அரம்பு போற்றுதும் – 002 : நாஞ்சில் தாத்தா தூங்கு

ஜனவரி 20, 2026
*
வீட்டு நூலகத்தில் இருக்கும் பனுவல்களில் ஓரிடத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் எனது நூல்களை முதலில் அடையாளம் கண்டுகொண்டு காட்டத் தொடங்கினான் ஐ. அதிலும் குறிப்பாக, ‘எங்க கல்யாணம்’ நூலின் முகப்பில் நானும் மதியும் இருக்கும் ஒளிப்படத்தைப் பார்த்துவிட்டு அதை ‘அம்மா புக்கு’ ஆக்கிவிட்டான். அதேபோல ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை ‘தாத்தா புக்’காகவும், ‘மகவே வருக’வை ‘ஐ பாப்பா புக்’காகவும் ஆக்கிக்கொண்டான்.
இதனைத் தொடர்ந்து சில புத்தகங்களின் முகப்பு மற்றும் முதுகுப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒளிப்படம்; குறியம் காட்டி அதற்கு ஒரு பெயரை அவனாகவும், சிலவற்றுக்கு நாங்கள் சொல்லியும் வைத்துக்கொண்டான். உதாரணமாக, நற்றிணை வெளியிட்ட நூல்களின் முதுகுப் பக்கத்தில் இருக்கும் புத்தர் உருவக் குறியம் பார்த்து, ‘புத்தா பாப்பா புக்கு’ என்று அவனாகவும், நாஞ்சில் நாடன் ஒளிப்படம் இடம்பெற்றிருக்கும் ‘சிற்றிலக்கியங்கள்’ பனுவலைக் காட்டி, ‘நாஞ்சில் தாத்தா புக்கு’ என்று நாங்களும் பெயரிட்டதைச் சொல்லலாம்.
இந்நிலையில் இன்று காலை ஞாயிறு உதயமாகி வெகுநேரமாக உறங்கிக்கொண்டிருந்த ஐயை, நாங்கள் ஒருசேர சென்று எழுப்பி, ”ஐ குட்டி… தூங்கினது போதும், எழுந்திரு. ஞாயிறு தாத்தா வந்து ரொம்ப நேரம் ஆகுது. ஞாயிறு தாத்தா வந்ததும் எழுந்துக்கணும். யாரும் தூங்கக்கூடாது, சரியா?’’ என்றோம்.
புன்னகைத்தபடி எழுந்தவன், ஒரு வார்த்தையும் எங்களிடம் பேசாமல் நேராகக் கூடாரத்தை விட்டு வெளியே சென்று, அறைக்குள் இருக்கும் நூலக அடுக்கருகே போய் நின்றுகொண்டு தலையை லேசாகச் சாய்த்துப் பார்த்து, படுத்த வாக்கில் அடுக்கி வைத்திருந்த நாஞ்சில் நாடன் புத்தகத்தைக் காட்டி, ”நாஞ்சில் தாத்தா இன்னும் தூங்கு…” என்றான்.
முதலில் அவன் சொன்னபோது புரியவில்லை. இரண்டாவது தடவையாக சொன்னதும்தான் புரிந்துகொண்டோம். உடனே சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கிக்கொண்டு, ஐயையும், படுத்த வாக்கில் நூலில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் நாடன் ஒளிப்படத்தையும் ஒருதடவை நோக்கிவிட்டு, ”ஆமா பப்பு… நாஞ்சில் தாத்தா இன்னும் தூங்குறாரு’’ என்றோம்.
சட்டென்று தான் பெரிதினும் பெரிதான ஒன்றைக் கண்டுபிடித்து இவ்வுலகுக்கு அறிவித்ததைப் போல பெருமை பொங்க சிரித்துவிட்டு, வேகமாக நடந்துபோய் சுவர் ஓரமாக இருந்த தனது பொம்மைகளுடன் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தான் ஐ.
புத்தக அடுக்கில் இருந்த நாஞ்சில் நாடன் ஐயா, எப்போதும் போல தூங்கிக்கொண்டிருந்தார்.
*