தாவர சங்கமம் – 10 : அம்மாக்குளம்

முதலில் எங்களூரையும், சுற்றியிருக்கும் நிலங்களையும், மலைகளையும், ஏரி ஆறு கிணறு கால்வாய் குட்டைகளையும் சுற்றிப் பார்த்தவன், பள்ளி விடுமுறை தினங்களில் என் வயதுடைய சிறுவர்களுடன் கூடிக்கொண்டு, சிலநேரம் தனியாகவும், அருகில் இருக்கும் ஊர்களையும், மலைகளையும், அதையொட்டிய இடங்களையும் நடந்து அல்லது சைக்கிளில் போய் பார்க்கத் தொடங்கினேன்.

அப்படி நான் பார்த்த மலைகள் மட்டும் குறைந்து முப்பது இருக்கும். அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் என் மாமா எனக்காக வாங்கித் தந்த சைக்கிளில் நண்பன் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, எங்கள் கிராமத்திலிருந்து சரியாகப் பத்து கிலோமீட்டர் தாண்டியிருக்கும் தானிப்பாடி என்னும் பெரிய ஊருக்குப் போயிருந்தேன்.

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே சந்தை போட்டிருந்தார்கள். சற்றுநேரம் நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு, அருகில் இருந்த அடிபம்ப்பில் தண்ணீர் அடித்து வயிறு நிறைய குடித்துவிட்டு, ஊருக்குத் திரும்பலாம் எனப் புறப்பட்டு பேருந்து செல்லும் முக்கிய சாலைக்கு சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தோம். சரியாக அப்போது சேலம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று எங்களைக் கடந்துபோனது.

வழிவிட்டு ஒதுங்கி நின்றவன், அப்பேருந்து சென்று சாலை முனையில் மேற்காகத் திரும்பி மறையும் வரைக்கும் பார்த்திருந்துவிட்டு, அங்கே நின்றிருந்த பெரியவரிடம் கேட்டேன். ”இந்த ரோடு எங்கப் போவுது தாத்தா?’’. ”சின்னையன்பேட்டை’’ என்றார்.

எங்களூரின் ஒரு பகுதியாக சைதாப்பேட்டையும், சாரங்கிப்பேட்டையும் இருப்பதால், அவர் சொன்ன பெயர் சட்டென என்னை ஈர்த்துவிட்டது. உடனே, ”இங்கருந்து அந்த வூரு, எம்மாந் தூரம் தாத்தா?’’ என்றேன். ”கொஞ்ச தூரம்தான்’’ என்றார்.

நண்பனிடம் கேட்கவில்லை. நானாக சைக்கிளை திருப்பி, ”வாடா, அந்த சின்னையன்பேட்டைக்கு போயி வரலாம்’’ என்று ஏறிக்கொண்டு ஓட்ட, ஏதோ சொல்லி என்னைத் திட்டிக்கொண்டு பின்னாலேயே ஓடிவந்து வேறுவழியின்றி ஏறி உட்கார்ந்துகொண்டான்.

அடுத்தப் பதினைந்து நிமிடத்தில் அவர் சொன்ன சின்னையன்பேட்டையை அடைந்த எனக்கு, அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. எப்போதும் பெரிய திட்டமெல்லாம் இல்லாமல் மனம் போனப் போக்கில் செல்லும் எனக்கு, போகும் இடமெங்கும் பார்க்கவும்; கற்கவும் ஏதாவது இருக்கும். அவ்வகையில் அந்த ஊரில் இருந்தது ஒரு குளம்.

அதுவும் ஏதோ மற்ற ஊர்களில் இருப்பது போல சாதாரண குளம் கிடையாது. நூற்றுக்கணக்கான சிற்பங்களால் ஆன குளம். யாவும் எளிய சிற்பங்கள் இல்லை. பாலுணர்வை தூண்டக்கூடிய வகையில் இருக்கும் ஆண் – பெண் உடலுறவு தொடங்கி… மானுட – மிருகப் புணர்ச்சி வரைக்குமான சிற்பங்கள்.

