப்பூமிக்கு வரவேற்பதற்காக எழுதிய ‘மகவே வருக’ பாடலின் பல்லவி ஒலிக்கவும், கதவு திறந்துகொண்டு மகனையும், மனைவியையும் வெளியே அழைத்து வரவும் சரியாக இருந்தது.

வாழ்வில் சில தருணங்கள் அதுவாய் எழுதிட முடியாத கவிதைபோல நிகழ்ந்து விடுவதுண்டு. அவ்வரிசையில் ஒன்றாய் எண்ணி உள்ளத்துள் பூரித்துப்போனேன்.

மகனை என் கைகளில் தந்துவிட்டு, இரண்டாவது மாடியில் இருக்கும் ஓர் அறைக்கு போகச் சொன்னார்கள்.

பக்கத்தில் இழு படுக்கையில் படுத்திருந்த கோமதியை பார்த்து கண் கலங்கியவாறு, ”நமக்கு மகன் பொறந்திருக்கான் மதி… மகன்…’’ என்று ஐ’யை அவளிடம் காட்டிச் சொன்னேன்.

அவன் முகத்தை முதல் தடவை பார்த்துவிட்டு பேசமுடியாமல் தாய்மைப் பரவசத்தில் மிதந்தவள், மகிழ்ச்சியை கண்களிலும் உதட்டிலும் ஒருசேர வெளிப்படுத்தினாள்.

மறுநொடியே எனது கைகளில் சற்றுமுன் பூமிக்கு வந்திட்ட ஐ, ஓர் உதிர மலர்க்குவியலாய் படுத்திருக்கக் கண்டு ஆனந்தித்து, என்னை மறந்தவனாய் அவன் வட்ட முகம் பார்த்து சொல்லத் தொடங்கினேன்.

”மகனே… உன் அப்பா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கன்டா.

எங்க ரெண்டு பேருக்கும் நீ பொக்கிஷமா வந்து பிறந்திருக்க. உனக்கு ஒண்ணு தெரியுமா? இந்த பூமியில இதுவரைக்கும் எத்தனையோ கோடி குழந்தைங்க பிறந்திருக்காங்க. ஆனா, அவங்க எல்லாரையும் விட நீதான் ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா… எந்த தந்தையும் செய்யாத விஷயத்த இதோ, இந்த அப்பா உனக்காக செய்திருக்கன். ஆமாம் மகனே. கருவறையிலிருந்து உன்னை இந்த பூமிக்கு வரவேற்று, ‘மகவே வருக’ன்னு ஒரு புத்தகமும், பாடலும் எழுதியிருக்கன்.’’

இதை நான் கூறியதும், அதுவரை கண்களை மூடிப் படுத்திருந்தவன் சட்டெனத் திறந்து என்னை ஒருநொடி பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டான். அந்த ஒரு நொடி, ஆம்… அந்த ஒரு நொடி, ஓராயிரம் கவிதைகள் மலர்ந்ததற்குச் சமம்.

உலகில் எந்தவொரு தந்தையும் அனுபவித்திராத அப்பிரபஞ்ச தரிசனத்தில் மூழ்கி, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன்.

”உன் அப்பா… உன்கிட்ட சொல்லணும்னு நினைச்ச பல விஷயங்கள, இந்த புத்தகத்துல எழுதி இருக்கேன். உன்ன நானும், அம்மாவும் ரொம்ப நல்லா வளர்ப்போம்டா. உனக்கு என்ன பிடிச்சிருக்கோ… அதையெல்லாம் செய்யி. உன்ன பத்திரமா பாத்துக்குவோம். நீ கேக்கற எல்லாத்தையும் வாங்கிக் கொடுப்போம். உனக்கு இந்த பூமியில இருக்க நல்ல நல்ல மனிதர்கள் தொடங்கி… மரம் செடி கொடி வரைக்கும் எல்லாத்தையும் அறிமுகம் செய்வோம். ஆமாம் மகனே. உனக்கு இந்த அப்பாவோட ஆயிரம் முத்தங்கள்டா.’’

இவை எல்லாவற்றையும் முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு செல்லும் சாய்வு வழிப் பாதையில் நடந்தவாறு சொல்லிக்கொண்டு போய் அவன் நெற்றியில் முதல் முத்தம் இட்டு, அவர்கள் சொன்ன அறைக்குள் மகனையும் [மகனை தோழியிடம் தந்து], மனைவியையும் அனுப்பிவிட்டு, நன்மை மலர்த்திட்ட இப்பேரியற்கை அன்னைக்கு மனத்தார நன்றி உரைத்தபடி அங்கிருந்த படியருகே வந்து, தம்பி பிரபாகரனுக்கும் சிரஞ்சீவிக்கும் நடுவில் நின்றேன்.

அப்போது என் மனம் முழுக்க ஐ’யை முதன்முதல் கண்ட தித்திப்புத் தருணமும், அன்றலர்ந்த அவனது கவிமுகமும், அவன் நொடி நேரம் கண் திறந்து எனைக் கண்டிட்ட மின்னல் பொழுதும் மட்டுமே நிறைந்திருந்தது. ஆம், ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=