‘சொல்லன்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

                           **

சமகாலத் தமிழ் இலக்கிய இளம் படைப்பாளர்களுள் பெரும் வீச்சுடனும், தனித்துவத்துடனும் செயல்பட்டு வருபவர் வடிவரசு. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் நாவல், கட்டுரை, கவிதை, கடிதம், தனிப்பாடல், பயண நூல், சிறார் இலக்கியம் எனப் பன்னிரண்டுக்கும் அதிகமான நூல்களையும், நூற்றுக்கும் மேலான தனிப்பாடல்களையும்; திரைப்பாடல்களையும் எழுதியிருப்பவர். தவிர, தற்போது வெவ்வேறு களங்களில் மூன்று தனித்தனி நூல்களும், உலகின் முதல் கிராமியச் சொல்லகராதியும் உருவாக்கி வருபவர்.

எழுத்தாளர், பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், தொடர் பயணி, இயற்கை ஆர்வலர் எனப் பன்முகம் கொண்ட இவர், ஒரு படைப்பை எழுதிவிட்டு அதற்கான அங்கீகாரத்தைத் தேடியோ, இலக்கியக் குழு அரசியலில் ஈடுபட்டோ, விளம்பரத்தை நாடியோ, இங்கேதான் எழுதுவேன் என்று காத்திருந்தோ காலத்தை வீணே கழிக்காமல், அடுத்தடுத்தப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தனக்கானப் பாதையையும் வாய்ப்பையும் தானாகவே உருவாக்கி, அதில் தனித்த முத்திரையைத் தொடர்ந்து பதித்து வருபவர்.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் நான் அவரை நீண்ட நெடிய, இன்னும் சொல்லப்போனால், ‘இத்தகையதொரு சுயநேர்காணல் இதுவரை தமிழ் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்துள்ளதா?’ எனக் கேட்கும் படியாக மேற்கொள்ளவேண்டும் என்ற எனது புதிய எண்ணத்தை அவரிடம் ஆர்வத்தோடு பகிர்ந்தபோது, என்னைவிட மிகுதியாக அகமகிழ்ந்து ஒப்புக்கொண்டு, இதோ என்முன்னால் தன் மாறாப் புன்னகையுடன் உற்சாகமாகக் கேள்விகளை எதிர்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

இந்த 2023 ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருக் கேள்வி என மொத்தம் 365 நாட்களுக்கு – 365 கேள்வியாக இந்நேர்காணல் நிகழவிருக்கிறது. இதன் மூலமாக இவரது ஆளுமையை ஏற்கெனவே இவர் ஆக்கங்கள் வழியாக அறிந்தவர்கள் ஒருபடிக் கூடலாக அறியவும், புதிய வாசகர்கள் இவரது படைப்புகள் நோக்கிப் பயணப்படவும் இந்த நேர்காணல் பெரியதொரு திறவாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இதோ… இந்நெடிய நேர்காணல், இவரது முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யில் இடம்பெற்றுள்ள,

கோபுரத்து ஒசரமய்யா

ஒம்பாசம் ஒசத்தியய்யா

ஊரெல்லாம் கும்பிட

ராசாவா வாழுமய்யா…

இன்னும் பல ஆண்டு நீ

சொகமாக வாழவேணும்

இங்கிலீசு மருந்தெல்லாம்

ஒனக்கண்டு நோகவேணும்…’

என்னும் பாடல் வரிகளோடு இனிதே தொடங்குகிறது.

                        **

வணக்கம் வடிவரசு. முதலில் உங்களுக்கு ‘நிலைத்திணை’ நூலுக்காக ‘கோவை கொடீசியா – இளம் படைப்பாளர் விருது – 2022’ வழங்கப்பட்டமைக்காக என் வாழ்த்துகள்.

1. இந்த நீண்ட நெடிய நேர்காணலின் தொடக்கமாக ‘Warm Up’ போல ஒரு சம்பிரதாயக் கேள்வி. உங்களைப் பற்றி சற்று விரிவாகச் சொல்லுங்கள்.

வணக்கம், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் தென் புறத்தில் உள்ள திருவடத்தனூர் என்னும் சிறு கிராமத்தில்தான். சரிவரப் பேருந்து வசதி இல்லாத, அடுத்தவேளை உணவுக்குக்கூட கஷ்டப்பட்ட கூலி விவசாயக் குடும்பத்தில் ஐந்தாவது மகனாகப் பிறந்தேன்.

வறுமை, குடும்பச்சூழல் காரணமாக வீட்டில் யாரும் பெரிதாகப் படிக்கவில்லை. அதனால் கடைசி மகனான என்னை எல்லோரும் சேர்ந்து மிகக் கடினப்பட்டு இளங்கலைப் பட்டம் வரைக்கும் படிக்க வைத்தார்கள். அவர்கள் பட்டக் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்ததால், இனியும் அவர்களை வருத்தக் கூடாதென முடிவெடுத்து கல்விக் கடன், பகுதிநேர வேலையென நானாகவே சென்னை – லயோலா கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் படித்து முடித்தேன். 

சிறுவயது முதல் தந்தையின் கைப்பிடித்து வளர்ந்ததால் அவரிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்தனையோவற்றை கற்கமுடிந்தது. அதில் முக்கியமானது… இருப்பதைக் கொண்டு இன்பமுடன் வாழ்வதும், மனத்துக்குப் பிடித்ததை எவ்விதக் கைமாறும் கருதாமல் அர்ப்பணிப்போடு செய்வதும். 

முதுகலை முடித்தவுடன் படித்தப் படிப்புக்கான ஐ.டி வேலை ஒருபக்கம். மனத்துக்குப் பிடித்த பத்திரிகை வேலை ஒருபக்கம். என் கனவெல்லாம் எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் ஆகவேண்டும், நல்ல நல்லப் படைப்பிலக்கியங்களையும், பாடல்களையும் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதால், எழுத்து சார்ந்த பத்திரிகை வேலையைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டில் என் ஐயா தவிர எல்லோரும் எதிர்த்தார்கள். மீறியும் சேர்ந்தேன். ஒருகட்டத்தில் கனவை நோக்கிப் பயணிக்க இதுதான் தக்க சமயம் என மனம் சொல்ல, அந்த வேலையை அப்போதே விட்டுவிட்டு முழுநேரமாக எழுத வந்துவிட்டேன். 

[இன்னும்]

*

ஐயா பாடல்
உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=