குளத்தின் பக்கச் சுவர், படிக்கட்டுகள் என எங்கு பார்த்தாலும் சிற்பம்தான். அவற்றில் மிகுதியானவை கற்பனைக்கு அப்பாற்பட்ட காதல் களியாட்டச் சிற்பங்கள். படிகளின் பல இடங்களில் பல்லி, தேள், ஆமை, நண்டு, மான், பாம்பு, அன்னம், மீன், குரங்கு என ஊடலுக்கும் கூடலுக்கும் அடையாளச் சின்னமாய் விளங்கும் உயிரினங்கள். விதவிதமான இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கும் ஆண்களும், அதற்கேற்ப அழகுற ஆடிப்பாடி மகிழும் பெண்களும். தம் தும்பிக்கையால் பின்னிப் பிணைந்திருக்கும் ஆண் யானையும் பெண் யானையும். தவிப்போடும் தகிப்போடும் தம் இணைக்காக காத்திருக்கும் ஆணும் பெண்ணும் பிற உயிர்களும்… என இன்னும் எத்தனையோ பாலுணர்வு கிளர்த்தும் சிற்பங்கள்.

கூடவே, சிவன் விஷ்ணு முதலான தெய்வ உருவங்களும், நந்தி சந்திரன் வடிவங்களும், மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடும் காட்சிகளும், வாழ்வின் சில உன்னதத் தருணங்களை விவரிக்கும் சிற்பங்களும் என மொத்தக் குளமே சிற்பக்குளமாக, கற்களால் உருவாக்கப்பட்ட கலவிபுத்தகமாக; காமக்களஞ்சியமாக இருந்தது.

கண்டதும் முதலில் அதிர்ந்து போனவன், ஏதோ வரக்கூடாத இடத்திற்கு வந்து பார்க்கக் கூடாததை பார்த்துவிட்டதாக நினைத்தேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வெண்ணம் களைந்து சகஜமாகி, குளத்தையும் அதிலிருக்கும் சிற்பங்களையும் பார்த்தபடி ஒருசுற்று சுற்றி வந்து, அதன் முகப்பருகில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்து அவ்வழியாக வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரிடம் போய், ‘கேட்கலாமா, வேண்டாமா?’ எனும் தயக்கத்தோடவே கேட்டேன்.

”இது என்ன குளம் தாத்தா, ஏன் இந்தக் குளத்த சுத்தி ஒரே அசிங்க அசிங்கமா செல செஞ்சிருக்காங்க?’’

என் கேள்வியையும், நான் அதைக் கேட்ட விதத்தையும் பார்த்துவிட்டு அடக்கமுடியாமல் சிரித்தவர், எழுந்துபோய் தன் வாய்க்குள் வைத்திருந்த புகையிலையை ஓரமாகத் துப்பிவிட்டு வந்து மறுபடியும் உட்கார்ந்து சொன்னார். ”இந்தக் கொளத்தயா கேக்கற…? இது மன்மதங்கொளம். அதான், இதுல அப்டி செல செஞ்சிருக்காங்க.’’

‘ஏன்?’ என அடுத்து கேட்பதற்குள் அவராகவே தொடர்ந்தார். ”அந்த காலத்துல இந்த ஊர சின்னையன்ற மன்னன் ஆட்சி பண்ணினு இருந்தான். அவனமாரி வீரன், தெறமசாலி, மக்கமேல அக்கற கொண்ட ஒருத்தன் சுத்துப்பட்டுல யாருமே இல்லன்னு சொல்லுவாங்க. அப்பேர்ப்பட்டவனுக்கு ஒரு சோதனகாலம் வந்துச்சு.

அவன் பொண்டாட்டிக்காரி திடீர்னு ஒருநாள் வயசுக்கு வராதப் பொம்பளப் புள்ளய இவன்கிட்ட வுட்டுட்டு நோயில செத்துப்போயிட்டா. இன்னொரு பக்கம் நாட்டுக்கு எதிரிங்களால ஆபத்து மேல ஆபத்தா வந்துனு இருந்துருச்சு.

பொண்டாட்டி செத்த சோகத்துல ஒடஞ்சிப்போனவன், அதுக்கப்புறம் அந்தப் புள்ளதான் தனக்குனு கீற ஒரே சொந்தம்னு நெனச்சிக்கிட்டு… அதுக்கு தேவையானதலாம் ஒருபக்கம் செஞ்சினு, நாட்டக் காப்பாத்துறதுலயே குறியா இருந்துட்டான். அதால புள்ளய அவனால சரியா வளக்கமுடியாமப் போயிருச்சு.

