
வடிவரசு (ஜூன் 06, 1988) தமிழ் எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர். தமிழில் நாவல்கள், கட்டுரைகள், தனிப்பாடல்கள், திரைப்பாடல்கள், கவிதைகள், பயணக்கட்டுரைகள், அகராதி என பல தளங்களில் எழுதி வருகிறார். மரபிலக்கியம் சார்ந்தும், திருவண்ணாமலை வட்டார மண் சார்ந்த வாழ்வையும் எழுதுபவர்.
பிறப்பு, கல்வி
வடிவரசு 06.06.1988 அன்று தமிழ்நாட்டில் திருவடத்தனூர் கிராமத்தில் (திருவண்ணாமலை மாவட்டம்) சாமிக்கண்ணு – வெள்ளையம்மாள் இணையருக்கு இளைய மகனாகப் பிறந்தார். இவருக்கு ஆறுமுகம், சண்முகம், உத்திரம், பழனி என்று நான்கு அண்ணன்களும், சத்தி என்று ஓர் அக்காவும் உள்ளனர். வடிவரசுவின் தந்தை விவசாயியாகவும், ஊர் கோயிலில் பூசாரியாகவும், தெருக்கூத்துக் கலைஞராகவும், ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்ப்பவராகவும் இருந்தவர்; இருப்பவர். தனக்கு கலை இலக்கிய ஆர்வம் இவரிடமிருந்தே வந்தது என்கிறார் வடிவரசு.
வடிவரசு தனது கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பக்கத்து கிராமமான எடத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பின்னர் தண்டராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையிலும் தமிழை சிறப்புப்பாடமாகக் கொண்டு படித்தார். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரில் இளங்கலை கணிப்பொறி அறிவியல் பட்டமும் (2006 – 2009), சென்னை (சைதாப்பேட்டை) கல்வியல் மேம்பாட்டு நிறுவனத்தில் இளங்கலை கல்வியியல் பட்டமும் (2010), சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை கணிப்பொறி அறிவியல் பட்டமும் (2010 – 2012) பெற்றார்.
தனி வாழ்க்கை
வடிவரசு 15.03.2021 அன்று இயன்முறை மருத்துவர் சே.கோமதியை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரை சாட்சியாக வைத்து, பனை மாலை சூடி, அகரத் தாலி அணிவித்து மணந்தார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். பெயர் ஐ (தமிழில் முதல் ஓரெழுத்துப் பெயருடையவர்).
வடிவரசு முழுநேர எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் செயல்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கவிஞராக அறிமுகமான வடிவரசுவின் முதல் கவிதை 2018-ல் கல்கி இதழில் பிரசுரமானது. முதல் கட்டுரைத் தொகுப்பு ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’ 2019-ல் கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டது.
தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரையும், கவிஞர்களில் அபி, சுகுமாரன் போன்றோரையும், வரலாற்றாய்வாளர்களில் குடவாயில் பாலசுப்ரமணியனையும், பாடலாசிரியர்களில் வாலியையும் குறிப்பிடுகிறார்.
வடிவரசு முதுகலை படிக்க சென்னைக்கு வந்து, விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகி 150-க்கும் அதிகமான செய்திக்கட்டுரைகள் எழுதி, 2011 – 2012 ஆம் ஆண்டுக்கான ‘தலைசிறந்த மாணவ நிருபர் விருது‘ பெற்றார். தொடர்ந்து விகடன் நிறுவனத்தில் நிருபர் பணியில் சேர்ந்தவர், 2016 ஜனவரியில் தலைமை நிருபராக இருந்து வெளியில் வந்தார்.
