ஐபக்கம் – 010 : முதல் தண்ணீர்

#ஜனவரி12,2024
‘ஐ பிறந்த பதினாறாவது நாள் (அதாவது, 12-01- 2024 இன்று), முதல் தண்ணீர் ஊற்றி தீட்டுக் கழிக்கலாம்’ என்று மருத்துவமனையில் இருக்கும்போதே முடிவு செய்திருந்தோம்.
நானும் மதியும் மட்டும் இங்கே சென்னையில் தனியாக இருப்பதால், ‘எப்படி, யாரைக் கொண்டு தண்ணீர் ஊற்றுவது?’ என்று தெரியாமல், கடந்த நான்கைந்து தினங்களாக நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ளவர்களிடம் கேட்டுவந்தோம். ஒன்று, ஆள் கிடைத்தால் வர நேரமில்லை என்கிறார்கள். அல்லது பணம் அதிகமாக கேட்கிறார்கள். இல்லையென்றால், ஆளே கிடைப்பதில்லை.
என்ன செய்வதென்று புரியாமல் நேற்று காலை வரைக்கும் தேடி அலைந்துவிட்டு, அருகில் இருக்கும் பூக்கடை அண்ணனிடம் போய் கேட்டேன். ”தோ, அந்த சலூன்ல போய் கேளுப்பா… அங்க ஒரு அம்மா வருவாங்க. அவங்க ஊத்துவாங்க’’ என்றார்.
உடனே போய் கேட்டேன். ”அவங்க இன்னைக்கு லீவு, வரமாட்டாங்க. நீங்க நாளைக்கு காலைல 11 மணிக்கு வந்து கூட்டிட்டுப் போங்க. நான் சொல்லி வைக்கிறேன்’’ என்றார், அங்கிருந்த பெண் ஒருவர்.
”எவ்வளவு பணம் கேட்பாங்க?’’
”குழந்தைக்கு தண்ணீ ஊத்தலாம் பணம் கேக்க மாட்டாங்க. நீங்களா எதனா கொடுத்தா வாங்கிப்பாங்க. இல்லனாலும் பரவாயில்ல.’’
ஆச்சரியமாக இருந்தது. ‘இப்படி ஒரு நபரா? அதுவும், ஒருதடவை வந்து தண்ணீர் ஊற்றவே… ஆயிரம், ரெண்டாயிரம் கேட்போர் இருக்கும் இந்தச் சென்னையில்?’ என்று நினைத்துக்கொண்டு வந்து, இன்று காலை எழுந்தது முதல் ஐ’க்கு தண்ணீர் ஊற்றுவதற்கான ஏற்பாடெல்லாம் செய்துவிட்டு, அவரை அழைத்து வருவதற்காகப் போயிருந்தேன்.
சொன்னது போல பதினொரு மணிக்கு தயாராக இருந்தவர், வந்து நாங்கள் நினைத்ததைவிட கூடுதல் அக்கறையோடு [தன் பேரப்பிள்ளைக்கு செய்வது போல] ஐ’க்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு, வீட்டின் எதிரில் இருக்கும் மாடியில் வைத்து அத்தனை நேர்த்தியாக குளிப்பாட்டி விட்டார்.
மனத்துக்கு மிக திருப்தியாக இருந்தது. ‘நன்றி’ கூறிவிட்டு, கையில் இருந்த பணத்தைத் தந்து, ”இத இப்போதைக்கு வச்சிக்கோங்கம்மா… ஒரு மாசம் ஆனதும், எங்களால முடிஞ்சத தர்றோம்’’ என்றேன்.
மகிழ்வோடு பெற்றுக்கொண்டு, ஒரு நாள் விட்டு ஒருநாள் வந்து தண்ணீர் ஊற்றுவதாக சொல்லிவிட்டு, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் என்னென்ன சொல்வார்களோ அதையெல்லாம் நாங்கள் கேட்காமலேயே கூறிவிட்டு, அடுத்த தடவை வரும்போது ஐ’க்கு வெள்ளெருக்கு நாரில் அரணாக்கயிறு செய்து தரச் சொல்லி வாங்கி வருவதாகவும் சொன்னார்.
”சரிங்கம்மா” என்று தலையாட்டிவிட்டு, புறப்படும்போது கேட்டேன். ”உங்க சொந்த ஊரு, எங்கம்மா?’’
”விழுப்புரம் பக்கத்துல ஒரு சின்ன கிராமம்ப்பா’’ என்றார்.
எனக்கு ஏதோ, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த; எம் முரம்பு மண்ணைச் சேர்ந்த ஒருவர் வந்து, ஐ’க்கு முதல் தண்ணீர் ஊற்றி தீட்டுக்கழித்து ஆசிர்வதித்துவிட்டு போனது போல இருந்தது.
*