சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022
சரிவர பேருந்து வசதி கூட இல்லாத குட்கிராமத்தில் பிறந்த நீங்கள், இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான லயோலாவில் முதுகலை படித்திருக்கிறீர்கள். இந்தப் பயணம் எவ்வாறு சாத்தியமானது?
ஐந்தாம் வகுப்பு வரை எங்களூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஆறாவது முதல் பத்தாவது வரைக்கும் பக்கத்து ஊரிலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பதினோராவது மற்றும் பன்னிரண்டாவதை 12 கிலோமீட்டர் தாண்டியிருக்கும் தண்டராம்பட்டு – அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.
தேர்வு முடிவு வந்து சில நாட்கள் இருக்கும். நண்பர்களோடு ஒருநாள் நண்பகல் நேரத்தில் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவ்வழியாக வந்த கணினி ஆசிரியர் திவாகர், என்னைப் பார்த்துவிட்டு அழைத்து, ”காலேஜ் எங்கப் படிக்கப் போற?’’ என்று கேட்டார். திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பெயரைச் சொன்னேன்.
”இதுக்கு நீ படிக்காமலயே இருக்கலாம்’’ என்றவர், என்னை தனியாகக் கூட்டிப் போய் உட்காரவைத்து, ”நீ நல்லா படிக்கிறப் பையன். வாழ்க்கையில உருப்படணும்னு எண்ணம் இருந்தா… மொதல்ல இந்த ஊர விட்டு தூரமாப் போய் ஹாஸ்டல்ல தங்கிப் படி. இல்லனா, இங்க இதேமாதிரிதான் பசங்கக் கூட கூடினு… கிரிக்கெட் ஆடினு சுத்தினு இருப்ப. எதயும் பெருசா பண்ணவே மாட்ட’’ என்றார்.
அவர் சொன்னது சரி எனப் பட்டது. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன், ”எங்க வீட்ல யாரும் பெருசா படிச்சவங்க இல்ல சார். மொதமொத காலேஜ் படிய மெதிக்கப்போறதே நான்தான். எனக்கு வெளியூர்ல போய் எங்கப் படிக்கிறதுன்னு எதுவும் தெரியாது சார்?’’ என்றேன்.
பின் அவர் வழிகாட்டலில் திருச்சியில் உள்ள சில கல்லூரிகளில் சேர முயற்சித்தேன். எல்லா இடங்களிலும் அட்மிஷன் முடிந்துவிட்டதாக சொன்னார்கள். பிறகு பெரம்பலூரில் இருக்கும் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறி அறிவியல் படிப்பில் சேர்ந்தேன்.
அதுவரை வீட்டைவிட்டும், ஊரை விட்டும் பிரிந்திராத எனக்கு, கல்லூரியின் தொடக்க நாட்கள் பெரும் வலியையும், கண்ணீரையும் மட்டுமே தந்தது. அதன்பின் ஒருவழியாக அங்கே இருக்கப் பழகிக்கொண்டு நன்றாகப் படித்து, வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்று இளங்கலை முடித்தேன்.
இனி முதுகலை படித்தால் இந்தியாவின் முதன்மைக் கல்லூரியான லயோலாவில்தான் படிக்கவேண்டும், இல்லையென்றால் வேலைக்குச் செல்லவேண்டும் என்னும் முடிவுக்கு வந்தபோது, வீட்டாரின் விருப்பத்திற்காக ஓராண்டு ஒதுக்கி பி.எட் படிப்பை சென்னை – சைதாப்பேட்டையில் உள்ள அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்துவிட்டு, என் கனவான லயோலாவில் முதுகலை படிக்க விண்ணப்பித்து தேர்வாகி சேர்ந்துவிட்டேன்.
இதெல்லாம் எவ்வாறு சாத்தியமானது என இப்போது யோசித்துப் பார்க்கையில், ஒவ்வொரு தருணத்திலும் யாரோ ஒருவரால் தெரிந்தோ தெரியாமலோ ஆற்றுப்படுத்தப்பட்டு, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து இத்தனை தூரம் பயணப்பட்டு வந்ததாகத் தோன்றுகிறது.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019