அப்போ ஒருநாள் அந்தப் புள்ள பெரிய மனுசியா அவன் முன்னால வந்து நிக்கிறத பாத்தவன்… ‘நம்மப் புள்ளயா இது… இம்மாம் பெருசா வளந்துட்டாளேன்னு’ அதிர்ந்து போயி, ஒடனே அவளுக்கு பக்கத்து நாட்டு இளவரசன் கூட, சுத்துப்பட்டு சனங்கலாம் வாயிமேல வெறல வக்கறமாதிரி… தடபுடலா கல்லியாணம் பண்ணி வச்சான்.

எண்ணி நாலு நாள் கூட அவ அவன்கூட வாழல. புள்ளய அவ அப்பன் வூட்டுக்குக் கொண்டாந்து வுட்டுட்டு… ‘ஒங்கப் புள்ளக்கி வாழ்க்கன்னா என்ன, தாம்பத்தியம்னா என்னன்னே தெரில. சொல்லிக்கொடுத்து அனுப்புங்க. இல்லனா, இங்கயே இருக்கட்டும்’ன்ட்டு போயிட்டான் மருமவன்.

கேட்டு மனசு ஒடஞ்சிப்போன மன்னன்… என்ன பண்றது, ஏது பண்றதுன்னு தெரியாம, மந்திரிமாருங்ககிட்ட ஆலோசிச்சி… தான் பொண்ணு குளிக்கறதுக்காக இந்தக் கொளத்த வெட்டி, இத சுத்தி வாழ்க்கன்னா என்ன, கல்யாணம்னா என்ன, அதுல தாம்பத்திய ஒறவுன்னா என்ன, ஆணும் பொண்ணும் மத்த உயிருங்களும் எப்படிலாம் ஒறவு கொள்வாங்கன்னு… சிற்பிங்கள வரவச்சு சிற்பமா செஞ்சான்.

அதயெல்லாம் தெனம் குளிக்கப் போவும்போது பாத்த பொண்ணுக்கு, கொஞ்சங் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சிச்சு. அப்பறம் ஒருநாள் அவளா தன் அப்பன்கிட்ட வந்து சொல்லிட்டு… தான் புருசனோடப் போயி சந்தோசமா வாழ்ந்து புள்ளயப் பெத்துக்கிட்டா.’’

தனக்கேவுரிய மண்மொழியில் பனங்காட்டுக் காற்றைப்போல் பெரியவர் இதைச் சொல்லக் கேட்டதும் வியப்பாகவும், அதேநேரம் நெகிழ்வாகவும் இருந்தது.

பக்கத்தில் தனக்கும் அந்த இடத்திற்கும் சம்மந்தமே இல்லாததுபோல நின்றிருந்த நண்பனை அங்கேயே உட்கார்ந்திருக்கச் சொல்லிவிட்டு, இன்னொரு தடவை போய் குளத்தையும், அதைச் சுற்றியிருந்த சிற்பங்களையும் ஆர்வம் மேலோங்க முன்னைவிட நன்றாகப் பார்த்துவிட்டு வந்தேன்.

ஒரு தந்தை, தானே தாயாகவும் இருந்து தன் ஒற்றை மகளை வளர்த்திருக்கிறான். அவளது பருவ காலங்களில் சொல்லித் தரவேண்டியதை சொல்லாமல் விட்டதால் நிகழ்ந்ததை, ஒரு குளத்தின் மூலமாக சிற்பங்களாக வடித்துக் கூறியிருக்கிறான். அதை அவனது மகளும் அத்தனை சாமர்த்தியமாய் புரிந்திருக்கிறாள்.

அதோடு அக்குளம், தன் மகளுக்காக மட்டுமல்லாமல்… பின்னாளில் அங்கே வந்து குளிக்கப்போகும் தனது நாட்டின் தாயில்லா பெண் பிள்ளைகளுக்காகவும் என்றும் எண்ணி அவன் அமைத்திருக்கிறான்.

எத்தகைய தொலைநோக்குப் பார்வையும், முதிர்ச்சியும், தாய்மைகுணமும், கலை ஈடுபாடும் இருந்திருந்தால் இப்படியொரு குளத்தை ஒருவனால் இங்கே உருவாக்கியிருக்கமுடியும்? நினைத்து நினைத்து பார்த்துப் பார்த்து வியந்துபோனேன்.