ஏலேலோ பாட்டு
வடிவரசு தன் படைப்புகளில் பல்வேறு புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருபவர். அந்த வகையில் தனது நண்பர் இசையமைப்பாளர் ஷ்ரவன் கலையுடன் இணைந்து, 2021 ஆம் ஆண்டை நூறு பாடல்களோடு வரவேற்க எண்ணி, செப்டம்பர் 23, 2020 தொடங்கி, டிசம்பர் 31, 2020 வரை தொடர்ந்து ‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி’ என்று உருவாக்கி வெளியிட்டு, உலகில் அதுவரை யாரும் செய்யாத முயற்சியை செய்தார். பின்னர் அது ‘ஏலேலோ பாட்டு’ என்ற தலைப்பில் நூலாகவும் வெளியானது.
ஆடூஉ மகடூஉ
பெரும் சொல்வளம் மிக்க தமிழ் மொழியில் திரும்பத் திரும்ப வைத்த பெயர்களையே பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சூட்டி வருவதை மாற்ற நினைத்து ’ஆடூஉ மகடூஉ’ என்ற தலைப்பில் புதுப் பெயர்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அதற்குக் கிடைத்த பெருத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘ஆடூஉ மகடூஉ – குழந்தைகளுக்கான 8000+ புதுப் பெயர்களும்; சார்ந்த கட்டுரைகளும்’ என்ற தலைப்பில் நூல் ஒன்று உருவாக்கியிருக்கிறார். அது 2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது.
இலக்கிய இடம்
வடிவரசு பலவகையிலும் நாஞ்சில் நாடனுக்கு அணுக்கமான பார்வை கொண்டவர். தமிழ்த்தொல்மரபின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். தான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்பகுதி மக்களின் வாழ்வை மட்டுமல்லாமல், தான் பயணிக்கும் இடங்களில் காணும் மக்கள்தம் வாழ்வையும் பதிவு செய்பவர்.
இவரது முதல் நூலை வாசித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ‘சமகால இளைய இலக்கிய கர்த்தாக்கள் பலருக்கும் வாய்த்திராத செடி, கொடி, மரங்கள் பற்றிய அறிவு இவருக்கு வாய்த்திருக்கிறது’ என்கிறார். மேலும் அம்முன்னுரையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் தென்புறத்துக் கிராமமான திருவடத்தனூர், வடிவரசால் தமிழிலக்கிய வரைபடத்தில், இந்நூல் காரணமாகக் குறிக்கப் பெறுகிறது’ என்றும் எழுதியிருக்கிறார்.
பதிப்பகப் பணி
2021 ஆம் ஆண்டு தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ‘முரம்பு படைப்பகம்’ என்ற பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து, அதன் மூலமாக தனது அடுத்தடுத்த நூல்களை வெளியிட்டு வருகிறார்.
ஊடகப்பணிகள்
- விகடன் மாணவ நிருபராக ஓராண்டு.
- விகடன் நிருபராகவும், தலைமை நிருபராகவும் மூன்றரை ஆண்டுகள்.
- 120-க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களுக்கு பாடலாசிரியர்.
- பத்துக்கும் மேற்பட்ட நேரடி தமிழ்த்திரைப்படங்களுக்கும், மொழிமாற்று திரைப்படங்களுக்கும் பாடலாசிரியர்.
விருதுகள், பரிசுகள்
- 2012 – விகடன் தலைசிறந்த மாணவ நிருபர் விருது.
- 2016 – லயோலா கல்லூரி சிறந்த படைப்பாற்றல் மிக்க கலைஞர் விருது.
- 2021 – சிகரம் சிற்றிதழ் முதல் பரிசு.
- 2022 – கொடிசியா இளம் படைப்பாளர் விருது.
- 2023 – மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2021 – 22).
- 2023 – பாரதி இலக்கியச் சங்கம் லட்சுமி அம்மாள் இலக்கிய விருது.
- 2023 – தமிழ்த்தடம் அறக்கட்டளை சுயத்தைத் தேடி விருது.
