சொல்லின்றி எதுவுமற்றவன்! – 034
‘அகரத்தில் முதல் எழுத்து –
அது உயிர் எழுத்து;
அவள் நேர் அதற்கு!
அகிலத்தில் பல தெய்வமுண்டு –
அதில் உண்மையுண்டு;
அவள் மேல் அதற்கு!’
என்ற ‘தொப்புள்கொடி‘ பாடல் வரிகளை பெண்கள் பலரும் சிலாகிக்கக் கேட்டிருக்கிறேன். அதேநேரம்,
‘இந்த வையம் சுழல பல காரணம் என்றால்…
[அதில்] முதலும் முடிவும் அவள்தானே;
அது புகழ்தானே!
அந்த வானம் சிரித்து மழை பொழியும் என்றால்…
[அதன்] ஆக்கமும் ஊக்கமும் அவள்தானே;
அது வரம்தானே!’
போன்ற வரிகளை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது?
அப்போதைய என் மனநிலைக்கும், புரிதலுக்கும் ஏற்பவே இந்த வரிகளை எழுதினேன் என்றாலும், இதைவிட இன்னும் உயர்வாகப் பெண்களைப் பற்றி சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.
இரண்டு உவமைகளில் அவர்களது ஒட்டுமொத்த வாழ்வை, பெருமையை சொல்லலாம் என்று எண்ணினேன். அதேநேரம், அவை மிக மிக எளிமையாக அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும் என்றும் முடிவுசெய்தேன். இந்த எனது முடிவின் வெளிப்பாடாக அமைந்ததுதான் இவ்வரிகள்.
ஒரு படைப்பு அதை உருவாக்கிய அனைவருக்கும் முழு திருப்தியை அளிக்கவேண்டும். அப்போதுதான் அது ஜீவனுடன் இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வகையில் இப்பாடல் மிக எளிமையாய் உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுதிய என் தொடங்கி… படத்தொகுப்பு செய்த சந்தோஷ் வரைக்கும், இதன் உருவாக்கத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் பெரும் திருப்தியை தந்தது. அதனால்தான் கேட்ட பெண்களில் மேலதிகமானோரை அது கண்ணீர்விட வைத்தது; அவர்களது உள்ளத்தில் நீங்காத இடத்தையும் பிடித்தது.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 033