ஐபக்கம் – 041 : பிரபஞ்சத் தாய்

#ஏப்ரல்20,2024
இன்று காலை சீக்கிரமே எழுந்து வேலையெல்லாம் முடித்துவிட்டு, வானம் மேகமூட்டமாக இருந்ததால் ‘ஐ உள்ளேயே தூங்கட்டும்’ என விட்டுவிட்டு, நானும் மதியும் நடுவீட்டுக்குள் படுத்து அவன் தூக்கம் தடைபடாதவாறு மென்குரலில் பேசிக் கொண்டிருந்தோம்.
ஓர் அரை மணிநேரம் இருக்கும். திடீரென்று ‘ஆ…. ஊ…’ என்று ஐ பேசும் சத்தம் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்தோம்.
தூங்கி எழுந்தவன், அவன் பாட்டுக்கு தன்னைச் சுற்றியுள்ள கொசுவலை, தலையணை, நூலகம், காற்றாடி, சாளரக் கம்பி, எழுத்து மேசை, மின்விளக்கு… எல்லாவற்றையும் பார்த்துப் பேசிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
புன்னகைத்தபடி மதி சொன்னாள். ”எல்லாக் குழந்தையும்… தூங்கி ஏன்ச்சதும் அம்மா எங்கன்னு தேடும். இவன் என்னடான்னா… அம்மான்னு ஒருத்தி இருக்குறதயே மறந்து விளையாடிட்ருக்கான்.’
பதிலுக்கு சிரித்துவிட்டு சொன்னேன். ”ஒருவேள அவன், இந்தப் பிரபஞ்சத்தையே தன் தாய் தந்தையா… சொந்த பந்தமா நினைக்கிறானோ, என்னவோ!’’
ஒன்றும் கூறாமல் முறைத்தவள், ”உன் புள்ளதான… உன்ன மாதிரிதான் இருப்பான்’’ என்றுவிட்டு வெளியில் போய்விட்டாள்.
இது எதுவும் தெரியாத ஐ, ‘ஆ… ஊ…’ என்று சொல்லி அவன் பாட்டுக்கு உள்ளே விளையாடிக் கொண்டிருந்தான்.
*