சொல்லின்றி எதுவுமற்றவன்! – 040
பார்க்க படுசாதுவானவராக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பாடல் வரிகளில் அதிலும் குறிப்பாக, ‘சல்லிக்கட்டுடா‘ போன்ற பாடல்களில் கோபம் தீயாய் எரிவதை பார்க்கமுடிகிறது. இவை இரண்டில் எது நிஜம்?
(கண்களை மூடியபடி மெலிதாய் புன்னகைத்துவிட்டு) இரண்டுமே நிஜம்தான் (என்கிறார்).
(பின் சிலநொடி யோசனைக்குப் பிறகு) ஒருவன் எப்போதும் சாதுவாகவோ, கோபக்காரனாகவோ இருக்கவேண்டியதில்லை. அதிலும் ஒரு படைப்பாளி தன் படைப்பில் சமூக சீற்றத்தோடு இருப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இருப்பதுதான்.
பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான்.
இன்னும் முன்னால் போனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான நம் ஒளவை, அதியமான் நெடுமான் அஞ்சியின் வாயில் காவலனைப் பார்த்து, ‘வாயிலோயே! வாயிலோயே!’ என்று ஆரம்பிக்கும் புறநானூற்றுப் பாடலில், ‘எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே’ என்றும், வள்ளுவர், ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்றும் தம் படைப்புகளில் கோபத்தை வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்.
என்ன, எனது சமூகம் சார்ந்த பாடல்களில் இவை கொஞ்சம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றலாம். அவ்வளவுதான்.
[இன்னும்]
*