சொல்லின்றி எதுவுமற்றவன்! – 153
இது முற்றிலும் புது முயற்சி. இப்படி ஒரு நூல் உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து வந்தது?
இதுபற்றி நூலின் முன்னுரையிலேயே கூறியிருப்பேன். இருந்தாலும் இங்கே சொல்கிறேன். விட்டுவிட்டு மழை பெய்த ஒரு நாளின் மதியப் பொழுதில், கிராமத்திலுள்ள எங்கள் வீட்டின் அருகில் இருந்த முருங்கை மரத்துக்கு, நான்கு வயதான அண்ணன் மகள் குடை பிடித்துக்கொண்டு போய் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். பார்த்துவிட்டு, ”என்ன பாப்பா பண்ற?” என்று கேட்டேன். ”பாத்தா தெரில, முருங்க்கா மரத்துக்கு தண்ணி ஊத்தறன்’’ என்றார்.
உடனே நான், ”அதான் இவ்ளோ மழை பெய்யுதே, எதுக்கு தண்ணி ஊத்தற?’’ என்றேன். அதற்கு அவர், ”நீதான தாத்தா சொன்னாங்கன்னு சொன்ன. வீட்டுக்கு ஒரு முருங்க்கா மரமும், பசுமாடும் இருந்துச்சின்னா… எப்பயும் நம்மள அது பாத்துக்கும்னு. அதான் இந்த முருங்க்கா மரத்த தண்ணி ஊத்தி நான் பாத்துக்கறன்’’ என்றார்.
இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருந்தது. அதுவும், ஐயா என்றோ என்னிடம் சொன்ன சொல்லை, பேச்சுவாக்கில் நான் அவரிடம் சொல்ல, அதை தன் நினைவில் வைத்திருந்து, ‘நம்மை காப்பாற்றும் மரத்தை நாம் காப்பாற்ற வேண்டும்’ என்று எண்ணி தண்ணீர் ஊற்றிய இச்சம்பவம்தான், ஐயா சொன்ன சொற்களை தொகுத்து நூலாக்க வேண்டும், அது பின்னாளில் இதுபோன்று குழந்தைகளுக்கும், அதேநேரம் பெரியவர்களுக்கும் பயன்படும் என்று எண்ண வைத்தது.
[இன்னும்]
*