ஐபக்கம் – 065 : உலகம்

#ஜூன்06,2024

இன்று எனது 36 ஆவது பிறந்தநாள் என்பதால், அதிகாலை சீக்கிரமே எழுந்து குளித்துக் கிளம்பி திருப்பெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கும், வரும் வழியில் இருக்கும் பழமை வாய்ந்த மணிமங்கலம் – தர்மேசுவரர் கோயிலுக்கும் சென்றுவிட்டு, மதியம் இரண்டரை மணி வாக்கில் வீட்டுக்கு வந்தேன்.

ஐ பிறந்து வரும் முதல் பிறந்தநாள் என்பதால் முழுநாளும் வெளியில் செல்லாமல், அரை நாள் மட்டும் மனம் போன போக்கில் சுற்றித் திரிந்துவிட்டு, மீதி நாளை அவனோடும், மதியோடும் கழிக்க நினைத்தேன்.

அந்தவகையில் வீட்டுக்கு வந்து சிறிது நேரம் ஐ’யோடு விளையாடிவிட்டு, மதிய உணவு உண்டு சற்றுநேரம் உறங்கி எழுந்து, மாலை ஆனதும் அவனை வெளியில் அழைத்துப் போயிருந்தேன்.

இன்றைய தினம் மிக முக்கியமானது ஆதலால், ஏதாவது ஒரு சொல்லை ஐ’க்கு சொல்லித் தரலாம் என்று தோன்றியது. பெரிதாக யோசிக்கவெல்லாம் இல்லை. உடனே, உலகம் என்ற சொல் மனத்தில் எழ மகிழ்வோடு அவனிடம் சொன்னேன்.

”ஐ குட்டி, இன்னைக்கு அப்பாவோட 36 ஆவது பிறந்தநாள். அதனால, அப்பா உனக்கு… நம்ம தாய்மொழியில இருக்க ‘உலகம்’ன்ற சொல்லப் பத்தி சொல்லித் தரப் போறேன். ஆமா, மகனே.

இந்தச் சொல்ல மங்கல சொற்கள்ல ஒண்ணா நம்ம முன்னோர்கள் சொல்வாங்க. அதனாலதான் இதத் தொடக்கமா வச்சு, உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்’னு கம்பர் கம்பராமாயணத்தையும், உலகெலாமுணர்ந்து ஓதற் கரியவன்’ன்னு சேக்கிழார் பெரிய புராணத்தையும் (இதை சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததா சொல்வாங்க) தொடங்கி இருப்பாங்க.

அது மட்டுமில்ல… ‘உலகந் திரியா’ன்னு மணிமேகலையிலும், ‘உலக மூன்றும்’ன்னு வளையாபதியிலயும் உலகம்’ன்ற சொல்ல தனித்தும், ‘நனந்தலை யுலகம்’ன்னு முல்லைப்பாட்டுலயும், ‘மூவா முதலா வுலகம்’ன்னு சீவகசிந்தாமணியிலயும் அடைமொழியுடன் சேர்த்தும் பாடியிருப்பாங்க. ஆமா, மகனே.

இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்கள சொல்லிக்கிட்டே போகலாம்.

உலகம்’ன்ற சொல்லுக்கு பூமி, புவனப்பொது, நிலப்பகுதி, ஆகாயம், திக்கு, மக்கட்தொகுதி, நன்மக்கள், சீவராசிகள், உயர்குணம், வழக்கம்’னு பல பொருள்கள் இருக்கு.

அதேபோல… அண்டம், அம்பு, உகம், உலோகம், கடலெல்லை, சகத்து, சகம், சீவாதாரம், செகதலம், செகம், ஞாலம், தலம், தாலம், துனியா, நன்னிலை, நாடு, பரப்பு, பவம், பிரபஞ்சம், பிரமாண்டம், புடவி, புவனம், பூமி, பொழில், பெளதிகம், மார்க்கம், லோகம், வளாகம், வைப்பு, ஆலம், ஏடு’ன்னு எத்தனையோ நிகர்ச்சொற்களும் இருக்கு.  ஆமா, மகனே.

இந்தச் சொல் எத்தன சிறப்புடையது, பழமையானதுன்னு காட்ட… ஒரே ஓர் உதாரணமா… ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்க இலக்கியத்துல மட்டும் 146 இடங்கள்ல (உலகம் – 56; உலகு – 90) பாடியிருக்கறத சொல்லலாம். ஆமா, மகனே.

இந்த உலகத்தப் பத்தி நீ வளர்ந்து நிறைய படித்துத் தெரிஞ்சுக்கோ. கூடவே, உன்னால முடிஞ்ச அளவுக்கு உலகம் முழுக்க பயணம் செய். இத்தன பிரம்மாண்டமான உலகத்த, பலகோடி உயிர்கள் வாழற அதிசயத்த, இயற்கையின் அதிஉன்னதங்கள் நிறைந்த பொக்கிஷத்த, திறந்த மனத்தோட பாரு. ஆமா, மகனே.

அதனாலதான் என்னோட பிறந்தநாள்ல உனக்கு… உலகம்’ன்ற இந்த ஒற்றை; தன்னிகரற்ற சொல்லப் பத்தி சொல்லித் தந்திருக்கன்.’’

சொல்லி முடித்துவிட்டு ஐ’யின் பிஞ்சு விரல்களை மெல்லத் தொட்டு வருடிக்கொண்டிருந்தேன். கொடியில் காய்ந்த துணிகளையெல்லாம் எடுத்துப்போய் வீட்டுக்குள் வைத்துவிட்டு, சுடச்சுட தேநீர் போட்டு எடுத்துவந்த மதி கேட்டாள்.

”என்ன, ஒரு பெரிய இலக்கிய வகுப்பே நடந்து முடிந்திருக்கு போல?’’

ஒன்றும் சொல்லாமல் மென்மையாக இதழசைத்து புன்னகைத்துவிட்டு, தேநீரை வாங்கி முதல் மிடர் பருகினேன். அதில் இம்மாபெரும் உலகத்தின் துளிச்சுவை கலந்திருந்தது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=