சொல்லின்றி எதுவுமற்றவன்! – 093
கேட்கவே சங்கடமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அல்லது இதிலிருந்து சற்று வேறுபட்ட கேள்வி. இந்த இருபது முகங்களில் எந்தெந்த முகத்தை எழுதிய பிறகு பார்த்தீர்கள்?
நூலகன், ஏகாந்தர், மோனன், மீயாய் போன்ற நான்கு முகங்களை பார்த்தேன். கொரோனா வீடடைவு காலத்தில் நூலகம் திறக்காததால் நூலகன், சென்னை தியாகராயா நகரில் உள்ள ஜீவா பூங்காவில் உட்கார்ந்து தனது நகர்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். ஏகாந்தர், ஒருநாள் என்னை வந்து பார்க்கும்படி அழைத்திருந்தார். சென்று அவரது வீட்டில் பார்த்துவிட்டு வந்தேன். எப்போதும் போல தான் இயக்கப்போகும் படத்தின் கதையை அடுத்த தடவை வந்து கேட்கச் சொன்னார். சரி, என்றுவிட்டு வந்தேன்.
மோனன், ஸ்பென்சர் பிளாசாவில் தற்செயலாய் எதிரில் வந்த என்னையும் மனைவியையும் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு போனார். மீயாய், எப்போதும் போல தன் பள்ளிப் பிள்ளைகளுக்கு கதை சொல்லி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
(சொல்ல வந்ததை முடிக்காதவர் போல சட்டென்று யோசனையில் ஆழ்ந்தவர், தனக்குள் எதையோ சொல்லி தலையாட்டிக்கொண்டு தொடர்ந்தார்.)
என் முகங்களில் ‘அன்னப்பாட்டி’ மறைந்துவிட்டதாக தேநீர்க் கடை அண்ணன் சொல்லி தெரிந்துகொண்டேன். வருத்தமாக இருந்தது. என்றாலும் அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அருஞ்செயலை எண்ணி, மனத்தார அவருக்கு நன்றி சொன்னேன்.
[இன்னும்]
*