ஐபக்கம் – 008 : புதுப்புது முத்திரைகள்

#ஜனவரி06,2024
ஐ பிறந்த இந்த பத்து நாளில் அவனிடம் இருக்கும் ஒரு விஷயத்தைக் கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டேன். ஆம்!
அவன் பிறந்த நாளன்று காலையில் சூரிய ஒளி சாளரம் வழியாக வந்து முகத்தில் பட்டதும் தன் கையால் கண்களை மூடிக்கொண்டதை அத்தனை மகிழ்வோடு சொன்னாள் மதி. ”அப்படியா?” என்று நம்ப முடியாதவனாய்க் கேட்டிட்டேன்.
அன்று மாலை பார்வையாளர் நேரத்தில் போயிருந்தபோது, அங்கே வந்திருந்த பலரும் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு தன் காதை மூடிக்கொண்டான் ஐ. வியப்போடு பார்த்து சிரித்துக்கொண்டு, ‘இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறானா? இல்லை, அதுவாக நிகழ்கிறதா?’ என்ற கேள்வியோடு அடுத்தடுத்த நாட்களிலும் கவனித்தேன். சொல்லி வைத்ததுபோல அப்படியே செய்தான்.
உடன் இன்னொன்றையும் கவனித்தேன். ஒவ்வொரு தடவை பால் குடிக்கும்போதும் விரல்களை விதவிதமாக வைத்துக் கொண்டான். பார்க்கையில் அவை ஏதோ முத்திரை காட்டுவது போல இருக்கும். அதுவும் அதற்குமுன் எங்கும் காணாத முத்திரைகளாக அவ்வளவு நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும் (அவற்றில் சிலவற்றை என் நகர்பேசியில் ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறேன். வளர்ந்ததும் காட்டுவதற்காக). ஆம்!
இவ்வாறு என்னை ஒவ்வொரு தடவை அவன் வியத்தும்போதும், சௌந்தர்யா சொன்னது போல, ‘அவனுக்கு சரியான பெயரைதான் வைத்திருக்கிறோம்’ என உள்ளுக்குள் மகிழ்ந்துகொள்வேன்.
இந்த வரிசையில் இன்று, சிறுவயதில் எங்களூரில் நாங்கள் விளையாடுகையில் காட்டும் ‘காயா, பழமா?’ முத்திரையை அவன் காட்டியது கண்டு கொஞ்சம் கூடுதலாகவே வியந்திட்டேன்; மகிழ்ந்திட்டேன். ஆம், ஆம்!
*