ஐபக்கம் – 009 : இருமுறை பாடிய பல்லாண்டு

#ஜனவரி10,2024
மனைவியும், மகனும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து இன்றோடு ஆறு நாள் ஆகின்றன. தொடர்ந்து பதினாறு நாட்கள் மருத்துவமனையில் இருந்த மதிக்கு, ஓரளவு வீட்டுச் சூழல் பழகினதும், ஐ’க்கு தந்து வரவேற்ற ‘மகவே வருக’ நூலினை எடுத்து, முதல் தடவையாக கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது அவன் விழித்திருக்கையில் கேட்பது போல வாசித்து வந்தாள்.
[எங்கே மதிக்கு தெரிந்தால் அவள் வயிற்றில் இருக்கும் மகவுக்கும் தெரிந்துவிடுமோ என நினைத்து அவளுக்கும் தெரியாமல் எழுதிய நூல் இது!]
இன்று காலை இறுதி அத்தியாயம் முடித்தவள், நேராக வந்து எழுதிக் கொண்டிருந்த என்னை கூட்டிக்கொண்டு போய் கட்டிலில் படுத்திருந்த ஐ’க்கு அருகில் உட்காரச் சொல்லி, நான்காவது அத்தியாயத்தில் வரக்கூடிய பல்லாண்டு வரிகளை பாடிக் காட்டச் சொன்னாள். செய்தேன்.
உடனே என்ன நினைத்தாளோ, தெரியவில்லை. இன்னொரு தடவை முதலிலிருந்து பாடச் சொல்லி, தனது நகர்பேசியில் பதிவு செய்துகொண்டாள். ஆம்!
‘மகவே வருக’ நூலில் இடம்பெற்று, இன்று இரண்டு தடவை ஐ’க்கும், மதிக்கும் பாடிக் காட்டிய அந்த பல்லாண்டு வரிகள் இதுதான் :
‘எனதன்பு மகவே… இப்பெருமை மிக்க மண்ணில் அவதரித்து, இத்தன்னரும் மொழியை பேசப்போகும் உன் அமுதூறும் நாவுக்கும், எழுதப்போகும் உனது பிஞ்சு விரல்களுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. சுழலும் இந்த பூமியைச் சுற்றித் திரியப்போகும் உன் சின்னக் கால்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. அரிய பல கலைச்செல்வங்களையும், இலக்கண இலக்கியங்களையும் கண்டு வாசித்து மகிழப்போகும் உனது கூர் விழிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. நிகரில் இயற்கையின் சுவைமிகு இசையை கேட்கப்போகும் உன் ஓரிரண்டு செவிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. ஞாலத்திலுள்ள மலர்களின் மணங்களையெல்லாம் நுகரப்போகும் உனது ஒற்றை நாசிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.
எம்மை தாய் தந்தையாக்கிய நன்முத்தே; உன் வாழ்வை விருப்பம் போல வாழ வந்திட்ட உயர்மாணிக்கமே; இந்த எழுத்தாளனுக்கு மகவாய் பிறந்திட்ட பேரிலக்கியமே; இல்லாத சொற்களையெல்லாம் பேசி வியத்தப்போகும் பொற்சிலையே; உம்மோடு சேர்த்து எம்மையும் வளர்த்திடப்போகும் சியமந்தகமே… உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!’
*