சொல்லின்றி எதுவுமற்றவன்! – 072
இதுவரை ‘ஐயா’ நூலுக்கு வந்த விமர்சனங்கள் மற்றும் மதிப்புரைகளில் தனித்ததாக எதை சொல்வீர்கள்?
என் கல்லூரி நண்பரின் 85 வயதான பாட்டி ஒருவர், ஐயா நூலை எதேச்சையாக எடுத்து வாசித்துவிட்டு உடனே எனக்கு போன் போட்டு தரச் சொல்லி பேசினார். விடாமல் பத்து நிமிடத்திற்கு மேலாக நூல் குறித்த தன் வாசிப்பனுவத்தை உற்சாகத்தோடு பகிர்ந்தவர், இறுதியாக கண்கலங்கியபடி சொன்னார். ”எனக்கு இதுவரைக்கும் எந்த ஆசையும் இல்ல. இப்போ மொத முறையா ஒரு ஆச. உனக்கு என் கையால ஒருவேள சோறாக்கிப் போடணும். சீக்கிரமா ஒருநாள் வீட்டுக்கு வா’’. கேட்டு நெகிழ்ந்துபோனேன்.
இன்னொடு நண்பரின் மாமியார், ஐயா நூலை வாசித்து அழுததையும், அந்நூலை தன் தலையணை அடியில் வைத்திருந்து தினந்தோறும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அதிலிருக்கும் ஒரு கட்டுரையை வாசிப்பதையும் பார்த்துவிட்டு அழைத்தவர்… தனக்கு இன்னும் நூறு புத்தகங்கள் வேண்டும் என்றும், அதை தன் நண்பர்கள் நூறு பேருக்கு பரிசாகத் தரப்போவதாகவும், இந்நூல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒன்றை செய்வதாகவும் சொல்லி மகிழ்ந்தார்.
இப்போது நீங்களே சொல்லுங்கள். இதையெல்லாம் விட பெரிய விருது ஒன்று இருந்துவிடப் போகிறதா என்ன?
[இன்னும்]
*