முதலில் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் தெரிந்த கலவிச் சிற்பங்கள் யாவும் அதன்பிறகு ஒரு தந்தையின் உயரிய அன்பின் வெளிப்பாடாக, அவன் தனக்குள் பூண்டிருந்த தாய்மையின் கூற்றாகத் தெரியக் கண்டு மகிழ்ந்தேன். ஆம்!

இப்பிரபஞ்ச உயிர்களான தாவர சங்கமத்தின் ஆதி உயிர்ப்பெருக்க ரகசியத்தை இக்குளமெங்கும் செதுக்கி, தனது அன்பு மகளுக்குள் முளைவிடாமல் கிடந்த பால்விதையை துளிர்த்தெழச் செய்து, அவள் வாழ்வின் ஈடிணையற்ற தனிப்பெரும் இன்பத்தை தன் கணவனோடு கூடிப் பருகி, அதன் வழியாக தனது சந்ததியை பெருக்கக் கற்பித்திருக்கிறான், இச்சின்னையன் என்னும் தன்னிகரற்ற தந்தை.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவும் வீரமும் மிக்க இக்குறுநில மன்னன் உருவாக்கிய இந்தச் சிற்பக்குளம்… என்னதான் இப்போது மக்களால் ‘மன்மதக்குளம்’ என அழைக்கப்பட்டாலும், ஓர் அம்மா தன் பருவ வயது மகளுக்குச் சொல்லித்தர வேண்டியதை ஒரு தாயாக இருந்து சொல்வதால், ‘அம்மாக்குளம்’ என்றே இது முற்காலத்தே அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

மேலும் இம்மன்னன், தன் அன்பு மகளுக்குக் கட்டியது போல தனது நாட்டின் தாய் இல்லாப் பெண் பிள்ளைகளுக்காக (அவர்களையும் தன் பிள்ளைகளாய் நினைத்து) அருகில் உள்ள பகுதியில் இதே போன்றதொரு சிற்பக்குளம் அமைத்துள்ளதையும், இவ்விரு குளங்களும் இப்போதும் ஊர் மக்களாலும், தொல்லியல் துறையாலும் பாதுகாக்கப்பட்டு வருவதையும்; இவைச் சார்ந்து இன்னும் பல கதைகள் மக்கள் நாவில் ஒலிப்பதையும் பார்க்கலாம்; கேட்கலாம்.

அன்றைய தினம் அங்கிருந்து மிகத் தாமதமாகப் புறப்பட்டு, வீடு வரும் வரைக்கும் நினைத்ததுதான் இப்போதும் இக்குளத்தை எண்ணிப் பார்க்கையில் மனத்துள் தோன்றுகிறது.

ஒரு தந்தை எல்லாவற்றையும் தன் மகளிடம் வெளிப்படையாக சொல்லமுடியாது. அதேநேரம் சொல்லவேண்டியதை சொல்வதும் அவன் கடமையாகிறது. அதனால்தான் இம்மன்னன் தன் மகளுக்குச் சொல்லவேண்டியதை இங்கே ஒரு குளம் அமைத்து அதன் வழியாகச் சொல்லியிருக்கிறான். அதுவும் தாய்க்கூற்றாக. ஆகையால்தான் இங்கிருக்கும் எல்லாச் சிற்பங்களிலும் ஆபாசம் ஒடுங்கிப்போய் அன்பே மேலோங்கி மிளிர்கிறது. ஆம்!

பெண் பிள்ளைகள் வாழ்வில் தந்தையானவன் எத்தனை முக்கியமானவன் என்பதை எண்ணும்போதெல்லாம் சங்ககால பாரி மகளிரின்,

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின்

எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின்,

வென்று எறி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!’

என்ற வலிமிகு பாடல் வரிகள்தான் (புறநா. 112) நினைவுக்கு வரும்.

யாருக்குத் தெரியும். அன்றந்த குறுநில மன்னனான பாரியின் மகள்கள் அவனது தந்தை மறைவிற்குப் பிறகு பாடியதுபோல… இந்தக் குறுநில மன்னனின் மகளும் பாடியிருக்கக்கூடும். அல்லது இதேபோன்றதொரு சிற்பக்குளத்தை தன் தந்தைக்காக அமைத்திருக்கக்கூடும்! ஆம், ஆம், ஆம்!

*

(கொலுசு – செப்டம்பர் 2023 இதழில் வெளியானது.)

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=