ஐபக்கம் – 079 : ஆழியன்னை

#ஜூன்28,2024

ஐ பிறந்து இன்றோடு சரியாக ஆறு மாதம் ஆகின்றது. நாட்களில் சொன்னால் 184 நாட்கள். ஆகையால் அவனுக்கு இந்த 28 ஆம் தேதியில் கடல் அறிமுகப்படுத்துவதற்காக ஆழி வண்ண ஆடை அணிவித்து, உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரினாவுக்கு கூட்டிப் போயிருந்தோம்.

அத்தனை விரிந்த மணல்வெளியை முதல் தடவை கண்டிட்ட ஐ, அதிசயத்துப் போய் கண்கள் விரிய பார்த்திட்டான்.

மணல் பரப்பில் நடந்தவாறு அவனிடம் சொன்னேன். ”ஐ, பாப்பா… இன்னிக்கோட நீ பொறந்து ஆறு மாசம் ஆகுது, சாமி. அதனால உனக்கு… இந்த இயற்கையோட அதி உன்னதங்கள்ல ஒண்ணான கடல அறிமுகப்படுத்தப்போறோம். ஆமா, மகனே.

இந்தக் கடல் இருக்கே… இதுதான் உலகத்துல மூன்று பங்கு. மத்த ஒரு பங்குதான் நாம இருக்க நிலம். அந்த வகையில பூமித்தாய விட பெரியவ. ஆமா, மகனே.

கடல் எத்தன பிரம்மாண்டமானது, தெரியுமா…? அதனாலதான் எல்லா ஆறுகளும் ஓடிவந்து இதுல கலக்குது. நெருப்பு எப்படி தன்கிட்ட தர்றதயெல்லாம் எடுத்துக்குதோ… அதுமாதிரி இந்தக் கடலும், எவ்வளவு தந்தாலும் வேணாம்னு சொல்லாம எடுத்துக்கும்.

அத்தன பெருமைக்கும், புகழுக்கும் சொந்தமானது கடல். அதனாலதான் இதுக்கு… அத்தி, அம்பரம், அம்புராசி, அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, இரத்தினாகரம், ஈண்டுநீர், உததி, உந்தி, உப்பு, உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சமுத்திரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சாகரம், சிந்து, சிந்துவாரம், சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோயம், நதிபதி, நரலை, நிரதி, நிலைநீர், நீத்தம், நீந்து, நீர், நீரகம், நீராழி, நெடுநீர், நெறிநீர், நேமி, பயோததி, பரப்பு, பரவை, பரு, பாராவாரம், பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோததி, மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெண்டிரை, வெள்ளம், வேலாவலயம், வேலை, வேழாழி’ன்னு எத்தன எத்தனயோ பெயர்கள வைத்து நம் முன்னோர்கள் அழகு பார்த்திருக்காங்க; போற்றியிருக்காங்க. ஆமா, மகனே.”

நீண்டிருந்த மணல் வெளியையும், அதில் ஆங்காங்கே நடந்தபடி இருந்த மனிதர்களையும், குதிரைகளையும், நாய்களையும் வேடிக்கை பார்த்தபடி, நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்த ஐ, சட்டென்று பரந்து விரிந்து அலைகள் ஆர்ப்பரித்து வரும் கடல் அருகில் வந்ததும், நீண்ட நாள் காணாது கண்ட உறவைப் போல வியந்து ஆனந்தித்திட்டான்.

ஐ’யிடம் சொன்னோம். ”ஐ குட்டி… இந்தக் கடல்தான் வங்காள விரிகுடா. நம்ம நாட்டோட ஒரு பக்க எல்லையா இருக்குற அன்னை. நீ  வளர்ந்து எத்தனப் பெரிய ஆளா ஆனாலும் சரி. அடிக்கடி வந்து இவள பாரு. மனசார அடி பணிந்து ஆசி வாங்கு. எப்பவும் உனக்கு துணையா இருப்பா. ஆமா, மகனே.’’

உடனே ஐ’யை தூக்கிப் போய் அலையில் கால் வைத்து நனைத்தோம். லேசாக பயப்படுவது போல சிலிர்த்து மகிழ்ந்திட்டான். அதனைக் கண்டு, அவனைவிட அதிகமாக (சொல்லப்போனால் கடலளவுக்கு) நாங்கள் மகிழ்ந்திட்டோம். ஆம், ஆம்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=