நூல்கள்
கட்டுரைகள்
- ஐயா (எ) 95 வயது குழந்தை! – 2019 (விஜயா பதிப்பகம்)
- முகங்கள் – 2021 (விஜயா பதிப்பகம் & முரம்பு படைப்பகம் (2022))
- நிலைத்திணை [மரமும் மரம் சார்ந்த வாழ்வும்] – 2021 (முரம்பு படைப்பகம்)
- எங்க கல்யாணம் [The word album about a unique marriage] – 2022 (முரம்பு படைப்பகம்)
- தாவர சங்கமம் – 2024 (முரம்பு படைப்பகம்)
நாவல்கள்
- முரம்பு – 2022 (முரம்பு படைப்பகம்)
கவிதைகள்
- கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல் – 2020 (லயோலா கல்லூரி & மாற்று ஊடக மையம்)
கடிதங்கள்
- அகத்திரியில் ஏற்றிய நெருப்பு [மகன் தந்தைக்கு எழுதிய கடிதங்கள்] – 2021 (விஜயா பதிப்பகம் & முரம்பு படைப்பகம் (2024))
- நூற்றாண்டு மனிதர் [தந்தையின் நூறாவது பிறந்தநாளுக்கு மகன் எழுதிய கடிதம்] – 2025 (முரம்பு படைப்பகம்)
சிறுவர் இலக்கியம்
- அரசங்கல் (நாவல்) – 2022 (முரம்பு படைப்பகம்)
- மகவே வருக [கருவறையிலிருந்து பூமிக்கு வரும் மகவை வரவேற்று, ஒரு தந்தை தந்த முதல் பரிசு] – 2023 (முரம்பு படைப்பகம்)
- டர்புர் வண்டி (நாவல்) – 2024 (முரம்பு படைப்பகம்)
பயண நூல்கள்
- திருவாளர் ஊர்சுற்றி – 2022 (முரம்பு படைப்பகம்)
தனிப்பாடல்கள்
- ஏலேலோ பாட்டு [100 நாள் – 100 பாடல் – 100 நொடி] – 2021 (முரம்பு படைப்பகம்)
நேர்காணல்கள்
- சொல்லன்றி எதுவுமற்றவன் [சுயநேர்காணல்] – 2024 (முரம்பு படைப்பகம்)
நாட்குறிப்புகள்
- நன்மை மலர்ந்தது [ஐ பக்கம் – பாகம் ஒன்று] – 2025 (முரம்பு படைப்பகம்)
அடுத்து வரவிருக்கும் நூல்கள்
- ஐந்திணைப்பாட்டு – கட்டுரை (முரம்பு படைப்பகம்)
- ஐயன்_Sol தனயன்_Click – தொகுப்பு நூல் (முரம்பு படைப்பகம்)
- ஆடூஉ மகடூஉ [குழந்தைகளுக்கான புதுப் பெயர்களும்; சார்ந்த கட்டுரைகளும்] – தொகுப்பு நூல் (முரம்பு படைப்பகம்)
- திருவாதிரை – நாவல்(முரம்பு படைப்பகம்)
- ஈழம் அன்ன ஈழம் – பயணம் (முரம்பு படைப்பகம்)
- புத்தம் புதிய ஆத்திச்சூடி – பாடல் (முரம்பு படைப்பகம்)
எழுதிக்கொண்டிருக்கும் நூல்கள்
- முரம்பு கிராமியச் சொல்லகராதி (முரம்பு படைப்பகம்)
- பிள்ளைத்தமிழ்[இது பிள்ளைகளுக்கான தமிழல்ல; பெற்றோர்களுக்கான தமிழ்] (முரம்பு படைப்பகம்)
- மலையாற்றுப்படை [மாதம் ஒரு மலையென அறுபது மாதம் அறுபது மலை ஏறிய பயணக் கட்டுரைத் தொகுப்பு] (முரம்பு படைப்பகம்)
- தமிழணங்கே [தமிழ்; தமிழர்; தமிழ்நாடு பற்றிய கடலளவு சீர்மையின் சிறுதுளி] (முரம்பு படைப்பகம்)
[ தொடர்புக்கு : vadivarasu.s@gmail.com ; www.vadivarasu.in ]