அன்பின் உச்சிமுகட்டில் நின்று…

புன்னகைக்க மறந்து, அன்புசெய்ய மறுத்து, எங்கோ எதையோ தேடித்தேடி ஓடிக்கொண்டிருக்கும் அவசர மனிதர்களின் தடம்படாத, வாசம் வீசாத, அன்பின் உச்சிமுகட்டில் நின்று, மனத்தின் அடியாழத்திலிருந்து, யாதொரு பாசாங்கும் எதிர்பார்ப்புமற்று யாக்கப்பட்டவையே இக்கவிதைகள்.
இதில் உறக்கம் தொலைத்தவர்களின் உறக்கமாக, நினைவில் தொலைந்தவர்களின் நினைவாக, சிறு வேண்டலும், வற்புறுத்தலுமின்றி அவையாக தன்னை எழுதிக்கொண்டவைகள் சில.
அன்பின் சுவடறியாது, அதன் வாசம்கூட முகராது, சதா சர்வகாலமும் அன்பென பிதற்றிக்கொண்டிருக்கும் பொய்யர்களை நோக்கி மெல்லமாக, அதேநேரம் மிகக் கூர்மையாக எழுதப்பட்டவை பல.
இதன் ஒவ்வொரு சொற்களிலும் யாரும் யாரையும் காணலாம்; கேட்கலாம்; பேசலாம். மலரின் செளந்தர்ய வாசம், கண்ணீரின் உப்புப் பிசுபிசுப்பு, இதயத்தின் மெல்துடிப்பொலி, இன்னும் இன்னும் இன்னும்.
இரவில் தூங்காதவர்களின் ஏக்கம் எப்படி இருக்கும்? புணர்வில் விருப்பமற்றவளின் நிமிடங்கள் எத்தகையது? சில்லாக்கோலில் குத்துபட்ட எலியின் இறுதிக் கேள்வி என்னவாக இருக்கும்? இருந்தும் இல்லாதோரின் வாழ்க்கை எதை நோக்கியது? சிறு எறும்புக்கும் கேடு நினைக்காத உள்ளத்தில் கூர்கத்தி கொண்டு குத்தினால் என்ன பாடுபடும்?
கேள்விகள் என்பது வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும்தானா? எதற்காக இப்பிறப்பு? எதற்காக வாழ்கிறோம்? எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்? செய்வதெல்லாம் சரியாகத்தான் செய்கிறோமா? செய்யாதவை யாவையும் எப்போது செய்யப்போகிறோம்?
எழுத்தென்பது தார்மீகப் பொறுப்பென்றால்… அதை எழுதும் எழுத்தாளர் எத்தகையவராக இருக்கவேண்டும்? மனம் கேட்கும் கேள்விகள் எப்போதும் விசித்திரமானவை. சில நேரம் வேடிக்கையானவை.
எப்போதும் அறிவுத்தளத்திலிருந்து உழன்றுகொண்டிருக்கும் நாம்… நாளின் கொஞ்சநேரமாவது மனத்தளத்திலிருக்கும் வினாக்களுக்கு செவிசாய்க்க வேண்டாமா? எதிர்பார்ப்பற்ற அன்புக்கும் உறவுக்கும் எப்படி இவ்வுலகம் மதிப்பளிப்பதில்லையோ, அப்படித்தான் மனத்தளத்திலிருந்து எழும் கேள்விகளுக்கும் மதிப்பளிக்கத் தவறுகிறது.
மதிப்பெண்களுக்காக மட்டும்தான் கேள்விகள் என்ற புழுத்துப்போன எண்ணத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் தூக்கிக்கொண்டு திரியப்போகிறோம்? தாமதியாமல் தூர வீசிவிட்டு, மனிதத்துக்கான திறப்புசாவிகள்தான் கேள்விகள் என்ற மாசற்ற உயரெண்ணத்தை உடுத்திக்கொள்வோம். இக்கவிதைகளோடு சேர்ந்து நம் வாழ்வும் வண்ணமாகும்.
வாழ்த்துகளுடன்,
வடிவரசு.
(கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல் – நூலுக்கு எழுதிய என்னுரை)