ஐபக்கம் – 064 : கண் பேசும் வார்த்தைகள்

#ஜூன்05,2024

ஐ பிறந்து இன்றோடு சரியாக 161 நாட்கள் ஆகின்றன.

வழக்கம் போல காலை முதல் படுக்கையறையில் படுத்திருந்த ஐ’யை, மாலை எதிரில் இருக்கும் மொட்டை மாடிக்குக் கூட்டிப் போய் அரைமணி நேரம் படுக்கவைத்து வேடிக்கைக் காட்டி விளையாடிவிட்டு வந்து நடுவீட்டுக்குள் படுக்க வைத்தோம்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை. திரும்பி திருக்குறள் பலகையைப் பார்த்தான். அப்போதுதான் கவனித்தோம். இன்றைக்கான திருக்குறளை இன்னும் நாங்கள் எழுதிப்போட்டு அவனுக்குச் சொல்லித் தரவில்லை.

உடனே அவனை அள்ளி ஓர் ஆசை முத்தம் தந்துவிட்டுப் போய் இன்றைக்கான, ‘ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து / அழுக்காறு இலாத இயல்பு’ என்னும் திருக்குறளையும், ‘ஒருவன் தன் மனத்தில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பினை ஒழுக்கத்தின் சிறந்த வழியாகக் கொள்ள வேண்டும்’ என்னும் அதற்கான பொருளையும் எழுதிவிட்டு வந்து, ஐயை தூக்கிப் போய் அருகில் நின்றபடி சொல்லிக் கொடுத்தேன்.

மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், முடித்ததும் தன் பொக்கை வாய் காட்டிச் சிரித்துவிட்டு திரும்பி, அவனுக்காக போட்டிருந்த படுக்கையைப் பார்த்தான்.

சட்டெனப் புரிந்துகொண்டவனாய் தூக்கிப் போய் அதில் அவனை படுக்க வைத்தேன். உடனே தன் கை கால்களை ஆட்டி, ‘ஆ… ஊ…’ என்று சத்தமிட்டு விளையாட ஆரம்பித்திட்டான். ஆம்!

யாவற்றையும் அருகில் இருந்த சுவரோரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மதியை பார்த்து மெல்லிதாய் சிரித்திட்டேன். பதிலுக்கு அவளும் அவ்வாறே சிரித்திட்டாள்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=