ஐபக்கம் – 033 : பெருஞ்சிரிப்பு

#மார்ச்27,2024
வழக்கம் போல உட்கார்ந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.
நடுவீட்டுக்குள் இருந்து வந்த மதி, ”தம்பிய கொஞ்சநேரம் மடியில வச்சிக்கிட்டு எழுதுங்க… நான் குளிச்சிட்டு வந்துடறன்’’ என்று சற்றுமுன் தூங்கி எழுந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐ’யை என்னிடம் தந்துவிட்டுப் போனாள்.
வாங்கி மடியில் தோதாக படுக்க வைத்துக்கொண்டு சொன்னேன். ”ஐ பாப்பா… அப்பா மடியில படுத்துக்கினு, சமத்தா வேடிக்க பாரு. அப்பா எழுதுறன், சரியா…?’’
உடனே ‘மாட்டேன்’ என்பது போல கை கால்களை வேகமாக அசைத்து சிரித்தான்.
‘சரி’ என்று எழுதுவதை நிறுத்திவிட்டு, அவனை சற்று தூக்கிப் பிடித்தவாறு எனது தலையை முன்னும் பின்னும் அசைத்து, ”அப்பு பாப்பா… பப்பு பாப்பா… செல்ல பாப்பா… தங்க பாப்பா… வைர பாப்பா…’’ என சற்று சத்தமாகவே கொஞ்சினேன்.
திடீரென்று என்றும் இல்லாதது போல் பெரும் சத்தத்துடன் சிரித்திட்டான்.
”பவுனு குட்டி… பட்டு குட்டி… சமத்து குட்டி… சக்கர கட்டி… தேனு முட்டாய்… என் காரப் பழம்… சூரப் பழம்…’’ மறுபடியும் கொஞ்சினேன். அதேபோல சிரித்திட்டான்.
இப்படி ஓர் ஐந்து நிமிடம் கொஞ்சி இருப்பேன். அவனும் விடாமல் சத்தம் போட்டுச் சிரித்தான். ஆம்!
ஐ பெருஞ்சிரிப்பு சிரித்தது இதுதான் [; இன்றுதான்] முதல் தடவை. ஆகையால் அதனை அப்படியே என் மனத்தடுக்கில் என்றும் நீங்காதவாறு சேமித்துக்கொண்டேன்.
*